வீட்டுச் சின்னத்தை மௌனிக்கச் செய்ய அரசாங்கம் முயற்சி: துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு

தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் நிலங்களையும் காத்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை மௌனிக்கச்செய்ததுபோல், தற்போது தமிழ் மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் தமிழரசுக் கட்சியையும், வீட்டுச் சின்னத்தையும் மௌனிக்கச் செய்யும் நோக்குடன் இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு காணி, பொலிஸ் அதிகாரம் தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமை எனவும்,  யுத்த குற்றவாளிகளுக்கான விசாரணைகளும், அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் தேவை எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியலமைப்பின் பதின்மூன்றாம் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டதற்குப்பின்னர் பல வெளிநாடுகளின் அழுத்தங்களால் அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்தினை தமிழ் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அவ்வாறு ஏற்றுக்கொண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் இந்த நாட்டில் தற்போது அமுலிலுள்ள மாகாணசபை முறைமையால் தமிழர்களுக்குரிய தீர்வை வழங்கமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

பெரும்பான்மையினத் தலைவர்கள் எவரும் தமிழர்களுக்கான தீர்வினை தாமாக முன்வந்துதந்துவிடப்போவதில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படத்தான் வேண்டுமென சர்வதச நாடுங்கள் இலங்கைக்கு ஒருமித்து அழுத்தங்களை வழங்கினால் நிச்சயமாக தமிழர்களுக்குரிய தீர்வு கிடைக்கும்.

இந்தியா நினைத்திருந்தால் எப்போதோ தமிழர்களுக்குரிய தீர்வினைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியில் இலங்கை அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தம், அதன்மூலம் இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு நோக்கோடு மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு இந்தியாவின் தலையீட்டுடன் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அற்பசொற்ப அதிகாரங்களைக்கூட தற்போது மத்திய அரசால் மீளப்பெறப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

தற்போது இந்த நாட்டைப் பொறுப்பேற்றுள்ள ஜே.வி.பி அரசாங்கம் பதின்மூன்றாம் அரசியலமைப்பில் பொலிஸ்அதிகாரம் மற்றும், காணி அதிகாரங்களை வழங்கமுடியாது எனக் கூறுகின்றனர். அத்தோடு யுத்தக்குற்றம் புரிந்தவர்களுக்கான விசாரணைகள் இல்லை என்றும் கூறுகின்றனர்.

இவை மூன்றுமில்லாத தமிழர்களுக்கான தீர்வு எது. இந்த மூன்று விடயங்களுமில்லாத தமிழர்களுக்கான தீர்வு எதற்கு. குறிப்பாக வடக்குக் கிழக்கை தமிழர்களின் தாயகம் என்றுகூறுகின்றோம். ஆகவே நில உரிமை என்பது மிக முக்கியமானதாகும். எமது நிலம் எமது உரிமையாகும்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஒதியமலை, பட்டிக்குடியிருப்பு இவ்வாறான எல்லைக் கிராமங்களை பெரும்பான்மையினத்தவர்கள் அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புக்களுடன் அபகரிக்கின்ற நிலை காணப்படுகின்றது என்றார்.