வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற 14 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை

கடந்த 2000ம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் தீவிரவாதிகள் 14 பேருக்கு வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.  

வங்கதேசத்தின் கோபால்கன்ஜில் கோடாலிபாரா மைதானத்தில் கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதி தேர்தல் பிரசார பேரணி நடந்தது. இதில், பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொள்வதாக இருந்தார்.

இந்நிலையில், அவரை கொலை  செய்வதற்காக பிரசார கூட்டம் நடைபெறும் மைதானத்தில் 76 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு வைக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் அதை தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், ஹசீனாவை கொல்லும் சதி திட்டம்  முறியடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 14 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், தாகா விரைவு விசாரணை மன்றம், குற்றவாளிகள் 14 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து  உத்தரவிட்டது.

இவர்கள் அனைவரும், ‘ஹர்கத்துல் ஜிகாத் வங்கதேசம்’ என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த 14 பேரில் இன்னும் 5 பேர் தலைமறைவாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.