வேளாண் சட்டங்களை  இரத்து செய்யக்  கோரி முழுஅடைப்பு -அமைதியாக போராடுமாறு விவசாய சங்கங்கள் கோரிக்கை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறக்கோரி இன்று காலை தொடங்கிய முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில், அமைதியைக் கடைப்பிடிக்குமாறு விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களை இரத்துச் செய்யக்   கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே  பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து குடியரசு தினம் அன்று வாகணப்பேரணியும் நடத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட வன்முறையில் பல விவசாயிகள் உயிரிழந்ததோடு மேலும் பலா் காணாமல் போனார்கள்.

இந்நிலையில், குறித்த சட்டங்களை இரத்து செய்யும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவித்து விவசாயிகள் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்  ஒரு பகுதியாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு சம்யுக்த் விவசாயிகள் மோர்சா (எஸ்.கே.எம்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்று காலையிலேயே போராட்டத்தைத் தொடங்கினார். மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் பொதுப் போக்குவரத்து வாகங்கள் இயங்கவில்லை. பஞ்சாபில் மட்டும் 120 இடங்களில் மறியல் நடைபெற்றுவருகிறது.

அதைப் போல் தலைநகர் டெல்லியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் டெல்லியில் 5 பகுதிகளைப் பதற்றமான பகுதிகளாக அடையாளம் கண்டு அப்பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.