Home செய்திகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் – பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் – பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு

சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகளை முன்னெடுத்தல் என்ற கருத்தை முன்வைத்து கடந்த வியாழக்கிழமை (18) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்துலக விசாரணை பொறிமுறையை பரிந்துரைத்திருந்தனர்.

அவர்கள் ஆற்றிய உரையில் சில வருமாறு:

சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் அனைத்துலக விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்காவின் இராணுவத்தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை கொண்டு வரும் போது அது ஏன் பிரித்தானியாவினால் முடியாது உள்ளது என தொழில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறீலங்கா அரசு தொடர்ந்து தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வருகின்றது. காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் போராட்டங்களை மேற்கொள்பவர்களின் இல்லங்களுக்கு செல்லும் சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு நினைவாலையங்களும் அழிக்கப்படுகின்றன. உலகின் தலைமைத்துவத்தை பிரித்தானியா மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதாக முதல் தடைவையாக தீர்மானம் கூறுவது வரவேற்றகத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்போன் தெரிவித்துள்ளார்.

2011 ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கை இரு தரப்பும் குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தது. காணாமல்போனோர் அலுவலகம் பலப்படுத்த வேண்டும் என்பதுடன், அது சுதந்திரமாக இயங்கவும் வேண்டும் இராணுவ ஆக்கிரமிப்பு நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மத்தியூ ஒக்ஸ்போட் தெரிவித்திருந்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயகம் அவர்கள் அங்கு சுயாட்சியுடன் வாழ்வதற்கு உரிமையுள்ளவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டவுன் பட்லர் தெரிவித்திருந்தார்.

image 1 வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் - பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு

இறுதிப் போரில் 40 தெதடக்கம் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் காணாமல் போயுள்ளனர். காத்திரமாக நடவடிக்கைக்கான தருணம் இது. பிரித்தானியாவில் உள்ள 500 தமிழ் அமைப்புக்கள் எமது செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தன. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்தனர். சிறீலங்காவிலும், பிரித்தானியாவிலும் உள்ள தமிழ் மக்களின் கருத்துக்களை கேழுங்கள். சிறீலங்காவை அனைத்துலக நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் கல்பொன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பொறிமுறை என்பது தோல்வியடைந்துள்ளது. எனவே அனைத்துலக பொறிமுறை ஒன்றே தேவையானது. 12 வருடங்களின் பின்னரும் சிறீலங்கா எதனையும் நிறைவேற்றவில்லை. ஐ.நா தீர்மானத்தில் இருந்து வெளியேறியும் விட்டது. சிறீலங்கா மீது ஆயுதத் தடை கொண்டுவர வேண்டும். இன்றுவரை பிரித்தானியா அதனை தடை செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவி தெரிவித்திருந்தார்.

Exit mobile version