வடக்கு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு சுகாதாரப் பிரிவினர்  ஊடாக தடுப்பூசிகள் ஏற்றப் படவில்லை: கேதீஸ்வரன்

வடக்கு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு சுகாதாரப் பிரிவினர்  ஊடாக தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து அவரிடம் கேட்ட போது,

“வடமாகாணத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள்  சுகாதாரப் பிரிவினர் ஊடாக ஏற்றப்படவில்லை.   அவை இராணுவத்தினர் ஊடாக ஏற்றப்படுவதாக அறிகின்றேன்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா ஆடைத் தொழிற்சாலையிலும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் நிலையில், அது குறித்து தமக்கு எதவும் தெரியாது என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இராசேந்திரகுளம் ஆடைத் தொழிற்சாலையில் பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் லவன் இராணுவத்தினருடன் இணைந்து தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.