யாழ் பாஷையூர், திருநகர் பகுதிகள் முடக்கப்பட்டன; இராணுவக் காவலரண்களும் அமைப்பு

331 Views

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவின் கிராமசேவகர் பிரிவுகளான பாசையூர் மேற்கு, திருநகர் ஆகிய கிராமசேவையாளர்கள் பகுதிகள் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளன.

சுகாதார திணைக்களத்தின் கோரிக்கையின் பெயரில் இராணுவத்தால் இப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது. பாஷையூரிலுள்ள தனியார் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தைக்குச் சென்ற இவர்கள் கடந்த வெள்ளியன்று அங்கிருந்து குருநகர் வந்திருந்தனர். ஞாயிறன்று அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையை அடுத்து சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் – பாஷையூர் பகுதியில் ஏனையவர்களுக்கும் கொரோனாத் தொற்றுப்பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதிகளைச் சாராதவர்கள் மற்றும் வெளியாள்கள் உட்செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டு படையினர் வீதிகளில் கடமை புரிகின்றனர். பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் முடக்கப்பட்ட இப்பகுதிக்கு இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாளையதினம் பொதுமக்கள் போய்வர அனுமதிக்கப்படலாம் என சுகாதாரப் பகுதியினர் இன்று மாலையில் தெரிவித்தனர்.

Leave a Reply