வேளாண் சட்ட எதிர்ப்பு: முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

423 Views

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்வரும் 8ஆம் திகதி அகில இந்திய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு பாரதிய கிசான் சங்கம் என்ற விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு கடந்த செப்டெம்பர் மாதம் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற நடைமுறையை இந்தச் சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “எங்களுடைய போராட்டத்தை தற்போதைய நிலையிலிருந்து மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். மத்திய அரசு தனது 3 சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை நாங்கள் பின்வாங்கப் போவதில்லை.” என்றார்.

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை 05ஆம் திகதி நடைபெற்றது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி விஞ்ஞான்பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

விவசாயிகள் நடத்திவரும் இந்தப் போராட்டத்திற்கு தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள் உட்பட 8 எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர், ‘ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு’ எனக் கூறியுள்ளார்.

இதேவேளை மோடி அரசின் புதிய விவசாய சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடிவரும் இந்த விவசாயிகள் மீதான இந்திய பாதுகாப்புப் படையினரின் அணுகுமுறை குறித்து கனடா பிரதமர் ட்ரூடோ கவலை தெரிவித்ததோடு, தனது அரசு எப்போதும் அமைதியான போராட்டங்களுக்கு ஆதரவளித்து வருவதாகவும் கூறினார். ட்ரூடோவின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் ஆட்சேபம் தெரிவித்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply