ரெலோவின் உடைவு எதிர்வரும் தேர்தலில் பாதிப்பாக அமையாது.

435 Views

ரெலோவின் செல்வாக்கு வன்னியிலும், கிழக்கிலுமே இருக்கிறது. எனவே அவர்களது உடைவு இங்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை என்று யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

புளொட்டின் வவுனியா மாவட்ட தலைமை அலுவலகம் கோவில்குளத்தில் இன்றையதினம் திறந்துவைக்கபட்டது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்…

வருகின்ற தேர்தல் முக்கியத்துவமானதாகவே இருக்கிறது. எனவே தமிழ்மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து அவர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் சிங்கள தேசியவாதம் பேசப்படுவதுடன் தமிழ் மக்களின் அபிலாசைகள் புறக்கணிக்கப்படுகின்ற நிலமையை பார்க்கின்றோம்.

எனவே நாம் அனைவரும் பிரிந்து நிற்கின்ற போது தமிழ் மக்களின் பலமே பாதிக்கும்.

வன்னிமாவட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் எமது கட்சி சார்பில் இரு வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் மாவட்டகுழு திர்மானித்து அந்த வேட்பாளர்கள் யார் என்பதை இறுதி செய்து அறிவிப்போம். எமது வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் நிச்சயம் இருக்கிறது. தேர்தலின்போது கூட்டமைப்பை விட்டு பலர் சென்றிருக்கின்றார்கள்.சிலர் கட்சியாகவே போயிருக்கிறார்கள் ரெலோவில் இருந்து கூட யாழில் இருந்து சிலர் சென்றிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

கூடுதலாக ரெலோவின் செல்வாக்கு வன்னிமாவட்டத்திலும், கிழக்கிலும் இருக்கிறது. எனவே அந்த உடைவு இங்கு எப்படி ஆதிக்கம் செலுத்தும் என்று தெரியவில்லை.செலுத்தமுடியும் என்று நினைக்கவில்லை.அந்த கட்சியை சேர்ந்த முக்கிய இருவர் பிரிந்துள்ளனர், பெரும்பான்மையானவர்கள் ரெலோவுடன் தான் நிற்கிறார்கள்.எனவே பலமாக இருக்கிறார்கள் என்பதை நம்புகிறேன்.

புதிய அரசில் நாம் எதிர்பார்த்ததைப் போலவே பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தேர்தலை மையப்படுத்தியோஅல்லது தேர்தலிற்கு பின்னரோ மாற்றங்கள் ஏற்பட்டலாம். கோட்டாவை பொறுத்தவரை மாற்றங்கள் ஏற்படும் என்று கருதாவிட்டாலும் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறோம்.

தற்போது குற்றச்செயல்கள் கூடுதலாக உள்ளன. எனவே இங்கு உருவாக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்ற அபிப்பிராயம் சில மக்கள் மத்தியிலே இருக்கிறது.

பொதுவாக இது ஒரு இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால் அது பாதகமான விடயமாகவே இருக்கும்.மக்களின் பாதுகாப்பு என்பது முக்கிய விடயம். அது பொலிஸ் துறையின் கண்காணிப்பாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

ஜனாதிபதியும் இராணுவ பின்புலத்தில் இருந்து வந்தவர் என்றவகையில் சிங்களமக்கள் மத்தியிலும் அந்த அச்சம் இருக்கிறது. காணாமல் போனோர் விடயம் தொடர்பாக என்னைவிட ஜனாதிபதிக்கு அதிகம் தெரியும்.அதற்கு அவர் காரணமாக இருந்திருக்கின்றார்.எனினும் காணாமல் போனவர்கள் இல்லை என்ற கூற்றை நம்பி நாம் விட்டுவிட முடியாது.அவர்கள் இறந்தால் அது எப்படி எங்கு நடந்தது என்பதை கூறுவது அவர்களது கடமை என்றார்.

நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், கட்சியின் முக்கியஸ்தர்களான க. சந்திரகுலசிங்கம்,சு.ஜகதீஸ்வரன், உத்தரியநாதன்,யோகன்,கட்சி தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply