Tamil News
Home செய்திகள் வடமாகணத்திலிருந்து 9 ஆயிரம் பேரை இராணுவத்துக்குத் திரட்ட முடிவு

வடமாகணத்திலிருந்து 9 ஆயிரம் பேரை இராணுவத்துக்குத் திரட்ட முடிவு

வடக்கு மாகாணத்தில் இருந்து 9 ஆயிரம் பேரைப் புதிதாகத் திரட்டி இராணுவத்தில் இணைக்க அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்று யாழ்ப்பாணத்தில் ஆளுநர் நடத்திய சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக குடாநாட்டுத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

கொரோனாத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஐந்து மாவட்ட அதிகாரிகளுடனும் வடக்கு ஆளுநர் இன்று நடத்திய சந்திப்பின் போதே இந்த விவரம் வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 500 பேரும், வன்னிப் பகுதியில் இருந்து 4 ஆயிரத்து 5 00 பேருமாகவே இந்த 9 ஆயிரம் பேரும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இராணுவ உதவிப் பணியாளர்களாக மரவேலை, மேசன் வேலை உள்ளிட்ட வேலைகளுக்கான ஆள்திரட்டாக இதுஅமையும் என்றும் கூறப்பட்டது.

இவ்வாறு பணிக்கு அமர்த்தப்படுவோர் வடக்கு மாகாணத்திலேயே பணியாற்றும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதோடு மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும். விண்ணப்ப முடிவு தினம் இம்மாதம் 29ஆம் திகதி எனவும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version