ரி.ஐ.டி. விசாரணைக்காக கொழும்பு சென்ற கணவர் எங்கே? மனைவி முறைப்பாடு

சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரின் விசாரணை ஒன்றுக்காக அழைக்கப்பட்டு கொழும்புக்குச் சென்ற வல்வெட்டித்துறைவாசி ஒருவர் காணாமல் போயிருப்பது யாழ்ப்பாணத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கெருடாவில் தெற்கை சேர்ந்த பரமு விஜயகுமார் (வயது -38) என்பவரே காணாமல் போயுள்ளார் என நேற்று முன்தினம் வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது கணவரைப் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கடந்த 06ஆம் திகதி அழைத்திருந்தனர். அதற்காக அவர் கொழும்புக்குச் சென்று இருந்தார்.

அன்றைய தினத்தில் இருந்து அவருடனான தொடர்பு கிடைக்கவில்லை என முறைப்பாட்டில் மனைவி தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பந்தப்பட்ட நபர் விசாரணைக்கு அன்றைய தினம் சமுகமளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் வடக்கில் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply