வடக்கில் நேற்றைய தினம் 44 பேருக்கு கொரோனா – யாழ்ப்பாணத்தில் 38 பேர்

வடக்கு மாகாணத்தில் நேற்று 44 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இதில், 38 பேர் யாழ்ப்பாணம், தலா 3 பேர் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வுகூடங்களின் பரிசோதனை முடிவுகளிலேயே இந்த விவரம் வெளியானது.

யாழ்ப்பாணத்தில், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 21 பேர் (கொடிகாமம் சந்தை கொத்தணி), யாழ். சிறைச்சாலையில் 8 பேர், யாழ். போதனா வைத்திசயாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த 6 பேர், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேர் என 38 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேபோன்று, கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த ஒருவருக்கும், தனிமைப்படுத்தலில் இருந்த இருவருக்குமாக மூவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும், பூவரங்குளம் வைத்தியசாலையை சேர்ந்த இருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.