Tamil News
Home செய்திகள் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை

வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் கீர்த்தி தென்னகோன் முன்னெடுத்துள்ளார். ஆகவே காணி அபகரிப்பு தொடர்பில் தனக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட முடியாது தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாண  தமிழ் அரசியல் தரப்பினருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்  என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காணி சுவீகரிப்பும், இன, மத அடையாள அழிப்பும் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது. தமக்கு தெரியாமல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் குறிப்பிட முடியாது.

தெற்கு பகுதியில் உள்ள மீனவர்கள் கொக்கிளாய் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் சொந்த வீடுகள் உள்ளன. ஆனால் இவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் தமிழர்களின் நிலங்களை வழங்க அரச தரப்பினர் விசேட கவனம் செலுத்தியுள்ளார்கள். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும்.

ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் கீர்த்தி தென்னகோன் என்பவர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். ஆகவே இது தனக்கு தெரியாது என ஜனாதிபதி வழமை போல் குறிப்பிட முடியாது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண ஜனாதிபதி பொறுப்புடன் செயற்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மற்றும் கிழக்கு ஜனாதிபதி செயலணி என்பதொன்றை ஸ்தாபித்தார். பல பிரச்சினைகளுக்கு தீர்வு எடுக்கப்பட்டது.

இந்தியா காரைக்கால் முதல் இலங்கை காங்கேசன்துறை வரை கப்பல் சேவையை முன்னெடுக்க இருதரப்பாலும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையில் கப்பல் சேவை ஏற்கனவே இருந்தது. புவியியல் ரீதியில் இராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையில் 18 கிலோமீற்றர் கடல் மைல் தூரமே காணப்படுகிறது. ஆனால் பாண்டிச்சேரிக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான கடல் மைல் தூரம் 56 கிலோமீற்றர் கடல்மைல் தூரமாக காணப்படுகிறது. ஆகவே மூன்று மடங்கு அதிகமான தூரத்தை கொண்டுள்ள காரைக்கால் – காங்கேசன்துறை கப்பல் சேவையை ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்வி தோற்றம் பெற்றுள்ளது.

இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை காணப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது இவ்விடயம் தொடர்பில்  கதைத்த போது இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் வாக்குறுதி வழங்கினார். ஆனால் தற்போது மாறுப்பட்ட முறையில் தீர்மானம்  காரைக்கால் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

18 கடல் மைல் தூர கடல் சேவையா அல்லது 56 கடல் மைல் தூர கடல் சேவையா என்பதை ஆராய வேண்டும். ஆட்சியாளர்கள் எடுத்த தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ஆகவே  இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல்சேவையை ஆரம்பித்தால் பல செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி உட்பட துறைசார் தரப்பினரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Exit mobile version