சுகாதாரம் என்பது அடிப்படை மனித உரிமையாகும். எனினும் இந்த உரிமை மலையக மக்களுக்கு இலகுவில் கிடைப் பதில்லை. பல உரிமைகளையும் போராடி பெறவேண்டிய நிலையில் உள்ள மலையக மக்களுக்கான சுகாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சி பாதையிலேயே செல்கிறது. காலனித்துவ ஆட்சிக் காலப்பகுதியில் மலையக மக்களின் சுகாதார நிலைமைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்கள் சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலங்களில் கட்டம் கட்டமாக வீழ்ச்சியடையத் தொடங்கின. 1930களில் இலங்கையின் பெரும் பான்மை மக்களின் பிரதேசங்களை விடவும் ஒப்பீட்டளவில் சிறந்த சுகாதார சேவைகளை உடையவர்களாக பெருந்தோட்ட மக்கள் காணப்பட்டனர்.
அந்நிலைமை 1970இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் மாற்றமடைந்தது. அவர்களுக் கான குடியுரிமை மற்றும் வாக்குரிமை என் பவை உறுதி செய்யப்பட்ட பின்னரும், 1972ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் அரச பெருந் தோட்டயாக்கம், மற்றும் ஜனதா எஸ்டேட் அபிவிருத்தி சபை என்பனவற்றின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னரும் பெருந்தோட்ட சுகாதார சேவைகள் அபிவிருத்தி அடையவில்லை.
குறித்த காலப்பகுதியில் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் என்ற அரச பெருந்தோட்டயாக்கம் மற்றும் ஜனதா எஸ்டேட் அபிவிருத்தி சபை ஆகிய நிறுவனங் கள் பெருந்தோட்ட மக்களின் சுகாதார சேவை களை பகுதியளவில் பொறுப்பேற்றுக் கொண் டன. அதன் தொடர்ச்சியாக அக்காலத்தில் சுகா
தார அமைச்சின் கீழ் இயங்கிய குடும்ப சுகாதார பணியகம், பெருந்தோட்ட மக்களின் சுகாதார திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை பொறுப்பேற்று நடாத்தியது. 1990களின் ஆரம்பத்தில் பெருந்தோட்டங்கள் 23 பெருந்தோட்ட நிறுவனங் களின் கீழ் கொண்டுவரப்பட்டு தனியார் மயமாக்
கப்பட்டதன் விளைவாக அந்த தோட்டங்களின் சுகாதார நலத் தேவைகள் தோட்ட நிர்வாக ங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டன. இதன் விளைவாக மீண்டும் பெருந்தோட்ட சுகாதாரத் துறை வீழ்ச்சியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. பின்னர் அரசின் பங்களிப்புடன் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி நிதியத்தை ஸ்தாபித்து பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்களிப்புடன் பெருந்தோட்ட சுகாதார சேவைகளை வழங்க வழியேற்படுத்தியது. முக்கியமாக இந்த நிதியம் பெருந்தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்
கின்றமையால் பெருந்தோட்ட சுகாதார சேவைகள் இன்னும் முழுமையான வளர்ச்சியடைய
வில்லை. பெருந்தோட்ட மக்களது குடியுரிமை உறுதிசெய்யப்பட்ட பின்னரும் மூன்றாம் தரப் பான தோட்ட நிறுவனங்களின் பொறுப்பிலேயே தொடர்ந்து இவர்களின் சுகாதாரம் ஒப்ப டைக்கப்பட்டிருக்கின்றது. எனவே இது ஒரு மனிதவுரிமை மீறலாகவே அவதானிக்கப்பட வேண்டும்.
தோட்ட வைத்தியசாலை முறைமைமலையக பிரதேசங்களில் தோட்ட வைத்திய சாலை என்ற சிகிச்சை நிலையங்கள் காணப் படுகின்றன. இருப்பினும் தகுதியுடைய ஆளணி யினரோ, அடிப்படை வசதிகளோ இல்லை. தோட்ட நிறுவனங்களின் கீழ் சுகாதார முறைமை காணப்படும் பல்வேறு தோட்டங்களிலுள்ள நிலைமை இவ்வாறுதான் இருக்கின்றது. இங்கு பணியிலிருக்கும் ஒரு சிலரும் எவ்வித பயிற்சியோ தகைமைகளோ அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். அங்கு வைத்தியர்கள் போன்று செயற்படுபவர்கள் உண்மையில் உரிய கல்வி தகைமைகளை கொண்ட வைத்தியர்கள் இல்லை. அவ்வாறானவர்கள் நுஆழு என்ற தோட்ட மருத்துவ உதவியாளர் என்ற பெயரில் அங்கு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
அவர்களுக்கான வேதனம் குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடா கவே வழங்கப்படும். அவர்களுக்கான நியமனம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத் தின் ஊடாக வழங்கப்படுகிறது. அரசின் சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள சுகாதார திணைக்களத்துக்கும் இந்த தரப்பினருக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை. குறித்த தரப்பினர் பெருந்தோட்டங்களில் பணி
யாற்றும் தொழிலாளர்களுக்கு மாத்திரம் முதலுதவிகளை வழங்க முடியும். எனினும் அவர்கள் தொழிலாளர்கள் மாத்திரமின்றி பல இடங்களில் வைத்தியர்கள் என்ற பெயரில் மருந்துகளையும் சிகிச்சைகளையும் அளிக்
கின்றனர். அவ்வாறானவர்களின் செயற்பாடுகளினால் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
அதேநேரம் மேலும் சில தோட்டங்களில் அவ் வாறான தோட்ட வைத்தியசாலைகளும் மூடப்
பட்டுள்ளன. எனவே சிறியளவிலான நோய் களுக்கு கூட பெருந்தோட்ட மக்கள் நகரங்களை நோக்கியே செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். தோட்ட வைத்தியசாலைகளில் உரிய இடம் மற்றும் மருத்துவ வசதிகள் போதியளவில் காணப்படாமை, ஆளணியினரின் பற்றாக்குறை, மேலதிக சிகிச்சை வசதிகள் இல்லாமை, போக்குவரத்துக்கு தோட்ட நிர்வாகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை, பொருளாதார சிக்கல், நகரங்களுக்கு செல்வதற்கான செலவீனங் கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை போன்ற காரணிகளை இன்றளவும் தோட்டங்களில் காணமுடியும். அதேபோல் அந்த மக்கள் அரச வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதாயினும் அதற்காக தமது ஒருநாள் வேலையையும் அதற்கான வேதனத்தையும் இழக்க வேண்டியுள்ளது. இவற்றை கடந்து நகரங்களில் அமைந்துள்ள அரச வைத்தியசாலை களுக்கு செல்லும் பெருந்தோட்ட மக்கள் அங்கு மொழிப்பிரச்சினையையும் எதிர்நோக்குகின்ற னர்.
அண்மைய போக்குபெருந்தோட்ட மக்களின் அன்றாட உணவாக கோதுமை ரொட்டியும், அரிசி சோறுமே பிரதான இடம் வகிக்கின்றது. இது எவ்விதத்திலும் பிள்ளைகளுக்கோ, தாய்மாருக்கோ போதுமான போசாக்கை வழங்கப் போவதில்லை. நாளாந்த உணவு வேளையை போசாக்கு மிக்கதாக அமைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் பொருளாதாரம் இல்லை. எனவே பிள்ளைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் நேரடியாக பாதிக்கின்றது. மறுபுறம் தோட்டங்களில் காணப்படும் ஆரோக்கியமான கீரை வகை, பழங்கள், மரக்கறிகள் போன்றவற்றை அந்த மக்கள் எவ்வாறு உணவு வேளையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு அறிவூட்டல் தேவைப்படுகின்றது. சில இடங்களில் அவ்வாறான தெளிவூட்டல் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
எனினும் அவை போதுமானதாக இல்லை.இந்த பின்னணியில் பெருந்தோட்ட மக்களுக்கு உரிய சுகாதார சேவையை வழங்க வேண்டிய தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இன்றளவும் அந்த பணி உரிய முறையில்இடம்பெறவில்லை. இதற்காக நல்லாட்சி காலப்பகுதியில் பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு அது நிறை வேற்றப்பட்டது. எனினும் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மிகக் குறுகிய அளவிலான தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. எவ்வா
றாயினும் ஏனைய அரச வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான வைத்தியசாலைக ளின் தரம் குறைந்த அளவிலேயே உள்ளன.
குறிப்பாக சில இடங்களில் மாதாந்தம் இடம்பெறும் கிளினிக் என்ற பரிசோதனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் தோட்ட வைத்தியசாலைகள் அரச வைத்தியசாலைகள் என்ற பெயரில் இயங்குகின்றன. இன்னும் சில இடங்களில் அரச வைத்தியர்கள் அவ்வாறான தோட்ட வைத்தியசாலைகளுக்கு சென்று மருந்து களை வழங்குவதனை தோட்ட மருத்துவ உதவியாளர்கள் விரும்புவதில்லை என்ற குற்றச் சாட்டும் உண்டு.
அடிப்படை உரிமையான சுகாதாரத்தை பெருந்தோட்ட மக்களுக்கு முறையான வகையில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உரிய தரப்பினருக்கு உள்ளது. தேசிய சுகாதார அமைச்சிற்கு மேலதிகமாக ஒன்பது மாகாணங்களுக்கும் பிரத்தியேக சுகாதார செயலாளர்களும், ஆயுர்வேத மருத்துவ விநியோ கத்துக்கு பொறுப்பான திணைக்களமும் உள்ளன.
சுகாதார சேவைகளை வழங்கும் செயற்பாடுகளில் காலத்துக்குக் காலம் அரச முதலீடுக ளில் அதிகரிப்பு காணப்படுகின்ற போதிலும் தொடர்ந்து பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. பெருந்தோட்ட சுகாதார கட்டமைப்பை சீரமைக்க வேண்டியதும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதும் மலைய கத்துக்கான அவசர தேவைகளாகும். இது மலையக மக்களின் அரசியல் பிரதிநிதிகளின் கடமையாகும். குறிப்பாக தேர்தல் கால வாக்குறுதிகளில் இவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படுவதில்லை.
மாறாக சில சலுகைகளையே அரசியல்வாதிகள் முன்வைத்து வாக்கு கோரு கின்றனர். இந்த விடயத்தில் தொடர்ச்சியான அலட்சிய போக்கு பின்பற்றப்படுகிறது. பல தோட்டங்களில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை அளிக்க கூடிய வகையிலான வைத்தியசாலைகள் காணப்பட்ட போதிலும் அவை தற்போது கவனிப்பாரின்றி உள்ளன. இலங்கையில் காணப்படும் தேசிய வைத்தியசாலைகளின் எண் ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏனைய வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. எனினும் பெருந்தோட்ட மக்களுக்கான சுகாதார சேவையை வினைத்திறனாக்குவதற்கு வாய்ப்பாக உள்ள தோட்ட வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இதில் இலங்கை அரசு, பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஏற்படுத்தி கொண்டு குத்தகை ஒப்பந்தமும் ஒரு விதத்தில் தாக்கம் செலுத்துகிறது. எனவே, முறையான சுகாதாரத்தை சகலருக்கும் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமையாகும்.