ஒரு நாட்டின் அபிவிருத்தியில் இளைஞர்களின் வகிபாகம் அதிகமாகும். இந் நிலையில் இளைஞர்களை நாட்டிற்கு பொருத் தப்பாடுடையவர்களாக மேலெழும்பச் செய்து அவர்களின் நலன்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. இந்த வகையில் மலையக இளைஞர்களின் பல்துறை மேம்பாடு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேம தாசா இளைஞர்களின் முக்கியத்துவம் தொடர் பில் வலியுறுத்தியுள்ளதோடு, இளைஞர்களை மையமாகக்கொண்ட விசேட ஜனாதிபதி ஆணைக் குழுவை ஸ்தாபித்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய பொறிமுறையொன்று தனது ஆட்சியில் ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் தாபிக்கப்படும் என்று கருத்து வெளியிட்டுள்ளா்.
எல்லா சமூகங்களிலும் இளைஞர்கள் பலம்மிக்கதொரு சமூக, பொருளாதார குடித்தொகை பிரிவினராகக் கருதப்படுகின்றனர். இவர்க ளின் விசேட பண்புகள், தேவைகள், சமூக உளவியல் ரீதியான நடத்தை முறைகள் என் பன காரணமாகவே தனிப்பட்ட ஒரு சமூகப் பிரிவினராக அவர்கள் கருதப்படுவதாக புத்தி ஜீவிகள் விளக்கமளிக்கின்றனர். இளமைப் பருவமானது ஒருவனது வாழ்வில் பெரும் மாற்றங்களைக் கொண்ட காலப்பகுதியாகும். 15 வயதுவரை பெற்றோரில் தங்கியிருக்கும் பிள்ளைகள் அடுத்த சுமார் 7 தொடக்கம் 8 ஆண்டுகளில் தொடர்ந்தும் பெற்றோருடனேயே தங்கியிருந்தாலும் கூட, ஓரளவு சுதந்திரமாக வாழத் தொடங்குகின்றனர். இக்காலப்பகுதியில் அவர்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிலை நாட்ட முயல்வதோடு தம்மிடமிருக்கும் பல்வேறு திறமைகளையும் வெளிக்கொணரவும் முயல்வார்கள். தீர்மானங்களை மேற்கொள்வதில் தமக்கு பங்கு இருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பும் நிலையில் தனிநபர் அபிவிருத்தி, சமூகப் பங்கெடுப்பு என்பன தொடர்பாகவும் இக்காலப்பகுதி அவர்களுக்கு முக்கியத்துவம் மிக்க ஒன்றாகும் என்பதும் புத்திஜீவிகளின் நிலைப்பாடாக உள்ளது.
இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான அச்சாணியாக செயற்பட்ட பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் இது நடந்தேறியுள்ளது. இந்நிலையில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு உரிய இடமளித்து அரவணைத்து செல்ல வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. இதேவேளை இளைஞர்களை உள்வாங்கிக் கொள்ளாது அவர்களை புறக்கணிக்கும் நிலைமையானது பல்வேறு பாதக விளைவுகளுக்கும் அடித்தளமாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதனால் ஏற்படும் தழும்புகள் நீண்ட காலம் நின்று நிலைக்கும் என்பதும் தெரிந்த விடயமாகும். இத்தகைய அனுபவம் இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பலவற்றுக்கும் உள்ளது. இளைஞர் விரக்தி நிலையானது மனச்சோர்வு, முரண்பாடுகள், தற்கொலை போன்ற பல விடயங்களுக்கும் அடித்தளமாகின்றன. இதேவேளை வறுமை, வேலையின்மை, கல்வியறிவின்மை, இனரீதியானதும் அரசியல் ரீதியானதுமான பாரபட்சங்கள், அரசியல் பழிவாங்கல்கள், இன மற்றும் சாதி அடக்குமுறைகள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதில் அவர்களின் வகிபாகமின்மை போன்ற சமூக பொருளாதார காரணிகள் அவர்களிடையே பொதுவானதொரு அமைதியின் மையை உருவாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வலியுறுத்துகின்றன.
தேசிய வருமான ஈட்டல் இந்த வகையில் நாட்டின் ஏனைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கும் மலையக இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது. கடந்த 2016 ம் ஆண்டின் தகவலொன்றின்படி பெருந்தோட்ட இளைஞர்களிடையே வேலையின்மையும், கீழுழைப்பும் அதிகரித்து காணப்படுவதாக தெரியவருகின்றது. 14 -18 வயதினரிடையே வேலையின்மை வீதம் 37.6 ஆகவும், 19 – 25 வயதினரி டையே 18.7 வீதமாகவும் இது காணப்பட்டது. மலையக இளைஞர்களின் கல்வி நிலைமை களில் முன்னதாக இருந்து வந்த வீழ்ச்சிப் போக்கு உள்ளிட்ட பல காரணங்கள் கீழு ழைப்பில் அவர்கள் ஈடுபட வாய்ப்பளித்தது. தொழில்திறன் குறைந்த நிலைமைகள், வறுமை போன்றனவும் இதில் செல்வாக்கு செலுத்தி இருந்ததையும் இங்கு குறிப்பிட்டுக் கூறுவது பொருத்தமாகும். படித்த இளைஞர்களில் பெரும்பாலானோர் எதுவித தொழிற்பயிற்சியும் இல்லாது பல பிரச்சினைகளுக்கும் உள்ளாகி வருவதாக தொடர்ச்சியாகவே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முறையான தொழிற்பயிற்சி பெற்றோருக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் காணப்படுகின்றன. எனவே அடிப்படை கல்வி பெற்ற இளைஞர்கள் தம்மை ஏதாவது ஒரு தொழிலுக்கு பயிற்றுவித்துக் கொள்ளுதல் வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் இருந்து வருகின்றன.
இதேவேளை மலையக பெண்களின் தொழில் நிலைமைகள் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஒருவர் புரியும் தொழிலின் தன்மையானது அவரது தொழில் உரிமைகள், தொழில் நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் என்பவற்றை தீர்மானிக்கும். இந்த வகையில் தோட்டத்துறை சாராத தொழில்களில் ஈடுபட்டுள்ள மலையக இளம் பெண்கள் புரியும் தொழில்களின் தன்மையை ஆராய்கை யில், அவர்களில் 72.92 வீதத்தினர் தற்காலிக அல்லது நிரந்தரமற்ற தொழில்களிலும், 27.06 வீதத்தினர் நிரந்தர தொழில்களிலும் ஈடு பட்டுள்ளனர். நிரந்தர தொழில் தன்மையைக் கொண்டோர் பெரும்பாலும் அரசாங்கத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோராகவும், தற்காலிக தொழில்களில் ஈடுபட்டுள்ள இளம் பெண்களில் பெரும்பகுதியினர் தனியார் வர்த்தக நிலையங்கள், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது சுயதொழில்களில் ஈடு பட்டுள்ளோராகவும் காணப்படுகின்றனர்.
மேலும் தோட்டத்துறை யற்ற தொழில்களை நாடும் இளம் மலையக பெண்களில் 63.53 வீதத்தினர் நகரத்துறையிலும், 4.71 வீதத்தினர் கிராமியத்துறையிலும், 28.82 வீதத்தினர் தோட்டத்துறைக்குள்ளே பெருந் தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத ஏனைய தொழில்களிலும், 2.94 வீதத்தினர் வெளிநாட்டுத் துறையிலும் தொழில்களில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும் இப்பெண்களில் 2.35 வீதத்தினர் மட்டுமே அரச நிறுவனங்களில் தொழில் புரிகின்றனர். 52.37 வீதத்தினர் தனியார் கம்பனிகள் மற்றும் தனியார் வியாபார நிலையங் களிலும், 12.94 வீதத்தினர் அரசசார்பற்ற அமைப்புக்களிலும், 17.06 வீதத்தினர் தனியார் வீடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாகவும் பணியாற்றி வருகின்றனர். தேசிய வருமான ஈட்டலில் மலையக இளம் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவுள்ளது. தேயிலைத் தொழிற்றுறை, ஆடைத் தொழிற்றுறை, மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு என்பவற்றின் ஊடாக கணிசமான வருவாயை மலையக இளம்பெண்கள் நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கின்றனர் என்றால் மிகையாகாது.
பயிற்சித் திட்டங்கள்
இதேவேளை தோட்டப்புற இளைஞர்களிடையே அபிவிருத்தியை ஏற்படுத்த அவர்களது மனிதவள அபிவிருத்தி தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியதும் அவசியமாகும். தோட்டத்துறைக்கு வெளியே வேலை வாய்ப்புக்களை பெறுவதற்குத் தேவையான வினைத்திறன்களை அவர்களிடையே அபிவிருத்தி செய்தல். தோட்டங்களுக்கு வெளியே சுயதொழில்களில் ஈடுபடுவதற்கும் வருமானம் உழைப்பதற்குமான அவர்களது முயற்சியாண் மையை அபிவிருத்தி செய்தல்.
தோட்டங்களுக்கு உள்ளேயே மேலதிக வருமானத்தை உழைத்துக் கொள்வதற்குத் தேவையான வினைத்திறன்களை உருவாக்குதல். தோட்ட விவசாயத்திற்கும் வேறு உற்பத்தித்துறை நடவடிக்கைகளுக்கும் தேவையான வினைத்திறன்களை மேம்படுத்தல். தோட்டங்களோடு தொடர்பான ஆதாரத் தொழில் சார்ந்த வினைத்திறன்களை மேம்படுத்தல். தோட்ட இளைஞர்களின் மனப்பாங்குகளை மாற்றுவதன் மூலமும், பெண்களின் பங்கெடுப்பு, பால் தொடர்பான பிரச்சினைகள், மேலதிக வருமானத்தை உழைத்தல் என்பன குறித்த அவர்களது அறிவினை வளர்ப்பதன் மூலம் தோட்டக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் எனப்பலவும் இதில் உள்ளடங்கும்.
அத்தோடு இளைஞர்களின் தொழிற்சார் பயிற்சி, தொழிநுட்ப வினைத்திறன், பொது அறிவு போன்றவற்றை உயர்த்தும் நோக்கில் ஐந்து வகையான பயிற்சி நெறிகளும் அறிமுகப் படுத்தப்பட்டிருந்தன. அறிவுசார் பயிற்சித் திட்டங்கள், மைய வினைத்திறன் அபிவிருத்தி பயிற்சித் திட்டங்கள், தொழில்சார் பயிற்சித் திட்டங்கள், முயற்சியாண்மையை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சித் திட்டங்கள், தோட்ட வேலைகளுக்கு பயன்படக்கூடிய பயிற்சித் திட்டங்கள் போன்றன அந்த ஐந்து வகையான பயிற்சித் திட்டங்களுமாகும். இப்பயிற்சித் திட்டங்கள் சரியான முறையில் நடத்தப்படுவதுடன் இப்பயிற்சி நெறிகளில் பங்குபற்றும் இளைஞர்களும் ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் பங்குபற்ற வேண்டும். இதன் மூலம் அவர்களின் மனிதவளம் படிப்படியாக அபிவிருத்தியடைந்து நாட்டின் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களோடு அவர்க ளும் சரிநிகர் சமானமாக தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு நாடு முன்னேற்றமடைய வேண்டுமா னால் அந்நாட்டு மக்கள் அனைவருமே முன்னேற்றமடைந்திருக்க வேண்டியது அவசியமாகும். பின்தங்கிய மக்களைக் கொண்ட ஒரு நாடு எவ்வளவுதான் செல்வம் மிக்கதானாலும் அதனை அபிவிருத்தி அடைந்த நாடென்று கருதமுடியாது என்பார்கள். இந்த வகையில் பின்தங்கிய வெளிப்பாடுகளைக் கொண்டு விளங்கும் மலையக மக்களின் வாழ்க்கைப் போக்குகளில் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. இவற்றுள் இளைஞர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் பூரண கவனம் செலுத்தப்படுதல் வேண்டும்.
விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
மலையக இளைஞர்கள் உட்பட நாட்டின் பல இளைஞர்களும் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் கவனம் இதுபற்றி திரும்பியுள்ளது. இந்நிலையில் இளைஞர்களை மையமாகக் கொண்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை ஸ்தாபித்து, இளைஞர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பாரிய தேசிய பொறிமுறையொன்று தனது ஆட்சியில் ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். நமது நாட்டு இளைஞர்கள் சந்தர்ப்பவாதமாக பல்வேறு கொள்கை வகுப்பாளர்களால் சுரண்டப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும், நமது நாட்டிற்கு நிலையான தேசிய இளைஞர் கொள்கையொன்று அவசியமாகும். தேசிய இளைஞர் கொள்கையை உருவாக்கி அந்த நிலையான கொள்கையின் மூலம் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை உணர்ந்து ஒரு நிலையான தேசிய திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் சஜித் தெரிவித்துள்ளார். இலகுவில் மாற்றமுடியாத ஒரு சரத்தாக இளைஞர்களுக்கான உரிமையை அரசியலமைப்பில் உள்ளடக்குவது காலத்தின் தேவையாகும். தேசிய இளைஞர் கொள்கைக்காக தேசிய இளைஞர் சாசனத்தை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கட்டளைச் சட்டங்களின் ஊடாக இளைஞர் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.
இளைஞர்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி சீர்திருத்தங்கள், திறன் விருத்தி, தொழிநுட்பத்திற்கான அணுகல், ஆரோக் கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான உரிமை, மேலதிக செயற்பாடுகளுக்கான உரிமை, தொழில் முனைவு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் கல்வி, டிஜிட்டல் கல்வியறிவின் விருத்தி, சமுதாய நடவடிக்கைகளில் இளைஞர்களின் ஈடுபாடு, கல்வி உதவித்தொகை, தேசிய போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டங்களை செயல்
படுத்துதல், பாலின சமத்துவம், இளைஞர் பாதுகாப்பு, இளைஞர்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் ஈடுபாடு, தொழில்முறை ஆலோசனை, இளைஞர்களின் தலைமைத்துவம் போன்ற பலவற்றையும் நிறைவேற்று வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இளைஞர்களுடன் ஒரு சமூக உடன்பாட்டை எட்டுவதோடு இளைஞர்களின் அபிலாஷைகளை சரியான கால அட்டவணையின் ஊடாக முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சஜித் மேலும் தெரிவித்துள்ளமை நோக்கத்தக்கதாகும்.