எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் ஒன்று கூட்டி நேற்றைய தினம் 04.11.2019 மன்னாரில் உள்ள தனியார் விடுதியில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டிலும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தலைமையிலும் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
மேலும் இக் கூட்டத்தின் போது அங்கு வருகைதந்த கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் பொது மக்களும் சுமந்திரனை நோக்கி சரமாரியான கேள்விகளை தொடுத்தனர். மன்னாருக்கு எதற்காக நீங்கள் வருகை தந்தீர்கள் எனவும் நீங்கள் கூறி நாம் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை மக்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் முடிவெடுத்துவிட்டார்கள் என அங்கு வருகைதந்திருந்த ஓய்வு நிலை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் சுமந்திரனை
நோக்கி கேள்வி எழுப்பினார்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் றிசாட்டின் திட்டமிட்ட காணி
சுவீகரிப்பு,வேலைவாய்ப்பில் முறைகேடு,திட்டமிட்ட வகையில் மன்னாரில் தமிழ் மக்களை ஓரங்கட்டும் றிசாட்டின் செயற்பாட்டை ஆதரிப்பது போலவே தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. அதனால் நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் றிசாட்டுக்கு எதிராக தாமரை மொட்டுக்கே வாக்களிக்கப்போகின்றோம் என அங்கு வருகை தந்த இளைஞர்கள் சிலர் கூறியுள்ளனர்.
மேலும் கடந்தமுறை மைத்திரிக்கு வாக்களியுங்கள் தமிழர்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவார் என்று கூறி எம்மை வாக்களிக்க சொன்னீர்கள் ஆனால் தமிழ் மக்கள் சார்ந்த விடயத்தில் எதாவது முன்னேற்றகரமான செயற்பாட்டை தங்களால் மேற்கொள்ள முடிந்ததா எனவும் நிபந்தனை இன்றி அரசாங்கத்தை ஆதரித்து தங்களால் என்ன பெறமுடிந்தது என அங்கு வருகைதந்தவர்கள் கேள்விகளை தொடுத்தனர்.
இதன் காராணமாக கூட்டம் நடைபெற்ற இடத்தில் சிலமணி நேரம் சலசலப்பு ஏற்பட்டதுடன் கூட்டத்தை ஒழுங்கு செய்த பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் அவர்கள் நிலைமையை சரி செய்ய கடும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார்.
மேலும் குறித்த கூட்டத்தில் சட்டத்தரணிகள் முன்னாள் மாகாண சபை
உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.