விடுதலைப் புலிகள் குறித்த அச்சம்தான் மணிவண்ணனின் கைதுக்கு காரணம் – சுமந்திரன்

275 Views

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பயம் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 12 வருடங்களின் பின்னரும் இலங்கை பொலிஸாரிடையே நீடிக்கிறது. மணிவண்ணன் மீதான குற்றச்சாட்டு மற்றும் கைது அதன் பின்னணியிலேயே இடம்பெற்றுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் போக்குவரத்துக்களை இடையூறின்றி ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மற்றும் மாநகர சபை பணியாளர்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கு இருக்கிறது. அந்தச் சட்டப்படிதான் முதல்வர் மணிவண்ணன் தனது கடமையைச் செய்தார். இதில் சட்ட மீறல் எதுவும் இல்லை எனவும் சுமந்திரன் கூறினார்.

பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முதல்வர் மணிவண்ணன் நேற்று இரவு யாழ். நீதிவான் முன் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் சுமந்திரன் தலைமையில் 25 வரையான சட்டத்தரணிகள் மன்றில் மணிவண்ணன் சார்பில் ஆஜராகினர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிவான், மணிவண்ணனை 2 இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுவித்தார். இதனையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

நீதிமன்றில் நேற்று மணிவண்ணனை முற்படுத்திய பொலிஸார் புலிகளின் காவல் துறையை ஒத்த சீருடையை பணியாளர்களுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறுவிண்ணப்பம் செய்தனர். எனினும் பொலிஸாரின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எனது தலைமையில் முன்னிலையான 25 வரையான சட்டத்தரணிகள் வாதிட்டோம்.

மநாகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் போக்குவரத்துகளை சீர் செய்யும் பூரண அதிகாரம் மாநகர சபைக்கு உண்டு. அதேபோன்று மாநகர சபை ஊழியர்களை நியமிக்க அதிகாரம் முதல்வருக்கு உண்டு. மாநகர சபை தீர்மானம் அடிப்படையில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் மணிவண்ணன் காவல் பணியாளர்களை நியமித்தார் என நாம் வாதிட்டோம்.

புலிகள் அமைப் புடன் இந்த விடயத்தை தொடர்புபடுத்தி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமையானது புலிகள் குறித்த பொலிஸாரின் பயத்தையே வெளிப்படுத்துகிறது. ஆண்கள் பொதுவாக இள நீல நிறத்தில் ஆடை அணிகின்றனர். அவ்வாறாயின் அவர்கள் அனைவரும் புலிகளா? கொழும்பில் வாகன தரிப்பிடத்தில் காவலர்கள் இதே சீருடை அணிந்தேகட்டணம் வசூலிக்கின்றனர் எனவும் மன்றில் எடுத்துரைத்தோம்.

இதன்போது மாநகர சபை பணியா ளர்களின் சீருடையில் புலிகளின் இலட்சினை இருந்ததா? என நீதிவான் கேள்வி எழுப்பினார்.அத்துடன் மாநகர சபை இலட் சினையை தவறாக இனங்கான முடியாது. கொழும்பு மாநகர சபையால் இதே போன்றதொரு ஆடையுடன் பணியாளர் களை பணிக்கமர்த்த முடியும் என்றால் அதனையே யாழ். மாநாகர சபையால் ஏன் செய்ய முடியாது? கொழும்பில் அனுமதிப்போம், யாழ்ப்பாணத்தில் அனுமதிக்கமாட்டோம் என்றால் இந்த நாட்டில் மாவட்டத்துக்கு மாவட்டம் வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றனவா?” என்றார்.

Leave a Reply