வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர், “ஷேக் ஹசீனாவை அதிகாரத்தில் இருந்து அகற்றிய விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டதாக எந்த அறிக்கைகள் அல்லது வதந்திகள் இருந்தாலும் – அவை அனைத்தும் தவறானவை. அது உண்மையல்ல. இது வங்கதேச மக்களின் ஒரு தேர்வு. வங்கதேச அரசாங்கத்தின் எதிர்காலத்தை வங்கதேச மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் எழுமானால் நிச்சயமாக நாங்கள் பதில் கூறுவோம். அந்த அடிப்படையிலேயே தற்போது நான் பதில் அளித்துள்ளேன்” என்றார்.