யாழ் நூலக எரிப்பு தமிழினத்தின் எதிர்காலத்தை இல்லாதொழிக்கும் செயல்- வசீகரன்

185 Views

யாழ் நூலக எரிப்பு என்பது தமிழர்களுடைய அறிவாற்றலை அழிப்பதன் மூலம் நம் இனத்தின் எதிர்காலத்தை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட்ட கீழ்த்தரமான செயல் என எங்கட புத்தகங்கள் நிறுவனர் வசீகரன் தெரிவித்துள்ளார்.

யாழ் நூலக எரிப்பின் 40வது நினைவு தினத்தை முன்னிட்டு அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

யாழ் பொதுநூலக எரிப்பு என்பது எம் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டமிக கேவலமான ஒரு தாக்குதல், உயிர்களைக் கொல்லாமல் எமது அறிவாற்றலை அழிப்பதன் மூலம் எம் இனத்தின் எதிர்காலத்தை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட்ட கீழ்த்தரமான செயல். இன்றும் எம்மினம் அழிப்பு நடவடிக்கைகளை, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொண்டபடி தான் இருக்கிறது.

ஆயுதங்கள் கொண்டு முன்னெடுக்கப்பட்ட  யுத்தத்தைவிட பெரும் யுத்தம், வேகமாக, ஆழமாக, கண்ணுக்கு தெரியாத வகையில் எம் இனத்தின் மீது இந்தக்கணத்தில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எம் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைக்கும், நிழல் யுத்தத்துக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தண்டி நாம் சிந்திக்கவேண்டிய விடயங்கள் பல உள்ளன, அவற்றைப்பற்றி நாம் சிந்திக்கொறோமா?

உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்குமென இருந்த நூலகம் எரியூட்டப்பட்டிருக்கிறது, 40 வருடகாலம் கடந்தும் இன்றுவரைக்கும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் அந்தத் துயரநிகழ்வு நினைவுகூரப்படுகிறது, வருடாவருடம் மே 31 மற்றும் ஜூன் 1ஆம் திகதிகளில் நினைவுகூர்ந்து, தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அழுது, கவிதை எழுதி, கட்டுரை எழுதிவிட்டு பின்னர் அடுத்த வருடம் தான் மீண்டும் நூலகத்தைப்பற்றி சிந்திக்கிறார்கள்.

நாம் என்ன செய்திருக்க வேண்டும், இந்த 40 வருட காலத்தில் அழிக்கப்பட்ட யாழ் பொதுநூலகத்துக்கு பிரதியீடாக அதைப்போல 40 மடங்கு நூல்களைக் கொண்ட நூலகமொன்றை கட்டியமைத்திருக்க வேண்டாமா, உலகின் பல்வேறுநாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்துக்கு அதுவொரு கடினமான செயலல்ல.அதைவிடுத்து இன்னும் எத்தனைகாலத்துக்கு நாம் அழுதுகொண்டிருக்கப்போகிறோம்? என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply