யாழ்.மத்திய பேருந்து நிலைய கடை நடத்துனர்களுடன் முதல்வர் சந்திப்பு

45
63 Views

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய தற்காலிக கடை நடத்துனர்களுக்கும் முதல்வர் ஆனல்ட் அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகர சபையின் எவ்வித அனுமதியுமின்றி இயங்கிவரும் மணிக்கடைகள், பழங்கள் விற்பனை, சிற்றூண்டிகள் விற்பனை உள்ளிட்ட தற்காலிக கடைகளை அகற்றுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ் மாநகர முதல்வருக்கும் – 67 தற்காலிக கடை நடத்துனர்களுக்குமிடையில்  யாழ் மாநகர பொது நூலக கேட்போர் கூடத்தில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட முதல்வர் ஆனல்ட்,

“எம்மால் முன்மொழியப்பட்டு மத்திய அரசால் முன்னெடுக்கப்படவுள்ள யாழ் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனுடன் அமைந்த வர்த்தக கட்டடத் தொகுதி செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளும், உயர் மட்ட கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டு கடந்த வருடம் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் 300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பகுதிக்கு முன்னாள் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் நேரடிக் களவிஜயம் செய்து பார்வையிட்டிருந்தார். மேலும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினதும், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களினதும் குழுக்கள் விஜயம் செய்து அவதானித்து பல்வேறு அறிக்கைகளையும் முன்வைத்திருந்தனர். குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனுமதியற்ற விற்பனை நிலயங்களினால் அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாக அவ் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் காரணமாக குறித்த திட்டம் உரிய காலப்பகுதியில் ஆரம்பிக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

எமது அனுமதியின்றி தற்காலிகமாக கடைகளை நடாத்திவரும் 67 கடை நடத்துனர்களுக்கும் பல்வேறு தடவைகளில் எழுத்து மூலமாக கடைகளை அகற்றி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டிருந்தோம். இருப்பினும் எவரும் குறித்த அறிவித்தலை கருத்திற் கொண்டு செயற்படாமை எமக்கு மிகுந்த சங்கடங்களை உருவாக்கியுள்ளது. மாநகரின் நகர அபிவிருத்திக்கு தடையாக தாங்கள் இருந்துவிடக் கூடாது என்பதை அன்புரிமையோடு கூறிவைக்க விரும்புகின்றேன்.

குறித்த திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பித்து வைக்க அடுத்த கட்ட முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இடத்தை திட்டத்திற்கு ஏற்றவாறு ஒழுங்குபடுத்திக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்தான் திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க முடியும். அனைவரும் இதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி தத்தமது கடைகளை அகற்றுவதற்கு முன்வருங்கள் ” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here