கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த வியாழன் அன்று 700 விலங்குகள் உயிரிழந்ததற்கு காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுகள் காரணமா என்பதை அறிய பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞானி குழுவொன்று நேற்று வடக்கு மற்றும் கிழக்கிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாவட்டங்களில் 700 கால்நடைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்ததையடுத்து திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத குளிர் காலநிலையே விலங்குகளின் உயிரிழப்பிற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்ததாக டாக்டர் கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து இலங்கையின் வான்வெளிக்குள் நுழைந்த அசுத்தமான காற்று, காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் ஆகியவற்றால் இந்த விலங்குகள் இறந்ததற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“நாங்கள் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு அனுப்பி விலங்குகளை பரிசோதிக்கவும், அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைகளை நடத்தஉள்ளோம் என்று அவர் கூறினார்.
பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைத்த பிறகு விலங்குகள் காற்றில் உள்ள நச்சுத் துகள்களை உள்ளிழுத்ததா அல்லது “குளிர் அதிர்ச்சி” காரணமாகவா இறந்தன என்பதை நாங்கள் கூற முடியும், என்று அவர் கூறினார்.