வற்றாப்பளை பொங்கலுக்கு சென்றவர்களின் வாகனத்திற்குள் கைக்குண்டை வைத்த காவல்துறையினர்

யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளை பொங்கலுக்கு சென்றவர்கள் பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்  வடமராட்சியிலிருந்து வாகனம் ஒன்றில் சென்ற நபர்கள் கைக்குண்டு கொண்டு சென்றதாக கூறி கைது செய்யப்பட்டனர்.

ஆனால் போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக சிறீலங்கா காவல்துறையினருக்கும் வாகனத்தில் சென்றவர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவர்களை பழிதீர்க்கும் நோக்குடன் இந்த கைது நடந்ததாகவும், காவல்துறையினர் தாமே கைக்குண்டை வாகனத்திற்குள் வைத்துவிட்டு எடுத்ததாகவும் வாகனத்தில் சென்றவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். காவல்துறையினரின் குறித்த செயலிற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், கோவிலுக்கு சென்றவர்களை கோவிலின் அருகில் கடமையிலிருந்த பொலிசார் கடுமையான சோதனைக்கு உட்படுத்தியதாகவும், சாதாரண பொங்கல் தேவைக்காக எடுத்துச் செல்லப்பட்ட, சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிறிய கத்திகளைக்கூட அனுமதிக்கவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.