வங்கதேசத்தில் இன அடிப்படையில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது என ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.இதில் 560 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனாகடந்த 5-ம் திகதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்.
மாணவர்கள் போராட்டம் ஓய்ந்தாலும் வங்கதேசம் முழுவதும் இந்துக்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 17,000 இந்து குடும்பங்கள் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர்.
இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையை பகிர்ந்துள்ளன. மேற்குவங்கம், திரிபுரா,அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன. இந்த5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் குவிந்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள், கோயில்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்துக்களின் கோயில்களுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
இதனால் பெரும்பாலான இந்துக்கள் அங்கிருந்து தப்பி மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று டாக்கா நகர தெருக்களில் இந்துக் கள் இறங்கிப் போராட்டம், ஊர்வலம் நடத்தினர். இந்துக்கள். கோயில்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியே குட்டரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது,
வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆனாலும் வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்து சமூகத்தினருக்கு எதிராகவும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் இன வெறி தாக்குதல் நடந்துள்ளது கண்டனத்திற்குரியது.
இந்துக்கள் மீது மட்டுமல்ல பல இந்து கோவில்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடைய இரண்டு இந்துத் தலைவர்கள் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர், வன்முறையை தூண்டுதல், இன அடிப்படையில் தாக்குதல் நடத்துதல், ஆகியவற்றை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது என்றார்.