வடக்கு கிழக்கிலே உள்ள மக்களை அரசாங்கம் ஒரு எதிரிபோன்று பார்க்கின்றது: கஜேந்திரகுமார் தெரிவிப்பு

வடக்கு கிழக்கிலே உள்ள மக்களை அரசாங்கம் ஒரு எதிரிபோன்று பார்க்கின்றது.  மக்களை பாதுகாக்கின்ற வகையிலே செயற்படாமல் காவல்துறையினறை பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்படுகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் காவல்துறையினர் அந்த வேனிலிருந்த ஆண்களிற்கு மிக மோசமாக அடித்து கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உட்பட வேனிலிருந்த பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி  காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று அங்கு மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக சுன்னாகம் காவல் நிலையத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொனானம்பலம், செல்வராஜா கஜேந்திரன், நடராஜா காண்டீபன் ஆகியோர் காவல்துறையினருடன்  கதைத்து தாக்குதலுக்கு உட்பட்டவர்களை உடனடியாக பார்வையிட்டு அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதன் பின்னர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம்  தெரிவித்துள்ளதாவது.

காவல்துறையினர் அந்த வேனிலிருந்த ஆண்களிற்கு மிக மோசமாக அடித்து கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உட்பட வேனினிலிருந்த பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி  காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து சென்று வந்து மிலேச்சத்தனமான விதத்தில் தாக்கியுள்ளதுடன் கடும் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்றவேளை தான் அந்த இடத்தில் இருக்கவில்லை என  காவல் நிலைய பொறுப்பதிகாரி எங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் காவல் நிலையத்திற்குள் வைத்து மிலேச்சதனமாக தாக்கியுள்ளனர் என அவர் எங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அவர் எம்மிடம் தெரிவித்தார்.

ஆனால் அடிபட்ட பிரதேசத்தில் உள்ள நிலைமைகளை பார்க்கின்ற போது சி.சி.ரி.வி. ஊடாக நடந்த முழு சம்பவத்தையும் அறிவதற்கான வாய்ப்புள்ளது என அங்குள்ள மக்களின் கருத்துக்களின் மூலம் நாங்கள் அறிய முடிகின்றது. இந்த சம்பவமானது எமக்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்ற விடயம் என்னவென்றால் வடக்கு, கிழக்கிற்கு உள்ளே காவல்துறையினர் என்ற பெயரில் அனுப்பப்படுகின்றவர்கள் காடையர்களாக செயற்படுவதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.

உண்மையிலேயே இது பொதுப்பிரச்சினை. தெற்கிலே விதிமுறைகளை மீறி செயற்படுகின்ற காவல்துறையினர் தண்டனைக்காக வடக்கு பகுதிக்கு இடமாற்றப்படுகின்ற நிலைமைதான் காணப்படுகின்றது.

வடகிழக்கிலே உள்ள மக்களை அரசாங்கம் ஒரு எதிரிபோன்று பார்க்கின்ற நிலையில் அவர்கள் எப்படி பிழையாக நடந்துகொண்டாலும் அதனை மூடிமறைக்கின்ற வகையில் மக்களை பாதுகாக்கின்ற வகையிலே செயற்படாமல் காவல்துறையினரைபாதுகாக்கின்ற வகையிலேயே செயற்படுகின்றது.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இந்த நிலைமை தொடர்கின்றது என்பதை இந்த சம்பவம் தெளிவாக காண்பிக்கின்றது என்றார்.