யாழ். மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சிசபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்றும் அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். காங்கேசன்துறையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘தற்போது பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் தீர்மானம் மிக்க சக்தியாக தேசிய மக்கள் சக்தி உள்ளது’.

‘ஆட்சியமைப்பது தொடர்பில் பல்வேறு தரப்புகள் எங்களோடு உரையாடுகின்றார்கள்’. ‘இதுவரைகாலமும் எங்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டு தூற்றியவர்கள் இன்று எங்களைக் காதலுடன் பார்க்கின்றார்கள்’ என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

‘யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உருவாக்கப்படவுள்ள எந்தவொரு உள்ளூராட்சி சபை நிர்வாகங்களுக்கும் இடையூறாக நாங்கள் இருக்கமாட்டோம்’. ‘கடந்த காலங்களில் எங்களைத் தூற்றி இனவாத ரீதியாக தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொண்ட எந்தவொரு அணியுடனும் சேரப்போவதில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார்.

‘யாழ். மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்’ என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.