Tamil News
Home செய்திகள் வவுனியா மாவட்டத்தில் பெருமளவில் பதிவாகியுள்ள காணிப் பிணக்குகள்

வவுனியா மாவட்டத்தில் பெருமளவில் பதிவாகியுள்ள காணிப் பிணக்குகள்

ஒரு வருட காலத்தில் வவுனியா மாவட்டத்தில் காணிப்பிணக்குகள் தொடர்பில் 833 முறைப்பாடுகள் விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு இன்று சபையின் தவிசாளர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

வவுனியா மாவட்டத்தில் 833 காணிப் பிணக்குகள் விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 132 பிணக்குகள் இரு பகுதியினரின் சம்மதத்துடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரேதேச செயலக பிரிவுக்குட்பட்ட 333 பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கு அரச உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கும் போது நான் கவலையடைகிறேன். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் 2020ஆம் ஆண்டில் அவ்வாறான நிலைமைகள் இருக்காது எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிதேச செயலாளர் க.பரந்தாமன், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக, மத்தியஸ்தர் சபைகளின் சட்ட ஆலோசகர் சடம்டத்தரணி எம்.திருநாவுக்கரசு, மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப்பணிப்பாளர் இ.விஜயகுமார், வளவள திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி கே.நாணயக்கார, மத்தியஸ்தர் சபைகளின் பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா, விசேட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினத்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version