Tamil News
Home செய்திகள் வடமாகாணத்தில் கோவிட் -19 நிலவரம்

வடமாகாணத்தில் கோவிட் -19 நிலவரம்

வடமாகாணத்தில் இந்த வருடத்தில் ஐனவரி மாதத்தில் 572 தொற்றாளர்களும் பெப்ரவரி மாதத்தில் 275 பேரும் மார்ச் மாதத்தில் 732 பேரும் கொரோனா தொற்றுடன் உறுதிப் படுத்தப் பட்டுள்ளனர் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறிதது அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“வடமாகாணத்தில் மார்ச் மாதத்தில் இனங்காணப்பட்ட 732 பேரில் 561 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்தும், 73 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும், மன்னார் மாவட்டத்திலிருந்து 66 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 14 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 18 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை வடமாகாணத்தில் 1827 பேர் கொரோனா தொற்றுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 908 பேர் யாழ் மாவட்டத்திலிருந்தும், 457 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும், 333 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 92 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 37 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் நவீனசந்தைக் கடைத் தொகுதிகளில், இதுவரை 125 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக் கடைத் தொகுதிகளில் பரம்பல் ஏற்பட்ட பின்னர் யாழ்நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு பிரதேசத்திலுள்ள கடைத்தொகுதிகள் மூடப்பட்டன. அங்கு பணியாற்றும் 1440 பணியாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 28ம், 29ம் திகதிகளில் P.C.R மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவர்களில் 43 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருநெல்வேலி பொதுச்சந்தையில் இதுவரை 158 பேர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் இப்பொதுச்சந்தையும் அதனுடன் இணைந்த கடைத்தொகுதிகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

தற்போது மூடப்பட்டிருக்கும் சந்தை மற்றும் கடைத்தொகுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள் இரண்டு வார காலப்பகுதிகளுக்கு தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இரு வார கால நிறைவில் இவர்களுக்கான இரண்டாவது P.C.R பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு  தொற்று ஏற்படாதவர்களுக்கு இச்சந்தை, கடைத்தொகுதிகளை மீளத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனவே இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்த பரம்பலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் வடமாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 13 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 6 மரணங்கள் யாழ்ப்பாண மாவட்டதிலிருந்தும், 5 மரணங்கள் மன்னார் மாவட்டதிலிருந்தும், 2 மரணங்கள் வவுனியா மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version