இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல்வேறு காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டு வரு கின்றனர். இதேவேளை மலையக மக்களின் நலன் சார்ந்த வாக்குறுதிகள் உள்ளிட்ட மேலும் பல வாக்குறுதிகள் பலவற்றையும் அவர் கள் வழங்கி வரும் நிலையில் இதன் சாதக விளைவுகள் தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் தற்போது நடை முறையில் உள்ள விகிதாசாரத் தேர்தல் முறை கணிப்பீட்டு முறையில் அமைந்துள்ளதால் பாமர மக்கள் வாக்களிப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த அவதானத்து டன் வாக்களிக்க வேண்டுமென்றும் புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் 21 ம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முன்னெடுப் புக்களை தேர்தல் திணைக்களம் செவ்வனே மேற்கொண்டு வருகின்றது. இத்தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் நாட ளாவிய ரீதியில் சுமார் 13 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக இம்முறை இரண்டு இலட்சம் வரையான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தத்தமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புக்களும் முழுமூச்சுடன் நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே வேட்பாளர்கள் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து தமது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவு படுத்தி வருகின்றனர்.
சிறுதோட்ட உரிமையாளர்
அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்தின் ஊடான அதிகாரங்கள் வடக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். மேலும் பொலிஸ் அதிகாரம் தொடர்பான தீர்மானத்தை அடுத்து வரக்கூடிய புதிய பாராளுமன்றம் தீர்மானிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் கேந்திரமாக கிழக்கு மாகாணம், மாவட்ட அபிவிருத்தி சபைகள் நிறுவப்படும். காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேசிய காணி ஆணைக்குழு ஏற்படுத்தப்படும். மாகாண சபையின் முதலாவது உப பிரிவிலுள்ள அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்படும். உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டம் அமுல்படுத்தப்படும் போன்ற விடயங்கள் ஜனாதிபதி ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதேவேளை தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே தமது கொள்கையாகுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும், அனைத்து ஆசிரியர்களுக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கள் தொடர்பில் நாளாந்தம் விசாரணை, மாகாண சபையின் அதிகாரங்கள் மீளப்பெறப்பட மாட்டாது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றப்பட்டு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வித்திடப்படும் போன்ற பல விடயங்களும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளீர்க்கப் பட்டுள்ளன.
ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும், பட்டி னியை ஒழிக்க செயற்றிட்டம், மொத்த தேசிய உற்பத்தியே இலக்கு, வரிச் சுமையை தளர்த்த நடவடிக்கை உள்ளிட்ட பல விடயங்கள் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதே வேளை காணாமல் போனோர் ஆட்கடத்தல் தொடர்பில் விசாரணை, இனக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் குடியேற்றங்கள் நிறுத்தப்ப டும், வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, ஒரு வருடத்தில் மாகாண சபை தேர்தல், அரசியல் கைதிகள் விடுதலை போன்ற இன்னும் பல விடயங்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மலையக மக்களின் காணியுரிமை, வீட்டுரிமை, பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமை யாளர்களாக மாற்றியமைத்தல், மலையக பல் கலைக்கழக உருவாக்கம், சம்பள அதிகரிப்பு, இளைஞர் அபிவிருத்தி, குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிவாரணங்கள், மாற்றுத் தொழில் ஏற்பாடுகள்,தனிவீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ளமை யும் நோக்கத்தக்கதாகும். இவ்வாறாக தமது வெற்றியை மையப்படுத்தி வேட்பாளர்கள் கணிசமான வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் அள்ளி வழங்கியுள்ளனர். இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளருக்கு முன்னால் பாரிய சவால்கள் காணப்படும் என்பதோடு அவற்றை நிறைவேற்றுவதற்கு அவர் பகீரதப் பிரயத் தனத்தை மேற்கொள்ள வேண்டியேற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விகிதாசார தேர்தல் முறை
இதேவேளை சமகாலத்தில் நடைமுறையில் உள்ள விகிதாசாரத் தேர்தல் முறை தொடர்பிலும் இதனால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பிலும் தற்போது தேர்தல் மேடைகளில் பேசப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதுபோன்ற பல குளறுபடிகளின் காரணமாக புதிய அரசியலமைப்பினை முன்வைக்க வேண்டியதன் அவசியமும் தேர்தல் மேடைகளில் பேசு பொருளாகியுள்ளது. விகிதா சார தேர்தல் முறையானது1978 ம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சார்பு ரீதியான தொகுதி வாரியான பெரும்பான்மை தேர்தல் முறையில் காணப்பட்ட குறைபாடுகளும் 1977 இல் 5/6 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உள் நோக்கங்களுமே இத்தேர்தல் முறையின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்திருந்ததாக புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த வகையில் விகிதாசார தேர்தல் முறை பல்வேறு சாதக விளைவுகளுக்கும் அடித்தளமாக அமையும் என்று கருதப்பட்டபோதும் இந்த எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்பட்ட ஒரு நிலையி னையே காணமுடிகின்றது. உட்கட்சிப் பூசல் கள் அதிகரிப்பதற்கும், ஐக்கியம் சீர்குலைவதற்கும், நாட்டின் அபிவிருத்தி தடைப்படுவதற்கும் விகிதாசார தேர்தல் முறை வலுசேர்த்துள்ளதாக கண்டனங்கள் பலவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இத்தேர்தல் முறை பிரதிநிதி களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையிலான தொடர்புகளை குறைக்கின்ற ஒன்றாக உள் ளது. ஒரு தேர்தல் மாவட்டத்திற்கு பல உறுப்பினர்கள் உள்ளமையினாலும் தேர்தல் மாவட்டங்கள் நிலப்பரப்பில் பெரியனவாகவும் இருப்பதனாலேயே இந்நிலை தோன்றுகின்றது. இது உறுப்பினர்கள் தமது பொறுப்பினை தட்டிக் கழிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்குகின்றது. இன்னொரு பக்கத்தில் பிரதிநிதித்துவம் கட்சிக்கு மட்டுமே தவிர மக்களுக்கு அல்ல என்ற நிலையையும் தோற்றுவிக்கின்றது என்றும் விகிதாசார தேர்தல் முறைமைக்கு எதிராக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விகி தாசார தேர்தல் முறை வாக்காளர்கள் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத தேர்தல் முறையாக காணப்படுகின்றது. இதனால் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்ற கருத்தும் நிலவுகின்றது. இதன் நம்பகத் தன்மையையும் எம்மால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
விகிதாசார தேர்தல் முறை கணித ரீதியில் (கணிப்பீட்டு முறை) அமைந்துள்ளதால் பாமர மக்கள் புரிந்து வாக்களிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். வாக்குப் பத்திரத்தையும் வாக்களிப்பு முறையையும் விளங்கிச் செயற்படுவதில் பலர் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். விகிதார தேர்தல் முறைமையின் கீழ் கடந்தகாலத்தில் இடம்பெற்ற பல தேர்தல்களில் மலையகம் உள் ளிட்ட நாட்டிலுள்ள வாக்காளர்கள் பலரின் கணிசமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 2000 மாம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் மத்திய மாகாணத்தில் 92 ஆயிரத்து616 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதேவேளை பதுளை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 189 வாக்குகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகளும் நிராகரிக் கப்பட்டிருந்தன. இதேவேளை 2001 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மத்திய மாகாணத்தில் 89 ஆயிரத்து 925 வாக்குகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 30 ஆயிரத்து 483 வாக்கு களும், பதுளை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 626 வாக்குகளும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் பட்டியலில் உள்ளடங்குகின்றன.
1989 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் மூன்று இலட்சத்து 65 ஆயிரத்து 553 வாக்குகள் செல்லு படியற்றதாகியமையும் குறிப்பிடத்தக் கதா கும். இது அளிக்கப்பட்ட மொத்த வாக்கு களில் 6.13 வீதமாகும். இத்தேர்தலின்போது கொழும்பு மாவட்டத்தில் 32 ஆயிரத்து 273 வாக்குகளும், நுவரெலியா மாவட்டத்தில் 13 ஆயிரத்து 600 வாக்குகளும், குருநாகல் மாவட்டத்தில் 34 ஆயிரத்து 212 வாக்குகளும் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதேவேளை கடந்த 2013 ம் ஆண்டு இடம்பெற்ற மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் மத்திய மாகாணத்தில் 82 ஆயிரத்து 161 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 7.8 சதவீதமானவையும், கண்டி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 5.78 சதவீதமானவையும், மாத்தளை மாவட் டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 6.37 சதவீதமானவையுமே நிராகரிக்கப்பட்ட வாக்குகளாகும். இதேவேளை இம்மூன்று மாவட்டங்களிலும் முறையே மூன்று இலட்சத்து 54 ஆயிரத்து 820 வாக்குகள் நுவரெலியா மாவட்டத்திலும், 6 இலட்சத்து 77 ஆயிரத்து 245 வாக்குகள் கண்டி மாவட்டத்திலும், 2 இலட்சத்து 40 ஆயிரத்து 604 வாக்குகள் மாத்தளை மாவட்டத்திலும் அளிக்கப் பட்டிருந்தது.
இதேவேளை 2015 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று வெற்றி யீட்டினார். இது செல்லுபடியான வாககுகளில் 51.28 சதவீதமாகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட ணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச 57 இலட் சத்து 68 ஆயிரத்து 090 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இது மொத்தமாக செல்லுபடியான வாக்குகளில் 47.58 சதவீதமாகும். இத்தேர்தலில் கணிசமான வாக்குகள் நிராக ரிப்புக்கு உள்ளாகியிருந்தமையும் இங்கு நோக்கத் தக்கதாகும்.
ஜனநாயகத்துக்கு வலுசேர்ப்பு
இந்நிலையில் 2020 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக் காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 ஆகவிருந்த நிலையில் ஒரு கோடியே 23 இலட்சத்து 43 ஆயிரத்து 302 பேர் வாக்களித்திருந்தனர். இவற்றுள் செல்லுபடியான வாக்குகள் ஒரு கோடியே 15 இலட்சத்து 98 ஆயிரத்து 929 ஆகும். இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 ஆகும். இதேவேளை 2019 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 ஆகும். இத்தேர்தலில் சஜித் பிரேமதாச 55 இலட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 4 இலட்சத்து 18 ஆயிரத்து 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் கோத்தபாய நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார். இத்தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால் அரசாங்க உத்தியோகத்தர்களின் தபால் மூல வாக்குகளும் கடந்தகால தேர்தல்களில் கணிசமாக நிராகரிப் பிற்கு உள்ளாகியிருந்தன.
இதனடிப்படையில் நோக்குகையில் விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் நிராகரிப் பிற்கு உள்ளான வாக்குகளின் தொகை தொடர்ச்சியாகவே அதிகரித்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் இம் முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்குச் சீட்டின் நீளமும் அதிகமாகவுள்ளது. அத்தோடு வாக்காளர்கள் விருப்பத் தெரி வினையும் இடவேண்டியுள்ளது. எனவே வாக் காளர்கள் வாக்குகளை முறையாக வாக்குச் சீட்டில் அடையாளமிடாத நிலையில் அது நிராகரிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்படலாம். எனவே இது குறித்து வாக்காளர்கள் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக மலையக மக்கள் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். படித்த இளைஞர் யுவதிகள், அரசியல் தொழிற்சங்கவாதிகள் போன்றோர் வாக்காளர்களை உரியவாறு வாக்களிக்கச் செய்யும் நோக்கில் விழிப்பூட்டல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நிராகரிப்புக்கு உள்ளாகும் வாக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஜனநாய கத்துக்கு வலுசேர்க்க முடியும் என்பதே உண்மை யாகும்.