‘யுவான் வாங் 5’ கப்பல் விவகாரம்- இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது- சீனா

141 Views

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செல்லும் உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணத்தை நிறுத்துமாறு இலங்கை விடுத்த, கோரிக்கையால் கோபமடைந்துள்ள சீனா, இந்தியாவைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று சீனா தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்ட சீன விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆராய்ச்சிக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இன் வருகையை ஒத்திவைக்குமாறு பீய்ஜிங்கை இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர், வாங் வென்பின் பீய்ஜிங் பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று கூறியுள்ளார்.

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அது தனது சொந்த வளர்ச்சி நலன்களின் மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்கவும் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா, சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது என்றும் வாங் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கடல் பகுதியில் தமது சுதந்திரமான நடமாட்டத்தை வலியுறுத்தியுள்ள சீனா, எந்த ஒரு நாட்டின் இறைமையையும் பாதிக்கும் வகையில் செயற்படவில்லை. அத்துடன் சீனாவும், இலங்கையும் மூன்றாம் நாடுகளை இலக்கு வைக்காமல் தமது இரண்டு நாடுகளிடயே பொதுவான விடயங்களை சுதந்திரமாக தெரிவு செய்கின்றன என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர், வாங் வென்பின் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் ‘யுவான் வாங் 5’ (Yuan Wang 5) எனும் கப்பல் – இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் கப்பல் எனக் கூறப்படுகின்ற போதும், இதை ஓர் உளவுக் கப்பலாகவே இந்தியா பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply