Tamil News
Home ஆவணங்கள் யாழ்.நுாலக எரிப்பு: ‘வரலாறுகள் பேணப்பட வேண்டும்’ -ஐ.வி.மகாசேனன்

யாழ்.நுாலக எரிப்பு: ‘வரலாறுகள் பேணப்பட வேண்டும்’ -ஐ.வி.மகாசேனன்

‘சர்ச்சைகள் களையப்பட வேண்டும். வரலாறுகள் பேணப்பட வேண்டும்’ என அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி.மகாசேனன் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்  40ஆண்டுகள் கடந்தாலும் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம் வரை மாறாது உள்ளது.

இந்நிலையில், யாழ் நுாலகம் சிறீலங்கா அரசால் எரிக்கப்பட்டமை குறித்து, அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி.மகாசேனன் ‘இலக்கு’ இணைய தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில்,

இலங்கையில் இனவழிப்பு என்பது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக, நீண்ட காலமாகவே, தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இன்று அதிகமாக உரையாடப்படும், தொல்லியல் திணைக்களம், மற்றும் மகாவலி திணைக்களங்கள் ஊடாக, மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு போன்றே 1981 ஜூன் 01 எமது கல்வி புலமைச்சொத்தின் மீது திட்டமிட்டு இலங்கை அரசாங்கம், இனவழிப்பை அரங்கேற்றியது.

1981 ஆண்டு நூல்கள் மீது தீயை வைத்தவர்கள் 2009 ஆண்டு கொத்துக்கொத்தாக ஈழத்தமிழர்களை கொன்று குவித்தார்கள். எதற்கும் இன்று வரை நீதி கிடைக்கபெறவில்லை என்பது ஈழத் தமிழர்களின் துயரமாகும்.

புத்தகங்கள் ஒரு அழியா சொத்தாகும். மக்கள் இறக்கிறார்கள். ஆனால், புத்தகங்கள் ஒரு போதும் இறக்காது. எந்த மனிதனும், எந்த சக்தியும், நினைவகத்தை ஒழிக்க முடியாது. இந்தப் போரில், புத்தகங்கள் ஆயுதங்கள், என்று நமக்கு தெரியும்.

எமது துயரங்களை, அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும். எம் வரலாறுகளை, சரியான வகையில், அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும். என்றோ ஒரு நாள் நிச்சயம், நீதி கிடைக்கும் நீதி கிடைக்கும் போது கடந்த கால வரலாறுகளும் எம் சந்ததிக்கு அறிய வேண்டும். அவ்வாறேனில் நிச்சயமாக, எமது வரலாறுகளை கடத்த வேண்டியது அவசியமாகும். ஈழத் தமிழர்கள், தொடர்ச்சியாகவே, அதில் தவறிழைத்துக் கொண்டே வருகின்றார்கள். இன்றுவரை நூலக எரிப்பு சார்ந்த நூலக எரிப்பின் திகதி சார்ந்தே, பல சர்ச்சைகள் நிகழ்கின்றது. சர்ச்சைகள் களையப்பட வேண்டும். வரலாறுகள் பேணப்பட வேண்டும்.

Exit mobile version