Tamil News
Home ஆய்வுகள் வடக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்வளர்ப்புக்கு எதிரான சவால்கள்?

வடக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்வளர்ப்புக்கு எதிரான சவால்கள்?

ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கெடுப்பின்மை இன்றி அந் நாடுகளின் பொருளாதாரத்தை நாம் பேசிவிட முடியாது. இதில் இலங்கை முற்றுமுழுதாக விவசாயத்தை முதன்மைப்படுத்தியதாக காணப்படுகின்றது.

9 மாகாணங்களில் வட மாகாணம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. அவ்வாறான விவசாயத்தில் பயிரிடல், கால்நடை வளர்ப்பு என்பதற்கு அப்பால் நன்னீர் மீன் வளர்ப்பு என்பது வடபகுதி விவசாய மக்களால் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத விடயமாகும்.

குறைவான மாதங்களுக்குள் (3 தொடக்கம் 6 மாதங்கள்) குறைந்த முதலீட்டுடன் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய நன்னீர் மீன் வளர்ப்பானது, மக்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. சீனா, ஜப்பான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பயிரிடுதலுடன் மீன் வளர்ப்பையும் மேற்கொண்டு ஒருங்கிணைந்த பண்ணை முறையிலான விவசாய நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.

உலகில் நன்னீர் மீன் உற்பத்தியில் ஜந்தாவது இடத்தில் இருக்கும் பங்களாதேஷ் தன் நாட்டின் மீன் உற்பத்திக்கான வெற்றி தொடர்பாக குறிப்பிடுகையில்; இலங்கையில் காணப்படும் வயல் நிலங்களையும் நீர் நிலைகளையும் விட குறைவாக கொண்ட தமது நாடு, நெல் பயிரிடப்படும் வயல்களில் நீரை தேக்கும் காலத்தில் நெற்பயிருடன் மீன் குஞ்சுகளும் விடப்பட்டு நெல் விளையும் காலத்தில் மீன்களும் உரிய வளர்ச்சியைப் பெற்று அறுவடைக்கு உட்படுத்தப்படுவதாக கூறுகின்றது.

நன்னீர் மீன் வளர்ப்பிற்கு அதிகமாக திலேப்பியா, விரால், றோகு, கோல்டன் ஆகிய மீனினங்கள் சிபாரிசு செய்யப்பட்டாலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திலாப்பியா மற்றும் விரால் மீனினங்களே உகந்தாக காணப்படுகின்றன. காலநிலைத்தன்மை, மீனுக்கான தீவனம், வளர்ப்பு தொட்டிக்கு குறைந்தளவான நிலப்பரப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மீனினங்கள் வளர்ப்பதற்கு சிபாரிசு செய்யப்படுகின்றது.

தென்னை நிறைந்த பகுதிகளுக்குள் ஊடுபயிர்களை பயிருடுவதை நிறுத்தி மீன் தொட்டிகளை அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபடுத்தும் நடைமுறை காணப்படுகின்றது. 500 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்ட நிலத்தில் 50 சென்ரி மீற்றர் ஆழமான குழிகளே பொதுமானதாகும்.

இலங்கை மதிப்பீட்டில் மீன்தொட்டி முதன் முதலில் அமைக்கப்படும் செலவை விடுத்து ஒரு மீன் ½ கிலோ எடையினை 5 மாதங்களில் பெறுவதற்கு செலவழிக்க வேண்டிய தொகை 110 ரூபாய். அதனது விற்பனைப் பெறுமதி 300 ரூபாய்க்கு மேற்பட்டதாகும். இயற்கை முறையில் நீர் நிலைகளில் பரவலடைந்து வளரும் மீனின் பெறுமதியை விட பண்ணை அமைப்பு முறையில் வளர்க்கப்படும் மீன்களுக்கான விலைப் பெறுமதி மிகவும் அதிகமானதாகும்.

இலங்கையில் நன்னீர் மீன்களுக்கான சந்தை வாய்ப்பானது மிகவும் அதிகமானதாகவே காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களாலேயே அதிகம் நுகரப்படும் நன்னீர் மீன்கள், தென்னிலங்கை பிரதேசங்களில் அனைத்து பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் விரும்பி நுகரப்படுகின்றது.

நுகர்ச்சித்தன்மையின் அடிப்படையிலேயே நன்னீர் மீன்களுக்கான விலையும் நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது வடபகுதியில் ஒரு கிலோ மீனின் விலையானது 100 தொடக்கம் 300 ரூபாய் வரையான விலையே காணப்படுமிடத்து, தென்னிலங்கை பிரதேசத்தில் 300 தொடக்கம் 800 ரூபாய்க்கும் அதிகமான விலையே காணப்படுகின்றது.

இவ்வாறு தென்னிலங்கை பிரதேசங்களில் அதிக விலையுடன் நுகரப்படும் நன்னீர் மீன்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறு, பெரும் குளங்கள் ஏரிகள் என்பவற்றில் இயற்கையான முறையில் பரவலடைந்து பண்ணை முறையமைப்புக்குட்படாத நிலையில் பிடிக்கப்படும் மீன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட வருட இடைவெளிகளுக்கு பின் குளங்களில் விடப்படும் மீன் குஞ்சுகள் இயற்கை முறையான வளர்ச்சிக்கு உட்பட்டு மழைகாலத்தில் பிற குளங்களுக்கு பரவலடையும் மீன்கள் கமக்கார அமைப்புக்கள் மற்றும் விவசாய திணைக்களங்களால் குத்தகை முறையில் வியாபாரிகளால் குளங்களில் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இயற்கையான முறையில் பரவலடையும் மீன்கள் மூலம் ஈட்டப்படும் லாபத்தினை விட, பண்ணை முறையில் வளர்க்கப்படும் மீன்களின் மூலம் இரட்டிப்பு லாபம் பெறப்படுகின்றது.

இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் ஜந்தில் ஒரு பங்கை, 11 ஆயிரம் மெற்றிக்தொன் மீனை உற்பத்தி செய்வதன் மூலம் கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்தை விட முன்னிலையில் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் நன்னீர் மீன் பிடி மற்றும் வளர்ப்புக்கு எதிராக காணப்படும் சவால்களை நோக்கின் சமூக மட்டத்தில் மீன் பிடி தொழிலுக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்த்து ஒரு காரணமாக உள்ளது.

வட பகுதியின் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களான ஒடியல் பிட்டு, மரவள்ளி பிட்டு, பழைய சோறுண்ணுதல், குறிஞ்சா மற்றும் முசுட்டை எனும் கீரை வகை உணவுகளுடன் குளத்து மீன் உணவானது இணைந்துள்ளது. வன்னி வளங்களை இலக்கியத்திற்குட்படுத்துகையில், நன்னீர் உணவு வளங்கள் தவிர்க்க முடியாததாகும்.

இவ்வாறு சிறப்பான வளமாக கணப்படுமிடத்து சாதி முறையில் தொழில்துறைகளை பாகுபடுத்தி பார்க்கும் தன்மை தற்கால இளைஞர்களிடத்தே நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் மீன் பிடியில் ஈடுபடுவதற்கு தடையாக உள்ளது. அதாவது மீன் பிடித்தல், வளர்த்தல் குறிப்பிடத்தக்க ஒரு சமூகத்தினரால் மட்டுமே மேற்கொள்ளக்கூடியது எனும் கருத்தியலானது, நன்னீர் மீன் வளர்ப்பு தொடர்பான அறிவு மூலதனங்கள் இருந்தும் மீன் வளர்ப்பில் ஈடுபடாமைக்கு சுய கௌரவத்தன்மை காரணமாகின்றது. நன்னீர் மீன் வளர்ப்பு தொடர்பானதும் அத் தொழிற் துறைக்கு அரசாங்கம் வெளிப்படையானதும், வெற்றிகரமற்றதுமான ஒத்துழைப்பு வடபகுதியில் நன்னீர் மீன் வளர்ப்பு மந்த நிலையில் காணப்படுவதற்கான காரணமாக காணப்படுகின்றது.

இலங்கை அரசாங்கமானது சுயதொழில் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு மீன் வளர்ப்பில் ஈடுபடும் நபர்களுக்கு கடல் வள அபிவிருத்தி மற்றும் தர மேம்படுத்தல் செயற்திட்ட மீட்சி நிதியதிட்டத்தின் கீழ் ‘ஷமிதிரிய சம்பத்’ கடனுதவி மூலம் ஆக குறைந்தது 100000 முதல் ஆகக்கூடியது 10 மில்லியன் வரையிலான தொகை சலுகைகளாக வழங்கப்படுகின்றது. ஆனால் இத்திட்டம் சுய தொழிலாளர்களிடத்தே அறிமுகமாயுள்ளதா என்பது கேள்விக்குறியானதாக காணப்படுகின்றது. மற்றும் மீன் குஞ்சு உற்பத்தி நிறுவனங்களில் பரந்துபட்ட தொழிற்பாடின்மை, மீன் தொட்டி அமைப்பு பராமரிப்பு செலவு, மீனுக்குரிய தீவனம் போன்றவற்றிற்கான முதலீடுகள் தொடர்பில் தவறான தகவல்களும் மீன் வளர்ப்பில் ஈடுபடுதல் என்பன குறிப்பிடத்தக்க சவால்களாக உள்ளன.

தற்போது வன்னிப் பகுதியில் காணப்படும் நீர்ப்பரப்புக்களில் அதிகமானவை வனப் பகுதிகளுக்குள் காணப்படுபவையாக உள்ளமையால், வனவள அமைச்சின் சுவீகரிக்கப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குளங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதோ அல்லது தனிப்பட்ட முறையில் விவசாய மீன்பிடி திணைக்களங்களின் சிபார்சுடன் மீன் வளர்ப்பில் ஈடுபடுதலோ இயலாத காரியமாக காணப்படுகின்றது. இத்தகைய குளங்கள் மழை கணிசமாக பெய்யும் மாதங்களில் நீர்க்கொள்ளளவை கொண்டிருப்பதுடன் வெற்றிகரமான நன்னீர் மீன்வளர்ப்பிற்கு உகந்ததாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொழில் வாய்ப்பு வீதத்தில் பின்தங்கிய மாகாணமாக காணப்படும் வட மாகாணத்தில் சுய தொழில் துறைக்கு ஏற்றதான ஆளணிகள் காணப்பட்டாலும் நன்னீர் மீன்வளர்ப்பு தொழில் தொடர்பான அறிவினையும் வழிகாட்டல்களையும் தொடர்புபட்ட நிறுவனங்களும் திணைக்களங்களும் மக்களுக்கு வழங்காத பட்சத்தில் அதிக வருவாயை ஈட்டித்தரும் தொழில் துறையொன்றை நாம் தவறவிடுகின்றோம்.

-கு.குகனுஜன்-

Exit mobile version