Tamil News
Home செய்திகள் விவகாரத்தை ஜெனிவாவில் வைத்திருந்து காலங்கடத்தும் யோசனை – தமிழ் சிவில் சமூகம்

விவகாரத்தை ஜெனிவாவில் வைத்திருந்து காலங்கடத்தும் யோசனை – தமிழ் சிவில் சமூகம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போது பிரித்தானியா தலைமையிலான இணைத் தலைமை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது தொடர்ந்து இலங்கை விவகாரத்தை ஜெனீவாவில் வைத்திருந்து நேரத்தை வீணடிக்கும் நே◌ாக்கத்தைக் கொண்டதென தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது.

இலங்கை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகளைக் கொண்ட குழுமத்தினால் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படையான கோரிக்கைகளை கூட பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி கடிதம் ஒன்று தமிழ் சிவில் சமூக அமையத்தினால் அந்த நாடுகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு:

‘15.01.2021 தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளடங்கலான பொது அமைப்புக்கள் இணைந்து விடுத்த கோரிக்கையானது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை உட்பட அனைத்து குற்றங்கள் தொடர்பில் விசாரணை ஒன்றிற்காக பாரப்படுத்துவதற்கான முனைப்புக்களை எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலானது. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது தொடர்ந்து இலங்கை விவகாரத்தை ஜெனீவாவில் வைத்திருந்து நேரத்தை வீணடிக்கும் நேரம் கொண்டதென தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் உத்தேச வரைபில் முன்வைக்கப்பட்டுள்ள யுத்த மீறல்கள் சம்பந்தமான ஆதாரங்களை சேர்ப்பது தொடர்பிலான பந்தியானது (உத்தேச வரைபு பந்தி 6) இவ்விடயம் தொடர்பில் தனித்துவமான பொறிமுறையை உருவாக்கத் தவறுகிறது என்றும் சிரியா மற்றும் மியான்மார் தொடர்பில் உருவாக்கப்பட்ட பொறிமுறை போன்றதொரு பொறிமுறை தானும் பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரேரணையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் 18 மாதங்களிற்குப் பின் ஐ. நா மனித உரிமை ஆணையாளர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது நீதிக்கான தேடலை இன்னுமொரு 18 மாதங்கள் கிடப்பில் போடும் எண்ணமே அன்றி வேறில்லை என தமிழ் சிவில் சமூக அமையம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சிரியா விவகாரத்தில் 14 தடைவைகள் சீனா மற்றும் ரஷியாவின் வீற்றோக்கள் மத்தியிலும் பிரேரணைகளை ஐ நா பாதுகாப்பு சபையில் முன்வைத்த மேற்குலக நாடுகள் இலங்கையை கொண்டு போவதற்கு கூட தயங்குவது ஏன் என தமிழ் சிவில் சமூக அமையம் கேள்வி எழுப்பியுள்ளது.

காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள உத்தேச பிரேரணையின் முகவுரைப் பந்தி ஒன்பது, 2017 க்குப் பின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பதையும் தொடர்ந்து தமிழ் மக்களின் காணிகள் பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடயத்தையும் மூடி மறைக்கின்றது எனவும் தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணையின் பந்தி தொடர்பில் ஒருதலைப்பட்சமாக 13ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்யும் முயற்சியை நாம் கண்டிக்கும் அதே வேளை 13ஆம் திருத்தம் அரசியல் தீர்வுக்கான ஓர் ஆரம்பப் புள்ளி தானும் இல்லை என தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. சுயநிர்ணய உரிமையின் பிரகாரம் தாம் தமக்கு உகந்த தீர்வை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடந்து இடம்பெற்று வரும் மீறல்கள் தொடர்பில் ஐ. நா விசேட அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஐ நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பிரசன்னம் வடக்கு கிழக்கில் அவசியம் எனவும் இவை பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம், மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியன அவை உருவாக்கப்பட்ட போதே வழுக்கள் நிறைந்த பொறிமுறைகளாகவே இருந்தவை என்றும் அவற்றை முற்றாக தற்போதைய இலங்கை அரசாங்கம் முடக்கியுள்ள சூழலில் அவை பலப்படுத்தப்பட வேண்டும் என உத்தேச பிரேரணை கோருவது முரண் நகையானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.”

Exit mobile version