வவுனியாக் குளத்தினுள் மண் கொட்டி மூடும் விவகாரம்- வலுக்கும் எதிர்ப்பு

60
75 Views

வவுனியாக் குளத்தின் மூன்று ஏக்கரினுள் ஆயிரத்து நூறு ரிப்பர் மண் கொட்டி இரண்டு அடிக்கும் மேலாக நீர் தேங்கி நிற்கக்கூடிய இடத்தை மூடியமைக்கு கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டச் செயலாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கடந்த காலங்களில் வவுனியாவில் பண முதலைகளின் குள ஆக்கிரமிப்பினால் பல ஏக்கர் குள நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பது தெரிந்த விடயமே. பாலை விடவும் குடிநீர் விலையேறியிருக்கக்கூடிய இச் சூழலில் சாதாரண மக்கள் நிலத்தடி நீர் மூலம் பெறும் குடிநீருக்கும் நாசம் விளைவிக்கும் செயற்பாட்டை வவுனியா நகரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன இணைந்து செய்யும் செயல் அருவருக்கத் தக்கதாகவும் எதிர்கால சந்ததி பற்றி எதுவித அக்கறையுயின்றி செய்யப்பட்ட விடயமாகவே பார்க்கபடவேண்டியுள்ளது.

இதனை எமது கட்சி மிக வன்மையாக எதிர்ப்பதுடன், மக்கள் மத்தியில் குள ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து வெகுஜன நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவதுடன் எங்களுடைய அமைப்பின் தோழர்கள், இளைஞர் அணியினர், பெண் அமைப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு மக்கள் விரோத செயற்பாட்டுக்கு எதிராக வவுனியாக் குள மக்கள் செயலனி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுடன் கைகோர்த்து பலமடையச் செய்வோம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.

நெல்லா, குடிநீரா, களியாட்டமா என வந்தால் எதைப் பொதுமக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதையும் மக்கள் கவனத்தில் எடுப்பதுடன், இயற்கைச் சூழலை நேசிக்கக் கூடிய ஒவ்வொருவரும் எம்முடன் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பையும் விடுக்கின்றோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here