Tamil News
Home செய்திகள் விபரம் கோரிய இராணுவத்தை எச்சரிக்கை செய்து அனுப்பிய தவிசாளர் நிரோஷ்

விபரம் கோரிய இராணுவத்தை எச்சரிக்கை செய்து அனுப்பிய தவிசாளர் நிரோஷ்

நிலாவரையில் வைத்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷின் விபரங்களைக்கோரிய இராணுவத்தினை அவர் எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று வெள்ளிக்கிழமை நிலாவரை பகுதியில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்ட முயற்சித்தனர்.

இந் நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இளைஞர்களுடன் சென்று, என்ன நடக்கின்றது என தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார். அதன்போது குறுக்கிட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் தவிசாளரிடம் நீங்கள் யார்? உங்களது பெயர் என்ன என வினவியதுடன் குறிப்புப் புத்தகத்தில் எழுதுவதற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார்.

இதனையடுத்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ், நீங்கள் யார்  எதற்காக விபரம் சேகரிக்கின்றீர்கள? உமக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது இந்த இடத்தில் என்ற போது, தான் கஜபா ரெஜிமண்ட்டைச் சேர்ந்த இராணுவ வீரார் என ஏற்றுக்கொண்டதுடன் தாம் மேலுடத்திற்கு தகவல் அனுப்ப வேண்டும் என்றார்.

தவிசாளர் உமக்கு எதாவது இங்கே தேவைப்படுகின்றதா? எதாவது அலுவல் இருக்கின்றதா? உங்கட வேலையை நீங்கள் பாருங்கள் என கடுந்தொனியில் எச்சரித்தபோது அவ் இராணுவத்தினர் உடனடியாக நிலாவரை கிணற்று வளாகத்தில் நீர் வளச் சபையினால் அமைக்கப்பட்டுள்ள பின்பக்கமாகவுள்ள நுழைவாயில் வழியாக வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து தவிசாளர் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளிடத்திலும் தங்கள் திணைக்களம் இராணுவ மேற்பார்வையுடனா நடைபெறுகின்றதா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு தொல்லியல் திணைக்களத்தினர்  பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகின்றது.

Exit mobile version