வெளிப்படையான இனத்துடைப்பு உலகம் என்ன செய்யப்போகிறது?

421 Views

ஈழத் தமிழர்கள்  மீதான முள்ளிவாய்க்கால் இனஅழிப்புச் செயற்பாட்டின் 12ஆவது ஆண்டு தொடக்கம் பெற்றதும் பெறாததுமாக 08.01.2021 இல் இன்றைய சிறீலங்கா அரசாங்கம்  யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் 2018 முதல் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு எல்லாத் தமிழர்களதும் போற்றுதலுக்குரியதாகத் திகழ்ந்து வந்த முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுத்தூபியை தனது ஏவலாளார்களான யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் இன்றைய துணை வேந்தரதும் நிர்வாகக் குழுவினதும் துணை கொண்டு இடித்துத் தள்ளி இனத்துடைப்புச் செய்துள்ளது. 10.01.1974இல் நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை வன்முறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்கள் மீது பண்பாட்டு இனஅழிப்புச் செய்து பதினொரு தமிழர்களை உயிரிழக்கச் செய்தமையே ஈழத்தமிழ் மக்களின் ஆயுத எதிர்ப்பின் தொடக்கமானது என்பது வரலாறு. இன்று 47 ஆண்டுகளாகியும் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாக சிறீலங்கா எவ்வித அச்சமுமின்றி பண்பாட்டு இனஅழிப்பைத் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு இன்றைய சம்பவம் சான்றாகிறது.  

ஈழத்தமிழர்கள் நடுகல் வழிபாட்டு முறைமையினைத் தமது பண்பாடாகக் கொண்டவர்கள். அந்த வகையில் இந்தச் செயல் வழிபாட்டுரிமையையும், பண்பாட்டு உரிமையையும் இல்லாதொழிக்கும் மனித உரிமை வன்முறையாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளத்தில் நினைந்து போற்றுதல் என்னும் மனிதசிந்தனை உரிமையையும் இல்லாதொழிக்கும் மிகப்பெரிய மனிதாயத்திற்கு எதிரான குற்றமாகவும் திகழ்கிறது.

இது  ஒரு வெளிப்படையான இனத்துடைப்புச் செயற்பாடு என்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பின் இனத்துடைப்பு குறித்த S/ 1994/674 இலக்க விளக்கத்தில் காணலாம். “ஒரு குறித்த புவியியல் நிலப்பரப்பில் இன்னொரு இன அல்லது மத மக்களை வன்முறைகள் மூலமும் பயங்கரவாதத்தின் வழியாகவும் வெளியேற வைப்பதற்கான திட்டமிட்ட கொள்கைகளை வரைந்து கொள்ளுதல்” என இனத்துடைப்பு என்றால் என்ன என்பதை தெளிவாக ஐக்கிய நாடுகள் சபை விளக்கியுள்ளது. அத்துடன் அத்தகையோரின் சொத்துக்களை அழித்தலும் இனத்துடைப்பே என்பதையும் இவ்விளக்கம் உள்ளடக்கியிருக்கிறது. கூடவே அவ்விளக்கம் இனத்துடைப்பு மனிதாயத்திற்கு எதிரான குற்றமாகவும், யுத்தக் குற்றமாகவும், கருதப்பட்டு இனஅழிப்பு ஒழிப்பு மரபுசாசனத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் மேலதிக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இச்செயற்பாட்டை சிறீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல் உலகம் அனைத்துலகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டிய நேரமிது.

இதனைச் செய்வதற்கு உடந்தையாக இருந்த சிறீலங்காவின் ஏவலாளரான யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களையும் அவரது நிர்வாகக் குழுவையும் இனத்துடைப்புக் குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த குற்றவாளிகள் என்ற வகையில் பதவி விலத்த உலக நாடுகளும் அமைப்புக்களும் சிறீலங்காவை வற்புறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மதிப்புக்குரிய எடப்பாடி பழனிச்சாமி உட்பட பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைமைகள் வரை முழுத் தமிழகமுமே இந்தச் செயலைக் கண்டித்துள்ள நிலையில், அவர்களைப் பதவி விலக்கலே முழுத்தமிழினத்திற்கும் சிறிதளவாவது அமைதியை அளிக்கும்.

ஈழத்தமிழர்கள் தங்கள் மேல் நடாத்தப்படும் இனஅழிப்பு, பண்பாட்டு இனஅழிப்பு, இனத்துடைப்பு என்பவற்றிக்கு சனநாயக வழிகளில் போராடுவதைத் தடுக்கும் நோக்கிலேயே ஈழத்தமிழர்களின் நிர்வாகத்தினை எந்த இராணுவ அதிகாரிகள் அவர்களை இனஅழிப்புச் செய்தார்களோ அவர்களின் நிர்வாகத்தின் கீழேயே இன்றைய சிறீலங்கா ஜனாதிபதி செயற்படுத்தி வருகிறார் என்பது உலகறிந்த விடயம். கோரோனாக் காலத்தைக் கூட எவ்வாறு தனது இனழிப்பு இராணுவத் தலைமைகளை அனைத்துலகச் சட்டங்களிலிருருந்து காக்க இன்றைய சிறீலங்கா ஜனாதிபதி பயன்படுத்துகிறார் என்பதை அனைத்துலக நீதிக்கும் அமைதிக்கும் பாடுபடும் அமைப்புக்கள் உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்றன.

ஆனால்  யார் எம்மை என்ன செய்யலாம் என்னும் சர்வாதிகார உணர்வுடன் சிறீலங்கா ஜனாதிபதி சிறீலங்கா, ஒருஇன- ஒருமொழி – ஒருமத நாடு என்னும் காட்டுமிராண்டித்தனமான சிங்கள பௌத்த பேரினவாதத்தை தனது சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்றக் கொடுங்கோன்மையாலும், படைபல நிர்வாக ஆட்சியாலும் ஈழத்தமிழர்களுக்குச் சட்டவாட்சி மறுக்கப்பட்ட நிலையில் முன்னெடுக்கிறார்.

இந்த இன்றைய சூழலில் உலகம் என்ன செய்யப் போகிறது? உலகத்தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளால், சரியானதைச் சரியான முறையில், சரியான நேரத்தில் செய்ய வைப்பதிலேயே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீட்பு நடைமுறைச் சாத்தியமாகும்.

Leave a Reply