Home செய்திகள் யாழ்.மாநாகர முதல்வர் கைது – வலுக்கும் கண்டனக் குரல்கள்

யாழ்.மாநாகர முதல்வர் கைது – வலுக்கும் கண்டனக் குரல்கள்

“தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருப்பதையே அரசு விரும்புகின்றது. இதன் வெளிப்பாடாகவே யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் விசாரணையின் நிமிர்த்தம் யாழ். பொலிஸாரால் அழைக்கப்பட்டு அதிகாலை வேளையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தத் திட்டமிட்ட கைது நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

யாழ்ப்பாணம் மாநகர சபையும் ஏனைய மாநகர சபைகளைப் போன்று மாநகர சபைகளுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முனைகின்றபோது இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

அரசு இந்தக் கேவலமான நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும். கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர மேயரை உடனடியாக விடுவிக்க வேண்டும்” – என்றார்.

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

என் மீதான சுரேஷ் பிரேமச்சந்திரனின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன்''

யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டித்துள்ளது.

அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அரசின் பாசிச ஆட்சியை நோக்கிய நகர்வுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இன மற்றும் அரசியல் ரீதியான பாதுகாப்பின்மை மோசமாகியுள்ளது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ். நார முதல்வரை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு மறுப்பு

இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யாழ்.நாகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எழுத்து மூல அனுமதி கோரி முதல்வரைச் சந்திப்பதற்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏன் கைது செய்யப்பட்டார் மணிவண்ணன்

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட யாழ் மாநகர காவல் படை முதல் முறையாக  கடந்த 7ம் திகதி காலை தமது பணிகளை ஆரம்பித்திருந்த போது, “யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூபா5000, மற்றும் வெற்றிலை துப்பினால் ரூபா 2000  அபராதமும் விதிக்கப்படும் என்று  மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், யாழ் மாநகர காவல் படை குழு அணிந்திருந்த சீருடை  குறித்த புகைப்படங்கள் கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன.

மேலும் யாழ் மாநகர காவல் படை குழுவிற்கு வழங்கப்பட்ட சீருடை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல்துறை சீருடை போலவே இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த சீருடை தொடர்பில் மணிவண்ணன், ஊடகங்களுக்கு தமது தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.

அதில்,யாழ். மாநகரை சுத்தமாக வைத்திருக்கும் நோக்குடன், மாநகர சபையினால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானம் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டதாகவும்  மக்கள் இலகுவாக அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையிலேயே தாம் இந்த சீருடையை அறிமுகப்படுத்த தீர்மானித்ததாகவும் கொழும்பு மாநகர சபை ஊழியர்களின் சீருடையை அவதானித்து, அதே போன்றே, தமது ஊழியர்களுக்கும் இந்த சீருடையை அறிமுகப்படுத்தியதாக அவர்  குறிப்பிட்டிருந்தார்.

இந்ந நிலையிலேயே அவர் யாழ். நகர காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் முதல்வர் மணிவண்ணன். இதையடுத்து வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து மணிவண்ணன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான, விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ், மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக, கைது செய்யப்பட்டமை குறித்து வழங்கப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version