வீழ்ச்சிப் போக்கில் சுகாதாரத்துறை – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்கள் பல்வேறு துறைகளிலும் பின்தங்கிய வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளமை தெரிந்ததாகும். இவற்றுள் சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகின்றது.பெருந்தோட்ட சுகாதார நிலைமைகள் நீண்ட காலமாகவே திருப்தியற்ற வெளிப்பாடுகளை பிரதிபலிக்கின்றன.

இத்துறையின் அபிவிருத்தி கருதி அவ்வப்போது சிற்சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் உரிய சாதக விளைவுகள் இன்னும் கிடைப்பதாக இல்லை. தோட்டப்புற வைத்தியசாலைகளும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்ற ஒரு போக்கு காணப்படுகின்றது.

Puthukudiyirupu ponnampalam hospital வீழ்ச்சிப் போக்கில் சுகாதாரத்துறை - துரைசாமி நடராஜாஇந்நிலையில் தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று சிறப்பான சுகாதார சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் அண்மையில் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு சமூகம் திடகாத்திரமான சமூகமாக உருவெடுப்பதால் சாதக விளைவுகள் பலவற்றையும் பெற்றுக் கொள்வதற்கு அது உந்துசக்தியாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.இந்த வகையில்

திடகாத்திரமான சமூக உருவாக்கத்திற்கு அடித்தளமாக சுகாதாரத்துறை விளங்குகின்றது என்றால் மிகையாகாது.

எனினும் பெருந்தோட்ட மக்கள் சிறந்த சுகாதார சேவையினைப் பெற்றுக் கொள்வதென்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.19 ம் நூற்றாண்டில் இம்மக்கள் இலங்கையில் காலடி எடுத்து வைத்த காலந்தொட்டே சுகாதார நிலைமைகள் அபிவிருத்தி போக்கினை வெளிப்படுத்தாது பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் பலரும் தமது விசனப்பார்வையினை செலுத்தி வருகின்றனர்.

பிரித்தானிய காலனித்துவத்தின் போது பெருந்தோட்டத்துறை மக்களின் சுகாதார வசதிகள் அனைத்தும் ஆங்கிலேய பெருந்தோட்ட செய்கையாளர்களால் பொறுப்பேற்கப்பட்டிருந்தன.ஆயினும் குடிப்பெயர்வின் பின்னரான ஆரம்ப கட்ட பெருந்தோட்ட வாழ்க்கையில் இம்மக்களின் சுகாதார நிலைமைகள் மிகவும் இழிவானதாகக் காணப்பட்ட நிலையில், பிரித்தானிய பெருந்தோட்ட செய்கையாளர்கள் தவிர்ந்த சில நிறுவனங்களும் இவர்களது சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கான பங்களிப்புக்களை வழங்கின.

Upcournty வீழ்ச்சிப் போக்கில் சுகாதாரத்துறை - துரைசாமி நடராஜாமுக்கியமாக நோயுற்ற நிலையிலிருந்த அநேகமான தொழிலாளர்கள் பிரித்தானிய பெருந்தோட்ட செய்கையாளர்களால் கவனிக்கப்படாமையாலும், மிகவும் கடுமையாக நடத்தப்பட்டமையாலும் இலங்கையின், கண்டியில் இயங்கி வந்த friend in Need society இன் வைத்தியசாலை அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை பாரபட்சமின்றி வழங்கியதாக 1965 ம் ஆண்டு தகவலொன்று வலியுறுத்துகின்றது.மேலும் 19 ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இவர்கள் மத்தியில் காணப்பட்ட சமூக, பொருளாதார காரணிகளும், இவர்களுக்கு எதிரான அரசியல் பாரபட்சங்களும் இவர்களின் சுகாதார வாழ்க்கையில் இன்னும் அதிகமான பாதிப்புக்களை கொண்டு வந்தன.

முக்கியமாக தோட்டங்களில் இவர்களது உழைப்பு ஆங்கிலேய பெருந்தோட்ட செய்கையாளர்களால் அளவுக்கதிகமாக சுரண்டப்பட்டமையும், அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உணவு வகைகள் சுகாதாரமற்றவையாகவும், போஷாக்கற்றவையாகவும் காணப்பட்டமையும் இவர்களது உடல்நிலையில் மேலும் பாதிப்புக்களைக் கொண்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டல்கள் இருந்து வருகின்றன.

பெருந்தோட்ட மக்களின் வேலைப்பளு, அவர்களின் நலன்களைப் புறந்தள்ளி உழைப்பை மட்டுமே உறிஞ்சுகின்ற முதலாளித்துவத்தின் போக்குகள் என்பன அம்மக்களை நோயாளர்களாக்கி சுகாதாரத் தேவையை அதிகப்படுத்தியது.இந்தியத் தமிழ் தொழிலாளர் இங்கு குடியேற்றப்பட்ட தோட்டங்கள் தொலைதூரத்தில் அமைந்திருந்தன.இதனால் இவர்கள் ‘கிணற்றுத் தவளைபோல ‘ தோட்டங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அத்தோடு இவர்களின் பல்வேறு தேவைகளையும் தோட்டங்களுக்குள்ளேயே பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு நிலை காணப்பட்டது.வாடகையற்ற குடியிருப்பு, இலவச மருத்துவ விநியோகம், வைத்தியசாலை,பிரசவ விடுதி, குழந்தை பராமரிப்பு நிலையங்கள் போன்ற வசதிகள் இவ்வாறு செய்துகொடுக்கப்பட்ட வசதிகளுள் சிலவாகும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளதோடு, எனினும் இவ்வசதிகள் ஒருபோதும் ஆகக்குறைந்த மட்டத்திற்கும் மேலாக இருக்கவில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சட்டங்கள் உருவாக்கம்

பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாகவே சுகாதார ரீதியான சவால்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் இச்சவால்களைக் களைந்து சிறந்த சுகாதார சேவையினை இம்மக்களுக்காக பெற்றுக் கொடுக்கும் நோக்கில் காலப்போக்கில் சட்டங்கள் பலவும் உருவாக்கப்பட்டன.எனினும் இச்சட்டங்கள் எந்தளவுக்கு தொழிலாளர்களின் சுகாதார மேம்பாட்டிற்கு வலுவூட்டின என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆரம்ப காலத்தில் பெருந்தோட்ட மக்கள் நோய்வாய்ப்படும் நிலைமைகள் இங்கு அதிகரித்து காணப்பட்டன.ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் வைத்தியசாலைகளில் இறக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.இந்நிலையில் தொழிலாளர்கள் சுகவீனமுற்றுள்ள காலப்பகுதியில் அவர்களுக்கான இருப்பிடவசதி, உணவு, வைத்திய வசதி போன்ற சில குறைந்தபட்ச வசதிகள் செய்து கொடுக்கப்படுவதனை 1865 ம் ஆண்டு சேவை ஒப்பந்தச் சட்டம் உறுதிப்படுத்தியது.

தொழிலாளர்களின் சமூக நலனிற்கு தொழில் வழங்குநரே பொறுப்பாகுமென்று 1984 ம் ஆண்டு 14 ம் இலக்கச் சட்டம் விதித்தது.தொழிலாளரிடையே காணப்பட்ட உயர்ந்த இறப்பு விகிதங்கள்,உடல்நலக் குறைவுகள் என்பவற்றை கவனத்திற் கொண்டு ஆகக்குறைந்த மருத்துவ வசதிகளாவது தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்கப்படுவதை இச்சட்டம் வலியுறுத்தியது.

சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுவதையும் இச்சட்டம் கட்டாயமாக்கி இருந்தது.எனினும் தோட்ட முகாமையாளர்களர்கள் இச்சட்டத்தின் விதிகளை அமுலாக்குவதில் உரிய கரிசனையை காட்டத் தவறி இருந்தனர்.இதனால் இச்சட்டத்தை அமுல்படுத்திய பின்னரும் தொழிலாளர்களின் இறப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி நிலையினை அவதானிக்க முடியவில்லை.

upcountry11 வீழ்ச்சிப் போக்கில் சுகாதாரத்துறை - துரைசாமி நடராஜாதொழிலாளருக்கான மருத்துவ நலன் திட்டங்களை நிதிப்படுத்துவதற்கும், முகாமை செய்வதற்கும் அரசாங்கமே பொறுப்பாகுமென்று தோட்டக் கம்பனிகள் தொடர்ச்சியாகவே வாதிட்டு வந்த நிலையில் 1880 ம் ஆண்டு 17 ம் இலக்க மருத்துவ தேவைகள் சட்டத்தின் கீழ் இப்பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.1912 ம் ஆண்டு 9 ம் 10 ம் இலக்க மருத்துவ உதவிச்சட்டங்கள் முக்கியத்துவம் மிக்கனவாக விளங்குகின்றன.1912 ம் ஆண்டு சட்டம் ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் முறையான பராமரிப்பு, போஷாக்கு என்பவற்றிற்கு தோட்ட முகாமையாளரே பொறுப்பு என்பதனை வலியுறுத்தியது.

தோட்டங்களில் காணப்படும் சுகாதார வசதிகளையும், தோட்ட மக்களுக்கான சமூகநலன் வசதிகளையும் அரசாங்க மாவட்ட வைத்திய அதிகாரிகள் மேற்பார்வை செய்வதற்கும் இச்சட்டம் இடமளித்தது.மேலும் தோட்டங்களில் மலசல கூடங்களை அமைப்பதற்கும், வடிகால் அமைப்புக்களை திருத்துவதற்குமான சட்டவிதிகளை உருவாக்குவதற்கும் இச்சட்டம் அனுமதி வழங்கியது.1941 ம் ஆண்டு பிரசவ நன்மைகள் சட்டம் தொழிலாளர் நலன்பேணும் மற்றொரு சட்டமாக விளங்குகின்றது.

ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பல்வேறு சமூகநலன் திட்டங்களை அவ்வப்போது நாட்டு மக்களுக்கு வழங்கிவந்த போதும் தோட்ட மக்களால் இந்த நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியாதவொரு நிலையே காணப்பட்டது.சுகாதாரம், மருத்துவம்  மற்றும் கல்வி உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களும் இதில் உள்ளடங்கும்.

சமகாலத்திலும் கூட இந்த நிலைமையினை எம்மால் அவதானிக்க முடிகின்றது.தோட்டமக்கள் தொடர்ச்சியாக தோட்ட முகாமைத்துவத்தின் பிடிக்குள் சிக்குண்டு தங்கியிருக்கும் நிலையில் அவர்களின் நலன்கள் பலவும் மழுங்கடிப்பிற்கு உள்ளாகும் நிலையே மேலெழுந்து காணப்படுகின்றது.இதேவேளை தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டதன் பின்னர் தோட்ட மக்களுக்கு சமூகநலன் சேவைகளை வழங்குவதில் ஓரளவு அக்கறை காணப்பட்டதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும்  இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இதேவேளை தோட்டப்புற வைத்தியசாலைகளை எடுத்துக் கொண்டால் அது தொழிலாளர்களின் சுகாதார மேம்பாட்டிற்கு கை கொடுக்கும் ஒன்றாக காணப்படவில்லை.பயிற்சிபெற்ற வைத்தியர்கள், தேவையான மருந்து வகைகள், நோயாளர்களுக்கான ஏனைய வசதிகள் என்பன இங்கு பெரும்பாலும் இல்லாத ஒரு நிலைமையே காணப்படுகிறது.

பல தோட்டங்களில் வைத்தியசாலைகள் பெயரளவிலேயே இயங்கிவரும் நிலையில் தொழிலாளர்களின் துன்பம் இரட்டிப்பாகியுள்ளது.கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களில் தொழிலாளர்களின் நிலைமைகள் மிகவும் மோசமாகியுள்ளன.இங்குள்ள தோட்டப்புற வைத்தியசாலைகள் உரிய வசதியின்றி காணப்படுவதால் நோயாளர்களை சிகிச்சைக்காக நகர்ப்புற வைத்தியசாலைகளுக்கு அழைத்துச்செல்ல வேண்டியுள்ளது.

எனினும் நகர்ப்புற வைத்தியசாலைகள் தொலைதூரத்தில் இருப்பதனாலும்,பாதைச் சீர்கேடு உள்ளிட்ட பல காரணங்களினாலும் நகர்ப்புற வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அழைத்துச் செல்வது இலகுவான காரியமாக தென்படவில்லை.இந்நிலையில் பல தோட்டங்களில் நோயாளர்களை அழைத்துச் செல்வதற்கான அம்பியூலன்ஸ் வண்டி வசதிகள் காணப்படாமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் வேலைத்திட்டம் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டது.தொழிலாளர்களுக்கு சுகாதார மற்றும் மருத்துவ தேவைகளை உரியவாறு பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாக இருந்தது.எனினும் இந்நடவடிக்கை முழுமைபெறாது சில வைத்தியசாலைகளை மட்டுமே அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.இந்நிலையில்  நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்று பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தும் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் அண்மையில் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் சுமார் 500 வைத்தியசாலைகள் காணப்படுகின்றன.அதில் 44 வைத்தியசாலைகளை மாத்திரமே அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.கடந்த வருடத்தில் 59 வைத்தியசாலைகளுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தும் இன்னும் அரசாங்கம் பொறுப்பேற்காதுள்ளது.இன்னும் தோட்ட மருத்துவ உதவியாளர்களிடமே தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதனால் ஏனைய பிரதேசங்களைப் போன்று தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து  எம்.பி.பி.எஸ் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் இராதாகிருஸ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இக்கோரிக்கை வரவேற்கத்தக்கதாகும்.இந்நிலையில் தோட்டப்புற வைத்தியசாலைகளை  அரசாங்கம் உடனடியாக பொறுப்பேற்று சிறந்த சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.அத்தோடு இம்மக்களை தொடர்ந்தும் ‘மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ” நோக்குவதை அரசாங்கம் தவிர்ப்பதும் மிகவும் அவசியமாகும்.இல்லையேல் பாதக  விளைவுகளுக்கு அது அடித்தளமாகும்.