வன்முறைகள் அதிகளவில் இடம்பெறக் கூடிய பகுதியாக யாழ்ப்பாணம்; ‘கபே’ அமைப்பு

தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ். மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டதாக ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள்’ (கபே) அமைப்பு தெரிவித்துள்ளது.

கபே அமைப்பு வவுனியா விருந்தினர் விடுதியில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அந்த அமைப்பின் பணிப்பாளர் அஹமட் மனாப் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்-

“தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் என்ற நோக்கில் கிராமத்துக்கு கிராமம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அந்த வகையில் தேர்தல் பிரசாரம் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் ‘கபே’ அமைப்புக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

ஒரே கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் விதமான பிரசாரங்கள் அதிகரித்துள்ளன. பொய்யான பிரசாரங்களும் அதிகளவில் பரப்பப்படுகின்றன என்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

இது தொடர்பில் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். இதேபோன்று, வன்முறைகள் அதிகரித்த சில பகுதிகளை பொலிஸ் திணைக்களத்துக்கு அடையாளப்படுத்தி உள்ளோம். வன்னி மாவட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் வெறுப்பூட்டத்தக்க பேச்சுக்கள் மற்றும் பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கட்சிகளின் ஆதரவாளர்களே அதிகளவில் வன்முறையில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அரசியல்வாதிகள் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். அதுபோல ஆதரவாளர்களும் ஒன்றாக பயணிக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் பொத்துவில், அக்கரைப்பற்று, சாய்ந்தமருது பிரதேசங்கள் வன்முறைகள் அதிகமாக இடம்பெறும் பகுதியாக எம்மால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.