வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா?  – விதுரன் 

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் எதிர்வரும் 23 – 26ஆம் திகதி வரை உள்நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.
இவ்வாறு தங்கியிருக்கும் காலத்தில் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், தலைநகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.
தொடர்ந்து, கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், தலதா மாளிகைக்கச் செல்லவுள்ளதோடு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் அவர் செம்மணிப்புதைகுழியைப் பார் வையிடுவதோடு சிவில் சமூகப்பிரதிநிதிகளையும், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதி
நிதிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
இதேவேளை, உயர்ஸ்தானிகர் போரின் கோரமுகமாயுள்ள முல்லைத்தீவின் முள்ளிவாய்க் காலுக்கு விஜயம் செய்யுமாறுகோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவு கள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்குக்கு கடித மொன்றை அனுப்பிவைத்திருந்த போதிலும், அதுபற்றிய எந்தப் பதிலளிப்புக்களும் இன்னமும் செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கை இலங்கை அரசாங்கம் அழைக்க வேண்டியதன் காரணத்தினை நாம் சற்று ஆழமாக பார்க்க வேண்டியுள்ளது.
அநுர அரசாங்கத்தின் அழைப்பின் நோக்கம்
தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியுடன் பதவி யில் அமர்ந்துள்ள அநுரகுமார திசாநாயக்க தலை மையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப் பெடுத்த இதுகால வரையிலான ஏழு மாதங்களுக்குள் இரண்டு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளை முழுமையாகச் சந்தித்து விட்டது. இந்த இரண்டு அமர்வுகளில் முதலாவது அமர்வில் ஐ.நா.வுக்கான இலங்கையின் வதி விடப்பிரதிநிதி ஹிமாலி அருணத்திலக்க, உயர்ஸ்தானிகரின் ஆரம்ப உரையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பற்றி வலியுறுத்திய போதும், அதன்பின்னர் வாய்மொழி மூலமான சமர்ப் பணத்தின் போது கூறப்பட்ட விடயங்களையும் முழுமையாக நிராகரித்தார்.
உள்ளக தேசிய பொறிமுறையை அமைத்து அதற்கமைவாகவே அரசாங்கம் செயற்படப் போவதாகவும் அறிவித்தார். மனித உரிமைகள் மீறப்பட்ட நிகழ்வுகள் திட்டமிட்ட பாரபட்சமான குற்றச்சாட்டுக்கள் என்றும் உரைத்தார்.
இரண்டாவது அமர்வில், இலங்கையில் இருந்து சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினரும் மேற்படி கருத்தினையே கூறினார்கள். அத்துடன் தாம் முறைமை மாற்றத்தினை மையப்படுத்திய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமக்கு வாக்களித்த மூவின மக்களுக்கும் பார பட்சமின்றி செயற்படுவதாகவும் அறிவித்தார்.
அத்துடன், ஐ.நா.மனித  உரிமைகள் பேரவையின் அறிக்கை, உயர்ஸ்தானிகர் சுட்டிக் காட்டிய மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும் வெளிநாட்டு விசாரணையாளர்கள் உள்ளிட்டவர்களை அனுமதிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந் தார்.
அவ்வாறு கடந்தகால அரசாங்கங்களைப் போன்றே பிரதிபலித்தவர்கள் திடீரென்று எதற்காக உயர்ஸ்தானிகரை அழைத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுவது நியாயமானது. அநுர அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் கடந்தகால அரசாங்கங்களைப் போன்றல்லாது, ‘நீருக்கால் நெருப்பை கொண்டு செல்லும்’ தன்மையைக் கொண்டது. ஆகவே அவ்விதமானதொரு செயற் பாட்டைத் தான் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விடயத்தில் கையாள்வதற்கு முனைகின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடருடன் இலங்கையில் நல்லிணக் கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ள  தீர்மானம் முடிவுக்கு வரவுள்ளது. அத்தீர்மானத்தினை தொடர்ந்தும் பேணு வதற்காக புதிய தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சியில் பிரித்தானியா களமிறங்கியுள்ளது. அநுர அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் மீண்டும் புதிய தீர்மானம் கொண்டுவருவதை தடுப்பதென்றால் பிரித்தானியாவுடனோ அல்லது கனடாவுடனோ அணுகுமுறை ரீதியாக கையாள முடியாதவொரு விடயம்.
ஆகவே, தான் தாங்கள் வெளிப்படை யானவர்கள், இங்கே அமைதியாக மக்கள் சகோ
தரத்துவத்துடன் இருக்கின்றார்கள் என்ற விம்பத்தை உயர்ஸ்தானிகருக்கு காண்பிப்ப தோடு பொருளாதார வங்குரோத்திலிருந்து மீள் எழவேண்டியதுதான் முதன்மையான விடயம் என்பதையும் வலிந்தூட்டுவதற்
கான முயற்சியாகவே உயர்ஸ்தானிகருக்கான அரசாங்கத்தின் அழைப்பினை நோக்க வேண்டி
யுள்ளது.
மேலெழுந்த போர்க்கொடி
கடந்த காலங்களில் இலங்கைக்கு வலிந்து விஜயங்களை மேற்கொண்ட நவநீதம்பிள்ளை அம்மையாராக இருக்கலாம், செயிட் அல்ஹு சைனாக இருக்கலாம் இவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வீதிக்கு இறங்கியவர்கள் தென்னிலங்கை சிங்கள் தேசியவாத சக்திகளே. ஆனால் வொல்கர் ரேக்கின் வருகையை எதிர்ப்பவர்கள் நீதியை எதிர்பார்த்து காத்திருந்து களைத்துப்போன  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே.  அவர்கள் எதிர்ப்பதில் நியாயம் இருக்கின்றது. அவர்களுக்கு எஞ்சிய நம்பிக்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிடம் தான் உள்ளது. அந்த எதிர்பார்ப்புக் கூட வோல்கர் டேர்கின் வருகையால் கலைந்துபோய்விடக்கூடாது என்பதே அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாகின்றது.
அதாவது, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் எதிர்வரும் செப்டெம்பருடன் நிறைவுக்கு வருகின்றது. அது நீட்டிக்கப்படுவதற்கான எந்த உத்தரவாதங்களும் தற்போது வரையில் இல்லை.
அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் சாட்சியங்களை திரட்டல் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகள் அனைத்தும் முழுமையாக முடங் கும் என்பது அவர்களுக்குள்ள முதலாவது அச்ச மாக உள்ளது.
இரண்டாவதாக, உயர்ஸ்தானிகர் இலங்கை வருவதும் அரசாங்கத்தின் கண்துடைப்பு கட்ட மைப்புக்களான வலிந்து காணாமலாக்கப்பட்ட வர்களுக்கான அலுவலகம், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கான சட்டமூலம் உள்ளிட்ட அரசாங்கம் காண்பிக்கும் மாயைக்குள் சிக்கினால் நிலைமைகள் மோசமாகும்.
குறிப்பாக, உயர்ஸ்தானிகர் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய செப்டெம்பரில்  வெளியிடவுள்ள எழுத்துமூலமான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப் படுத்தும் என்ற அச்சமும் காணப்படுகின்றது.
இந்த விடயங்களின் அடிப்படையில் தங்களது கரிசனைகளை வெளியிட்டே உயர்ஸ் தானி கரது இலங்கை விஜயத்தை பிற்போடுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்குவலுச்சேர்க்கும் வகை யில், 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வ தேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட தரப்பினர் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்திருந்தனர். ஆனால், உயர்ஸ்தானிகரின் பக்கத்திலிருந்து எவ்விதமான பதிலளிப்புகளும் இதுவரையில் கிடைத்திருக்கவில்லை என்பது ஏமாற்றம் தான்.
சொல்வரா? செய்வாரா?
இவ்வாறான நிலையில் இலங்கை வரும் உயர்ஸ்தானிகர் ஆகக்குறைந்தது, இலங்கையில் மனித உரிமைகள்,மனிதாபிமானச் சட்ட மீறல்கள் நிகழ்ந்தன. அதற்கு அரசாங்கம் பொறுப் புக்கூற வேண்டும் என்பதை அரச தரப்புச் சந்திப்புக்களின்போதும், இலங்கையிலும் பகிரங் கமாக வலிறுத்துவாரா?
செம்மணி மனிதப் புதைகுழு உட்பட கொக்குத்தொடுவாய், மன்னார், திருகோணமலை கீழறை சித்திரவதை முகாம், உட்பட அனைத்து இடங்கள் குறித்த பகுப்பாய்வுக்கு அரசுக்கு அழுத்தமளிப்பாரா? சர்வதேச பிரசன்னத்தைக் கோருவாரா?
இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற் றிட்டத்தினை வருடமொன்றுக்காவது நீடித்து அதன் அங்கத்தவர்களை இலங்கைக்குள் பிரவேசிக்க அரசைக் கோரும் அதேநேரம் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் இதுகாலவரையிலான சேக ரிப்பை வெளிப்படுத்துவாரா?
படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சாட்சியங்கள் உள்ள கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களின் விசாரணைகளை, வழக்குகளை முன்னெடுப்பதற்கு அழுத்தங்களை அரசுக்குப் பிரயோகிப்பாரா?
உயிர்வாழும் உரிமை, சுதந்திரமான, சுயா தீனமான நடமாட்டம், கருத்துச் சுதந்திரம், சொந்த நிலங்களில் வாழும் உரிமை, கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்களுக்கு அரசாங்கத்தின் உறுதிமொழி களை பெற்றுக்கொள்வாரா?
ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் இணைந்த வட,கிழக்கில் சுயநிர்ணயத்துடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை இனப் பிரச்சிக்கான முற்றுப்புள்ளியாக வைத்து கோரும் தமிழ் மக்களின் நியாயத்தை எடுத்துரைத்து ஒற்றையாட்சி நீக்கப்பட்டு தமிழ் மக்களையும் அரவணைக்கும் புதிய அரசியலமைப்பொன்றுக்கு வலியுறுத்துவாரா?
இலங்கை விஜயத்தில் நேரில் காணும் சாட்சிகளை யும், ஆதாரங்களையும் தன்னுடைய செப்டெம்பர் அறிக்கையில் உள்ளீர்த்து காத்திரமானதொரு அறிக்கையையும், பரிந்துரைகளையும், முன்வைப் பாரா?
இப்படி, எதிர்பார்ப்புக்கள் நிறைந்த பல கேள்விகள் ஐ.நா.மனித உரிமைகள் உயிர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடத்தில் உள்ளன. இவை அனைத்துமக்கும் அவரது இலங்கை விஜயமும் ஈற்றில் உரைக்கும் சொற்களும், செயற்பாடுகளும் தான் பதிலளிக்கப்போகின்றன.