Home ஆய்வுகள் வாழ்வதற்கேற்ற வசதிகள் இன்மையால் வெளியேறும் கப்பாச்சி கிராம மக்கள்-கோ, ரூபகாந்தன்

வாழ்வதற்கேற்ற வசதிகள் இன்மையால் வெளியேறும் கப்பாச்சி கிராம மக்கள்-கோ, ரூபகாந்தன்

வாழ்வதற்கு ஏதுவான வசதிகள் எதுவும் இன்றி குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து கப்பாச்சி கிராம மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேறி செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவில் முகத்தான்குளத்தின் குளக்கட்டினை பிரதான வீதியாக கொண்டு அமைந்துள்ள கப்பாச்சி கிராமம் கவனிப்பாரற்ற வாழ்விடமாக மாறி வருகின்றது.

95 குடும்பங்களைக் கொண்ட இக் கிராமத்தில் மக்கள் 1977ஆம் ஆண்டு குடியேறியிருந்த போதிலும், அக்காலப் பகுதியில் மக்கள் செறிவுத் தன்மை காரணமாக வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். 1990ஆம் ஆண்டு எற்பட்ட நாட்டின் ஸ்திரமற்ற தன்மையினால், இக் கிராம மக்கள் வெளியேறி மடு பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.

எனினும் மடு பிரதேசத்தில் இருந்த குறிப்பிட்ட குடும்பத்தினர் மீண்டும் அங்கிருந்து இந்தியாவிற்கு அகிகளாக சென்றுவிட மிகுதியாக இருந்த சுமார் 40 குடும்பங்கள் வரையில் மீளவும் தமது கிராமத்தில்  குடியேற விரும்பியிருந்தனர்.3 1 வாழ்வதற்கேற்ற வசதிகள் இன்மையால் வெளியேறும் கப்பாச்சி கிராம மக்கள்-கோ, ரூபகாந்தன்

இந் நிலையிலேயே முகத்தான்குளத்தை அண்டிய பகுதியில் தாம் குடியேறினால் நீர் வசதியுடன் வாழலாம் என்ற எண்ணத்தில் இருந்த சமயம், 1994ஆம் ஆண்டு காலப் பகுதியில் அப் பிரதேசத்தின் செயலாளர் கப்பாச்சி கிராமத்தின் மேட்டுப் பிரதேசத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினை அமைத்து அதனை சூழ மக்களை குடியேற்றுமாறு உத்தரவிட்டிருந்தாக அக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரச அதிகாரிகளின் உத்தரவிற்கமைய அப்பிரதேசத்தில் தாம் குடியேறிய போதிலும், குடிநீர் வசதிகளோ ஏனைய போக்குவரத்து வசதிகளோ இன்றி தாம் வாழ்ந்ததாகவும், 6 குழாய் கிணறுகள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றில் 1 கிணற்று நீரை மாத்திரமே குடிப்பதற்கு பயன்படுத்த முடியும் எனவும், ஏனையவை குடிநீருக்கு உகந்தது இன்மையால் நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீர் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளதால் கிராம மக்கள் குடிநீருக்கு பெரும் அல்லல்படும் நிலை இன்றும் காணப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் திறந்த கிணறுகளை அமைப்பதென்பது எட்டாக்கனியாகியுள்ள இக் கிராமத்தில், சுமார் 150 அடி ஆழமான ஒரு கிணறு வெட்டப்பட்டுள்ள போதிலும் அதிலும் கோடை காலத்தில் நீர் இன்றியே காணப்படும் என்கின்றனர் ஊர்வாசிகள். இது மாத்திரமின்றி குளக்கட்டினை மாத்திரம் பிரதான வீதியாக கொண்டமைந்த இக் கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் ஏதுமின்மையால், பொது மக்கள் சுமார் 3 கிலோ மீற்றர்கள் நடந்தும் துவிச்சக்கர வண்டிகளிலுமே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இருந்த போதிலும் பாடசாலை மாணவர்கள் பலர் துவிச்சக்கர வண்டிகள் இன்மையால் சுமார் 35 மாணவர்கள் நடைபவனியாகவே வெயிலிலும் மழையிலும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறான நிலையில் இக் கிராம மக்களின் உயிரை காவு கொள்ளும் வகையில் யானைகளின் நடமாட்டமும் தற்போது கிராமத்திற்குள் காணப்படுதுடன், மின் கம்பங்களை உடைப்பதும் வீடுகளின் சுவர்களை தள்ளுவதுமாக யானைகள் அட்டசகாசம் புரிவதனால்   இக் கிராமத்தில் மக்கள் வாழ முடியாதுள்ளதாகவும்  கிராம மக்கள் தெரிவிக்கின்றர்.

இந் நிலையில் இக் கிராமத்தில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு முக்கிய காரணியாக இருந்த பல நோக்கு கூட்டறவுச் சங்கம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு விட்டமையினால் பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடம் பாழடைந்து கவனிப்பாரற்று காணப்படுவதுடன் கிராம மக்களும் தமது அன்றாட பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கப்பாச்சி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள முதலியார்குளம் கிராமத்திற்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இக் கிராமத்திற்கு கிராம சேவகரோ சமுர்த்தி உத்தியோகத்தரோ வராமையினால் தமது நிலைமைகளை அரச அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவதற்கு கூட எவரும் அற்ற மக்களாக தாம் உள்ளதாக ஆதங்கத்தை வெளியிடும் இக் கிராம மக்கள், தமது கிராமத்தில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் வெளியேறி வருவதனால் பல வீடுகள் தற்போது பற்றைகள் மூடி காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே தமது கிராமத்தை அழிவில் இருந்து காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் கப்பாச்சி கிராம மக்கள்.

 

Exit mobile version