Tamil News
Home செய்திகள் விடுதலையானோரின் வாழ்வாதாரத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்; தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

விடுதலையானோரின் வாழ்வாதாரத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்; தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

16 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீதியையும் மனித உரிமைகளையும் நேசிக்கும் அனைத்துத் தரப்புகளுமே பங்களித்துள்ளன. இவ்வாறு பங்களித்தது போல விடுதலையான இந்த உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் ஒன்றுபட்டுச் செயல்படுவோம்.

இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன் நேற்று அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு;

“நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரை அரசாங்கம் விடுவித்தமையை வரவேற்கிறோம். இதேபோல ஏனைய அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். இவர்களின் விடுதலை என்பது இவ்வளவு காலமும் சிறை வைக்கப்பட்டிருந்தது வெறும் அரசியல் நோக்கன்றி வேறல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இவர்கள் சிறையில் அனுபவித்த வேதனை இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்தினருக்கும் மட்டுமன்றி நீதியை நேசிக்கும் அனைவருக்கும் வேதனை தரும் விடயமாகும். இவை யாவற்றுக்கும் அடிப்படையாக அமைவது மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டமாகும். எனவே, இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் நீதியும் ஜனநாயக உரிமைகளும் கிடைக்க வேண்டுமெனில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுதல் வேண்டும்.

சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான ஒரு குறுங்கால நடவடிக்கையாக இன்றைய விடுதலை அமையாது; உண்மையான நீதிக்கானதாக அமைவதை அரசாங்கம் உறுதிப்படுத்துவதற்கு இச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும். இவர்களின் விடுதலைக்கு நீதியையும் மனித உரிமைகளையும் நேசிக்கும் அனைத்துத் தரப்புகளுமே பங்களித்துள்ளன. இவ்வாறு பங்களித்தது போல விடுதலையாகும் அவ்வுறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் ஒன்றுபட்டுச் செயல்படுவோம்.”

Exit mobile version