விவசாயிகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன்

‘அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை’ என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் நெற்செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘அரசாங்கம் தொடர்ந்தும் விவசாயிகள் மீது கருணை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது’. ‘தொடர்ச்சியாக ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்களினால் விவசாயிகள் பாரிய அழிவுகளை சந்திக்கின்றனர்’.

‘எனவே பாதிப்பிற்கு ஏற்ப நியாயமான தீர்வை தர வேண்டும் என்றும் அரசாங்கம் உரிய வகையில் நெல்லுக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

‘விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நெல்லின் நிர்ணய விலையை அறிவிப்பதாக கூறுகின்ற அதேநேரம் அனுராதபுரம் மற்றும் ஏனைய பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னரே நெல்லுக்கு நிர்ணய விலையை தெரிவிப்பதாக கூறுகின்றார்.’

‘அனுராதபுரத்தில் உள்ள விவசாயிகள் மாத்திரமே விவசாயிகளா? என்றும் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளை விவசாயிகள் போல் தெரியவில்லையா’? என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் குறைவாக நிர்ணயிக்க உள்ளதாக அறிகிறோம்’.
‘இதனால் விவசாயிகள் விவசாயத்திற்காக செலவு செய்த முதலீடுகளை கூட மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்’. ‘எனவே அரசாங்கம் விவசாயிகள் நஷ்டத்தை எதிர்நோக்காத வகையில் கூடிய விலை நிர்ணயத்தை தீர்மானிக்க வேண்டும்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.