யாழ்ப்பாணத்தில் நாளை முதல் தடுப்பூசி-50 ஆயிரம் மருந்துகள் இன்று வந்து சேர்கின்றன

163 Views

சீனத் தயாரிப்பு சினோபார்ம் தடுப்பூசிகள் ஐம்பதாயிரம் மருந்துகள் இன்று யாழ்ப்பாணம் வந்து சேர விருக்கின்றன. அவை வந்து சேர்ந்ததும் நாளை காலை 8 மணி முதல் குடாநாட்டில் பரவலாக பல இடங்களிலும் பொது மக்களுக்கு அவற்றை விரைந்து ஏற்றும் பணியில் ஈடுபடுவதற்கு யாழ்.மாவட்ட சுகாதாரத்திணைக்களம் முழுத் தயார் நிலையில் இருக்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று யாழ்ப்பாணம் பண்ணையில் யாழ்.மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி முடிவு செய்யப்பட்டதாக அறியவந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் சாரம்சம் வருமாறு:-

யாழ்.மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் உள்ளன. அவற்றை ஒட்டி பிரதேச செயலகப் பிரிவுகளும் உள்ளன. ஒவ்வொரு பிரிவினதும் சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலர், பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகிய மூவரை உள்ளடக்கிய குழு அப்பிரிவுக்கான தடுப்பூசி வழங்கலுக்குப் பொறுப்பாக இருந்து விடயங்களைக் கையாளும்.

ஒவ்வொரு பிரிவிலும் அதிகம் தொற்றுப் பாதிப்புக்குள்ளான கிராம சேவையாளர் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பிரிவுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும். கிராம சேவையாளர் பிரிவைத்தேர்ந்தெடுத்து, அப்பிரிவில் உள்ள – அதிகம் தொற்றுப் பாதிப்பக்கு உள்ளாகக்கூடிய – ஆள்களை அடையாளம் கண்டு, ஊசி ஏற்றலுக்கு, கிராம சேவையாளர்கள் உதவியுடன் அழைத்து வரும் பொறுப்பை சம்பந்தப்பட்ட பிரதேச செயலர் கவனிக்க வேண்டும். தடுப்பூசி ஏற்றலுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்து, ஊசிகளை வழங்குவதற்கான ஆளணியினரை ஒழுங்கு செய்து, தடுப்பூசி களஞ்சியப்படுத்தி, பதிவுகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு சுகாதார வைத்திய அதிகாரி பொறுப்பாவார்.

அது தொடர்பில் ஒழுங்கைப்பேணி, பாதுகாப்பு வழங்கும் கடமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உரியது. தற்போது வரும் ஐம்பதாயிரம் தடுப்பூசிகளும் அதிகம் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு கூட, ஏனைய பிரிவுகளுக்கு குறைய என்ற அடிப்படையில் பிரித்து வழங்கப்படும் என்று நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அறியவந்தது.

இதேநேரம் கிராம சேவையாளர்கள் தற்சமயம் பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றமையால் அவர்களின் சேவையைப் பெறுவதிலும், அவர்கள் மூலம் தடுப்பூசி ஏற்றுவதற்குரியவர்களை அடையாளம் கண்டு, தடுப்பூசி ஏற்றும் மையங்களுக்கு அழைத்து வருவதிலும் உள்ள சிக்கல்கள் குறித்தும் உரை யாடப்பட்டுள்ளது.

இதேநேரம், வரும் தடுப்பூசிகளை பிரதேச ரீதியாகப் பிரித்து வழங்காமல், மக்களுடன் அதிகம் தொடர்பாடக் கூடிய – அத்தியாவசிய சேவைகளில் இருக்கின்ற- ஆள்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முதலில் வழங்குவதே உசிதமானது என்ற ஒரு யோசனை மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

நேற்று யாழ்.மாவட்ட சுகாதார சேவைத் திணைக்களக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை திணைக்களம் உடனடியாகத்தனது மேலிடத்துக்கு அனுப்பியுள்ளது. அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் அந்த முறைமையைப் பின்பற்றி தடுப்பூசி வழங்கலை சுகாதாரத் திணைக்களம் நாளை ஆரம்பித்து விடும். எனினும் மாகாண ஆளுநர் இன்று இவ்விடயத்தில் தலையிட்டு தடுப்பூசி வழங்கல் முறைமையை மாற்றும் படி பரிந்துரைத்தால், அதற்கேற்ப முறைமை மாற்றப்படவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது

Leave a Reply