ஏப்ரல் 21 தொடர் தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களில், நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயம் மீதான தாக்குதல்தாரியான முஹமத் அப்தூனின் உடற்பாகங்கள் (தலை) இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
தாக்குதல்தாரிகளை இஸ்லாமியர்களாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவில் வாழும் முஸ்லிம்கள் அறிவித்துள்ள நிலையில், தமது மயானங்களில் இவர்களின் உடல்களை புதைக்கவும் அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தனர்.
நீர்கொழும்பு தாக்குதலில் 11இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் அறிந்ததே.
இதேவேளை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய முகம்மது நஸார் முகம்மது அஸாத் என்பவரின் சடலத்தை புதைப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவரின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.