ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் நான்கு நாள் இலங்கைப் பயணம் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்த விஜயத்தின் விளைவுகளை அறிவதற்கு அடுத்த செப்டெம்பர் வரையில் பொறுத்திருக்க வேண்டியுள்ளது.
ஆனால் அவரது விஜயத்தின் போதான செயற்பாடுகளையும், அவரது பிரதிபலிப்புக்கள் சிலவற்றையும் உற்றுநோக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த தரப்புக்களின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு உதவுவதாக இருக்கும். அத்துடன் உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியிருக்கும் சில நிலைப்பாடுகள் முரண்பாடுகளையும் ஏற் படுத்தியிருக்கின்றது.
முதலாவதாக ஒருவிடயத்தினை தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் இலங்கை விஜயமானது இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வமான அழைப்பில் இடம்பெற்றதொன்றாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த இரண்டு அமர்வுகளிலும் உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கை மற் றும் அமர்வு ஆரம்ப உரைகளில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக குறித்துரைக்கப்பட்டிருந்தது.
சுட்டிக்காட்டப்பட்டு கரிசனைகள் வெளிப் படுத்தப்பட்ட அத்தனை விடயங்களையும் ஆட்சி யில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முழுமையாக நிராகரித் திருந்ததோடு ‘தேசிய உள்ளகப் பொறிமுறை’ மட்டுமே அமுலாக்கப்படும் என்றும் வெளிப் படையாக தெரிவித்திருந்தது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரை களையோ யோசனைகளையோ தீர்மானங்களையோ ஏற்றுக்கொண்டதாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.
அவ்வாறான நிலையிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரை நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு உத்தியோக பூர்வ மாக அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது என்றால் நிச்சயமாக அவரை எதிர்கொள்வதற்கான அத்தனை வியூகங்களையும் அது வகுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்தவகையில் பார்க்கின்றபோது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரதிநிதிகளுடான சந்திப்பில் ஐ.நா.உயர்ஸ்தானிகர்வெ ளிப்படுத்தியிருக்கும் விட யங்கள் அரசாங்கத்துக்கு சாதகமானவையாக அமைந்திருக்கின்றன.
குறிப்பாக, அரசாங்கம் தாம் ஆட்சிக்கு வந்து சொற்ப நாட்களே ஆகின்றன ஆகவே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெ டுப்பதற்கு கால அவகாசம் தேவையாக உள்ளது என்பதை உயர்ஸ்தானிகர் ஏற்றுக் கொண்டிருக் கின்றார். அதுமட்டுமன்றி, அனைத்துப் பிரஜை களையும் சமத்துவமாக நடத்துவதும், பொருளாதார ரீதியாக நாடு மீளக் கட்டியெழுப்புவதையே முதன்மை விடயமாகவும் அரசாங்கம் கொண்டிருக்கின்ற ஈடுபாடுகளையும் அவர் வரவேற் றுள்ளார்.
அத்துடன், தேசிய ஒற்றுமை, ஒருமைப் பாட்டு அலுவலகம் , வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு பணியகம் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச கண்துடைப்புக் கட்டமைப்பு அதிகாரிகளை மூடிய அறையில் சந்தித்த உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் அக்கட்டமைப்புக்களின் செயற்பாடுகளை அங்கீகரித்துள்ளார்.
மேலும், அக்கட்டமைப்புக்கள் தொடர்ச்சி யாக செயற்பட வேண்டும் என்பதையும், அக்
கட்டமைப்புக்களின் வினைத்திறனான செயற்பாடு களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மலினப்படுத்தும் உள்நோக்கத்துடன் பொருளாதார நெருக்கடிகளை முன்னிலைப்படுத்தும் அரசாங்கத்தின் நகர்வுக்கு உயர்ஸ்தானிகர் வரவேற்ப ளித்துள்ளமை கவலைக்குரியது.
அதேபோன்று, பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக நிராகரிக்கின்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆட்கள் பற்றி அலு வலகம் மற்றும் இழப்பீட்டு பணிகயம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு அலு
வலகம் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளித்துள் ளமையானதும் துரதிஸ்டவசமானது.
அரசாங்கத்துக்கான பாராட்டும், அவர்களின் தேசிய நல்லிணக்க முயற்சிகளை எடுக்கவுள்ளதாக கூறிய விடயங்களுக்கு வரவேற்பு அளித்ததும், உள்ளகப் பொறிமுறைக் கட்டமைப்புக்களை அங்கீகரித்து அவற்றுக்கு ஒத்துழைப்புக்களை அளிப்பதாக கூறியதும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் பாரதூரமான விடயமாகும்.
அடுத்த செப்டெம்பர் மாத கூட்டத்தொட ரில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக கொண்டுவரவுள்ள புதிய பிரேரணையையும் வெகுவாக மலினப்படுத்தும் செயலாகவே இருக்கும்.
அதுமட்டுமன்றி, உயர்ஸ்தானிகரின் அறிக்கையைக்கூட அவரது கருத்துக்களே வலுவிழக்கச் செய்யும். ஏனென்றால், பொறுப்புக்கூறல் விடயங் களை உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டும் போது, அரசாங்கம் நிச்சயமாக தமது செயற்பாடுகளுக்கு உயர்ஸ்தானிகர் அளித்த வரவேற்பை முன்னி லைப்படுத்தி பதிலளிக்கவே செய்யும்.
தேசிய உள்ளகப் பொறிமுறைகளை முன்னிலைப்படுத்தி அதன் செயற்பாடுகளை நியாயப் படுத்தி அரசாங்கம் தனது பதிலளிப்புக்களை வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இட மில்லை.
அதேநேரம், உயர்ஸ்தானிகர் தனது உத்தி யோக பூர்வமான விஜயத்தின் இறுதி அம்சமாக கொழும்பில் நடத்திய ஊடகவியாலாளர் சந்திப் புக்கு முன்னதாகவே ஜனாதிபதி அநுரகு மாரவைச் சந்தித்திருந்தார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க விடயமாகின்றது. அதன்பின்னர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று தேவை என்பதை வெளிப்படுத்தவில்லை.
அதேநேரம், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் அவரது விஜயத்துக்கு முன்னதாக வும், அவருடனான சந்திப்பின்போதும் பாதிக்கப்பட்ட மக்களாலும், சிவில் அமைப்பின் பிரதி நிதிகளாலும், தமிழ் அரசியல் தலைவர்களாலும் வாய்மூலமாகவும், எழுத்துமூலமாகவும் முன் வைக்கப்பட்டன. ஆனால் அந்த விடயங்கள் பற்றி உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் வாய் திறக்கவே இல்லை. ஒன்றரை தசாப்தமாக பொறுப்புக்கூறலுக்காக போராடிவரும் அனைத்து தரப்புக்களுக்கும் இதுவொரு பெரிய ஏமாற்றமாகும்.
அதேபோன்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கீழ் செயற்படும் இலங்கையில் நடைபெற்ற மீறல்கள் பற்றிய சாட்சியங்களை திரட்டுவதற்காக உருவாக்கப் பட்டுள்ள ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட் டம்’ முக்கியமானது. அதன் அதிகாரிகளை உள்நாட்டுக்குள் பிரவேசிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப் பதற்கு உயர்ஸ்தானிகர் ஆகக்குறைந்தது வேண்டுகோள்களையோ வலியுறுத்தல்களையோ செய்யவில்லை. இதனால் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் ஆயுட்காலம் எப்படியிருக்கும் என்ற கேள்விகள் வலுவாக எழுந்திருக்கின்றன. ஒருபக்கத்தில் ஐ.நா.வின் நிதி நெருக்கடி குறித்த செயற்றிட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தவுள்ளது.
இதேநேரம், ஐ.நா.உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் செம்மணிக்குச் சென்றமையும் அங்குள்ள மனித புதைகுழியைப் பார்வையிட்டமையும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்து அவர்களின் துயரங்களை நேரடியாக அறிந்துகொண்டமையும் நிம்மதி அளிக்கின்றது. செம்மணிப்போராட்டம் தமிழினத்தின் திரட்சியாக அமைந்திருக்க வேண்டும். துரதிஸ்டவச மாக கட்சி அரசியலும், உட்கட்சி மோதல்களும் உணர்வுரீதியான ‘அணையா விளக்கு’ போரா ட்டத்தின் வீச்சினை குறைத்து விட்டன.
அதேநேரம், உயர்ஸ்தானிகர் முள்ளிவாய்க்காலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப் பட்டபோதும், அவர் அங்கு சென்றிருக்கவில்லை. இருப்பினும் அவர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டமையும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தமையும் ஆறுதல் அளிக்கின்றது.
செம்பணிப் புதைகுழி உட்பட மனிதப்பு தைகுழிகள் சம்பந்தமாக சர்வதேச தரத்துடனான ஆய்வுகளை முன்னெடுத்து உண்மைகளை கண்ட றிய வலியுறுத்தியிருப்பது நிம்மதி அளிக்கின்றது. பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், நீக்கப்படும் வரையில் அச்சட்டத்தின் இடை நிறுத்தம், அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங் களை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப் பாடுகளை நேரடியாக கூறாது விட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்துவதற்கு சர்வதேச தரத்திலான தீர்வுகள் அவசியம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஆழமான அடையாள அரசியல் கலாசாரத்திலிருந்து விடுபடுவதற்கான அரசாங்கத் தின் பேரவாவை கண்டதாக உயர்ஸ்தானிகர் கூறியிருக்கின்றார். ஆனால் அரசாங்கத்துக்குள் ஒழிந்திருக்கும் அடையாள அரசியல் நீக்கத்தின் பின்னால் உள்ள ‘ஒருகட்சி ஒற்றை ஆட்சி’ கோட்பாட்டை அறிந்து கொள்வதற்கு சில காலம் தேவைப்படலாம்.