விடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்குமிடையில் போர் உக்கிரமாக இடம்பெற்ற 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவினால் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்ட 54 இக்லா வகை தரையில் இருந்து வானுக்கு செலுத்தும் ஏவுகணைகளின் ஆயுட்காலத்தை இந்திய அதிகாரிகள் பரிசோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு போர் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவு கொழும்பு கட்டுநாயக்கா மற்றும் பலாலி விமானத்தளங்கள் மீது வான்தாக்குதல்களை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தனர்.

சிறீலங்கா வான்படையினரால் விடுதலைப்புலிகளின் வான்படை விமானங்களை தாக்கியழிக்க முடியாத நிலையில் இந்தியா ராடார் மற்றும் ஏவுகணைகளை சிறீலங்காவுக்கு வழங்கியிருந்தது.

இந்தியாவின் ராடார்கள் வவுனியா வான்படைத்தளத்திலும் நிறுவப்பட்டிருந்தது.

IGLA S MANPADS at IDELF 2008 விடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்புதற்போது சிறீலங்காவுக்கு வந்துள்ள இந்திய வான்படை பொறியியலாளர்கள் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதுடன், சிறீலங்கா படையினருக்கு பயிற்சிகளையும் வழங்கியுள்ளனர். இந்த உதவியை இந்தியா வருடம்தோறும் சிறீலங்காவுக்கு வழங்கி வருகின்றது. அதற்கான செலவுகளையும் இந்தியாவே பொறுப்பெடுத்துள்ளது.

அண்மையில் சிறீலங்கா வந்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சிறீலங்கா, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இணைந்த கடற்பாதுகாப்பு உடன்பாடு குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.