இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. வழமைபோலவே அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்குறுதிகள் பலவற்றையும் ‘அள்ளி’ வழங்கி வரு கின்றனர். இந்த வாக்குறுதிகளில் கொஞ்சமேனும் தேர்தலின் பின்னர்’ கிள்ளிக்’ கொடுக்கப்படுமா? என்ற நியாயமான சந்தேகம் நாட்டு மக்களி டையே இருந்து வருகின்றது. குறிப்பாக மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் நலன்கருதி வழங்கப்படும் வாக்குறுதிகளின் சாத்தியப்பாடுகளில் அதிகளவு சந்தேகம் காணப்படுகின்றது. இவையெல்லாம் சிறு பான்மை மக்களின் வாக்குகளைக் குறிவைத்து இடம்பெறும் காய்நகர்த்தல்களாகவே தென்படுகின்றது. இந்நிலையில் கடந்த கால தேர்தல்களின் போதும் இவ்வாறாக வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் காற்றில் பறந்த சம்பவங் களையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
ஒரு நாட்டின் ஜனநாயக ஸ்திரப்பாட்டிற்கு தேர்தல்கள் உந்துசக்தியாக விளங்குகின்றன. மக்கள் தமது பிரதிநிதிகளை அல்லது ஆட்சி யாளர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறை அல்லது தேர்தல் முறையே பிரதிநிதித்துவ முறையாகும். ஒருவர் சார்பாக ஒருவர் நிற்றல் பிரதிநிதி எனப்படும். மக்களை அரசியல் ரீதியாக தலைமை வகிக்கச் செய்வது பிரதிநிதித்துவம் ஆகும். இந்த வகையில் ‘ஆள்பவனை மக்கள் தேர்ந்தெடுத்து நாம் விரும்பும் போது விரும்பியதை பெற்றுக் கொள்ளக் கூடியதும் விரும்பாத போது அவர்களை மாற்றியமைக்கவும் கூடிய வழிமுறையே பிரதிநித்த்துவ ஜனநாயகம்’ என்பது அறிஞர் மக்கெங்டர் என்பவரின் கருத்தாகும். இந்த வகையில் கோட்பாட்டு அடிப்படையில் இன்றுவரை மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் மூன்று வகையான பிரதிநிதித்துவ முறைகள் காணப்படுகின் றன.
இனவாரிப் பிரதிநிதித்துவ முறை அல்லது சமூகவாரி பிரதிநிதித்துவ முறை, பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை அல்லது தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை, விகிதாசார பிரதிநிதித்துவ முறை என்பன அம்மூன்று பிரதிநிதித்துவ முறைகளுமாகும். இவற்றுள் சமகாலத்தில் நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையானது 1978ம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பினூடாக முன்வைக்கப்பட்டது. இத்தேர்தல் முறை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் இத்தேர்தல் முறையை மாற்றி புதிய முறையாக கலப்புத் தேர்தல் முறை ஒன்றினை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த காலத்தில் வலுப்பெற்றிருந்ததும் தெரிந்ததேயாகும். எனி னும் இதன் சாதக விளைவுகள் இதுகாலவரை சாத்தியமாகவில்லை. இந்நிலையில் 1978ம் ஆண்டின் அரசியல் யாப்பின் 94 ம் சரத்து இலங்கை ஜனாதிபதியினை தெரிவுசெய்யும் முறைபற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றது.
50 வீதம் சாத்தியமா?
இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1982 இல் இடம்பெற்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஜே.ஆர்.ஜயவர்தனா 52.91 வீதமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டினார். இவர் பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 34 இலட்சத்து 50 ஆயிரத்து 811 ஆகும். 1988 இல் இடம்பெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா 50.43 வீதமான வாக்குகளையும், மூன்றாவது ஜனாதிபதி தேர்தலில் திருமதி சந்திரிகா 62.28 வீதமான வாக்குகளையும், மீளவும் நான்காவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா 51.12 வீதமான வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டினார். தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச , மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தனர். 2019 இல் இடம்பெற்ற தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச 6,924,255 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் இது 52.25 வீதமாகும். இந்நிலையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது போகலாமென்றும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.
தேர்தல் எனும்போது கட்சித்தாவல் கலா சாரத்துக்கும் இலங்கையில் குறைவிருக்காது. இந்த வகையில் எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் இது எதிரொலிக்கின்றது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவை நிர்க்கதியாக்கிவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிர மசிங்கவுடன் இணைந்து கொண்டுள்ளனர். இது பொதுஜன பெரமுனவுக்கு விழுந்த பலத்த அடியாக உள்ள நிலையில், ‘ராஜபக்சாக்கள் ரணிலுக்கு செய்த வஞ்சனை திரும்பிவந்து பொதுஜன பெரமுனவை தாக்குகிறது’ என்று சிரேஷ்ட பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் சுட்டிக்காட்டுகின்றார். மேலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தம்மிக பெரேரா கடைசி நேரத்தில் கையை விரித்து பெரமுனவை மேலும் நிர்க்கதிக்கு உள் ளாக்கியுள்ளார்.
தேர்தல்களில் வாக்குறுதிகள் முக்கிய இடம் பெறுகின்றன. இக்காலகட்டத்தில் அரசி யல் கட்சிகளாலும், வேட்பாளர்களினாலும் வழங் கப்படும் வாக்குறுதிகள் எந்தளவு நம்பகத்தன்மை மிக்கது என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. இதனடிப்படையில் கடந்த கால தேர்தல்களின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பல செயல்வடிவம் பெறாது குப்பைக் கூடைக்குள் போடப்பட்ட வரலாறுகள் அதிகமாகும். இந்நிலையில் கடந்தகாலத்தில் மலையக மக்கள் சார்பாக வழங்கப்பட்ட சில வாக்குறுதிகளை நோக்குவோம்.
இந்த வகையில் கடந்த 2015 ம் ஆண்டு ‘தேசத்திற்கு மீண்டும் உயிரூட்டும் விரைவான வேலைத்திட்டத்தில்’ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பல வாக்குறுதிகளையும் வழங்கி இருந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட்கூலி ரூபா ஆயிரம் வரை அதிகரிக் கப்படுவதற்கும், அக்கொடுப்பனவிற்கு அரச அனுசரணை தேவைப்படின் அதற்கான நிதி உதவிகளை பெற்றுக் கொடுத்து மேற்குறிப் பிட்ட சம்பள அதிகரிப்பு துரிதமாக செயற் படுத்தப்படும். தோட்ட லயன் அறைகளில் வாழும் குடும்பங்களை அவர்களுக்கே உரித் தான வீட்டில் வசிப்பதற்கும், அவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை வழங்கவும் எமது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படும். தோட்டப்புற சமூகத்தினரின் சுகாதார நலன் களை மேம்படுத்துவதற்கு ஆரோக்கிய நல உட்கட்டமைப்பு அபிவிருத்தியொன்று விரை வாக மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வலியுறுத்தி இருந்தது.
சஜித்தின் வாக்குறுதி
இதேவேளை மைத்திரிபால சிறிசேன தனது நூறுநாள் வேலைத்திட்டத்தில், மலையக மக்களை தற்போதைய லயன் வாழ்க்கையில் இருந்து மீட்டெடுத்து காணியுரிமையுடன் கூடிய சகல வசதிகளும் கொண்ட நவீன மயமான கிராமிய சூழலில் தனி வீடுகளும்,பொது வசதிகளும் அமைத்து கொடுப்பதுடன் இத்திட் டம் முழுமையாக தோட்ட நிர்வாகத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் பிரதேச சபைகளின் மூலம் சேவைகளை பெறக்கூடியவாறு உரு வாக்கிக் கொடுக்கப்படும். மலையக மக்களது வாழ்வாதாரக் கட்டமைப்பு, கல்வி, உயர்கல்வி , கலாசார, சுகாதார,பொது வசதிகள் சம்பந்தமாக நிர்வாக அமைப்புகள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டு அரச சேவைகள் அம்மக்களுக்கு நேரடியாக கிடைக்க ஆவன செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது, கல்வி பொதுத்தராதர பரீட் சைக்கான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் கற்பிக்க கூடிய விசேட பாடசாலைகளை மலையகத்தில் உருவாக்குதல் போன்ற விடயங்கள் இதில் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் நாட்டின் இளைஞர் யுவதிகள் எதிர் நோக்கும் வேலையில்லாப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் சுயதொழில் வாய்ப்புக் களை 10 இலட்சமாக உருவாக்குதல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடங்கி இருந்தன.
2019 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி புதிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் உள்ள டக்கிய மலையக தமிழ் சமூகத்தை அங்கீகரித்தல், பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கான விசேட ஜனாதிபதி செயலணியை நிறுவுதல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களை உள்ளடக்கியதாக மலையகத் தில் 10 தேசிய பாடசாலைகளை கணித, விஞ் ஞான உயர்தரப் பிரிவுகளுடன் கூடியதாக நிறுவு வதற்கும், நுவரெலியா மாவட்டத்தில் மலையக பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கும் நட
வடிக்கை எடுத்தல், பெருந்தோட்ட பிர தேசங்களில் பரம்பரையாக வாழும் சட்ட வதிவுடையோருக்கும்,அதனை அண்மித்து நகரங்கள் குடியிருப்புக்களில் வாழுகின்ற நிலமற்ற ஒவ்வொரு குடும்பமும் சொந்த நிலத்தையும், வீடற்ற ஒவ்வொரு குடும்பமும் வீடொன்றை பெறுவதையும் உறுதி செய்தல், இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்களை உறுதிசெய்யும் வகையில் மலையகத்தில் கைத் தொழில் வலயங்களையும், அதனோடு இணைந்த தொழிற்பயிற்சி நிலையங்களையும் அமைத்தல் என்பவற்றோடு சுகாதாரம், பொதுநிர்வாகம் , கல்வி உள்ளிட்ட மேலும் பல விடயங்களும் இதில் உள்ளீர்க்கப்பட்டிருந்தன.
இதேவேளை சஜித் பிரேமதாசா ‘ஒன்றாய் முன்னோக்கி’ என்ற தனது கொள்கைப் பிரகடனத்தில் தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்தை 1500 ரூபா வரை உயர்வடைய நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும், அதற்காக மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியுமான கால்நடை வளர்ப்பு மற்றும் மாற்றுப் பயிர்ச்செய்கைகள் போன்ற புதிய துறைகள் மீது தோட்டத் தொழிலாளர்கள் நாட்டம் கொள்ளக்கூடிய வகையில் கூட்டு ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்தோட்ட கல்வி மற்றும் சுகாதார வசதி, தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகத்தினை நிறுவுதல் என்பன தொடர்பில் சாதகமான வெளிப்பாடுகளை வழங்கி இருந்தார். மேலும் இம்முறை தேர்தலில் மலையக மக்கள் குறித்து அவர் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் வீட்டுக்கான காணி உரிமத்தைக் கொண்ட சிறுதோட்ட உரிமையாளர்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்களை உருவாக்கு வதே தமது நோக்கமாகும் என்று அழுத்தமாகக் கூறி இருக்கின்றார். தோட்டச் சமூகத்தின் வேலையற்ற இளைஞர்களுக்கு நிலவுரிமை, மூலதன உரிமை, விவசாயம் செய்யும் உரிமை, தரிசு நிலம் என்பவற்றை வழங்க வேண்டும் என்றும் சஜித் தெரிவித்துள்ளார்.
48 அம்ச கோரிக்கை
இந்நிலையில் இம்முறை ஜனாதிபதி தேர்த லில் 48 அம்ச நிபந்தனைகளுடன் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது. 7 அத்தியாயங்களைக் கொண்டு 48 அம்சங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சஜித் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்த நிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்திற்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்கள் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மலையக மக்கள் ஆற்றி வரும் பங்களிப்பை மெச்சியுள்ளதோடு இம்மக்களின் நலன் கருதி காத்திரமான முன்னெடுப் புக்களை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்தல், அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை வழங்குதல், வீடமைப்பிற்கான காணிகளை பெற்றுக் கொடுத்தல் எனப்பலவும் இதில் உள்ளடங்கு கின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நீண்ட காலமாகவே தோட்டங்களை கிராமங் களாக மாற்ற வேண்டியதன் அவசியம் தொடர் பில் வலியுறுத்தி வருகின்றது. எனினும் தோட்டப் புறங்களில் உள்ள லயன் வீடுகளை அப்படியே வைத்துக் கொண்டு கிராமங்களாக மாற்றப்போவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. மேலும் தோட்டப் பகுதிகளில் தனிவீட்டுக் கலாசாரத்தை துரிதமாக முன் னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பெரும்பான்மை கட்சிகளும், அரசியல் வாதிகளும் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி கூறும் வாக்குறுதிகள் தேர்தல் முடிந்த கையோடு காற்றில் பறந்து விடும் போக்குகளே அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நிலை மாற்றப்படுதல் வேண்டும். அத்தோடு வாக்காளர்கள் கடந்தகால அனுபவங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப புத்திசாலித்தனமான முறையில் உரிய வேட் பாளருக்கு ஆதரவு வழங்கி ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.