வடக்கிற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவை : மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்

179 Views

வடக்கு மாகாணத்தில் 4 இலட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது.

தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் அவை இரண்டு வாரங்களுக்குள் வடக்கு மக்களுக்குச் செலுத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு அஸ்ரா ஜெனெகா தடுப்பூசியின் முதலாவது செலுத்துகை கடந்த ஜனவரி மாத இறுதியில் ஏற்றப்பட்டது.

அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்துகை தற்போது ஏற்றப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் முதலாவது செலுத்துகையைப் பெற்ற 500 பேர் வரையில் இரண்டாவது செலுத்துகையைப் பெறவில்லை. அவர்களில் பலர் தமக்கு தடுப்பூசி தேவையில்லை எனத் தெரிவித்து வருவதால், அவர்களிடம் விளக்கம் கோருவதற்கும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

அஸ்ரா ஜெனெகா தடுப்பூசி எதிர்வரும் 14ஆம் திகதியுடன் காலாவதியாவதால்
அதனைத் திருப்பி கொழும்புக்கு அனுப்ப வேண்டிய நிலையுள்ளது.

அதன் காரணமாகவே முதலாவது செலுத்துகையைப் பெற்று இரண்டாவது செலுத்துகையை இதுவரை பெறாதவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

Leave a Reply