வடக்கில் மேலும் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று – யாழில் 35 பேர் அடையாளம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வு கூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும், பூவரசம் குளம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 19 பேருக்கும், சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 14 பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவரும் என 35 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.