யாரிந்த மாவீரர்கள் ? – சாவித்திரி அத்துவிதானந்தன்

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்! | SamugamMedia

“பிறந்தவர் யாவரும் இறப்பது

உறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் – மானம்

துறந்தறம் மறந்தும் பின் உயிக் கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பாரோ? ”

இது பாரதிக் கவிஞனுடைய ஆதங்கம்.

“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!”

இது பாரதிதாசனுடைய அறைகூவல்.

இவர்களின் ஆதங்கத்துக்கும் அறைகூவலுக்கும் பதில் கொடுக்க அல்லது உயிர் கொடுக்க ஈழத்தின் மான மறவர்கள் எழுந்தார்கள்.

‘அந்தியர் வந்திங்கு புகல் என்ன நீதி?’ என்று, எரிமலையாகிக் களமாடினார்கள்.

பிறந்த மண் மீது கொண்ட நேசிப்பில்,தேச விடுதலை என்னும் விடியலுக்காக மரணத்தை யாசித்து நின்று, மாவீரர்களாய் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய எங்கள் தேசத்தின்  மாதவப்  புதல்வர்களைப் போற்றியும் வணங்கி வழிபட்டு நிற்கவும் இதோ 2024 இன் நவம்பர் 27 மாவீரர் நாள் எம் எல்லோரையும் உணர்வோடு வரவேற்கிறது.

மாவீரர்கள்.

இவர்கள் யார்? எப்படிப்பட்ட மனிதர்கள்? ஒவ்வொரு ஆண்டும் இந்த நவம்பர் 27ஐ உலகத்தமிழினம் முழுவதும் உணர்வு மேலிட நினைவு கூர்ந்து தலை சாய்த்து வணங்குகிறதே,.

அது எதனால் ?

இது போன்ற இன்னும் பல கேள்விகளுக் கெல்லாம் விடை வேண்டுமென்றால், அதற் கான தேடலுடன் தமிழனுடைய விடுதலை வரலாற்றி னுள்ளே நாம் பயணிக்க வேண்டும்.

அங்கே..

காலம் காலமாய்ப் பகைவனிடம் சிக்கிக்கிடக்கின்ற எங்கள் ஈழத்திருநாட்டை  மீட்டெடுக் கும் கனவுடன், ஆயிரமாய்.. பல்லாயிரமாய் . லட்சங்களாய்.. தமிழ் இளைஞர்களும்  யுவதிகளும் உறுதி மேலிட அணிவகுத்து நிற்கிறார்கள்.

தாயாய், தந்தையாய், அண்ணனாய், அன்புக்கினிய தோழனாய் ஒரு பெருமகன் அங்கே அவர்களை அரவணைத்து வழிநடத்துகிறான். தமிழ்ப் பெருவிருட்ச வேர்களில் வியாபித்துக் கிடக்கும் மண் பற்றும் வீரமும் விழுதுகளில் பரவி, வீரம் விளைக்கிறது. ஒளி படைத்த கண்களுடன், உறுதி கொண்ட நெஞ்சினர்களாய் அந்தப் பிள்ளை கள் நிமிரிந்து நடக்கிறார்கள்.

விழுதுகளின் வீரம் விந்தைகள் பல புரிய பகைவன் திகைத்து நடுங்குகிறான். வெற்றிகள் பலவும் சாதனைகளும் தமிழனுக்குச் சொந்தமாகின் றன. மண் விடுதலைக்கான போராட்டம் கருக் கொண்ட ஆரம்ப நாட்களில், பகைவனுடன் போரி டுவதற்கு தேவையான ஆயுதங்கள் போராட்ட அமைப்பிடம் இருக்கவில்லை.அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி உட்பட, பல வேறு வகையான சிரமங்கள் இருந்தன. ஆக ஒரு பகீரதப் பிரயத்தனமாகவே இருந்தது என்று சொல்லலாம். சிங்கள இராணுவத்திடம் பிடிபட நேர்ந்தாலும், ஆயுதத்தை அவனிடம் பறிகொடுக்கக்கூடது என்றால், ‘உயிரை விட ஆயுதம் மேலானது’ என்ற எண்ணக்கரு உருவாகி, போராட்ட வீரர்கள் மத்தியில் பேணப்பட்டு வந்தது. அதுவே பின்னாளில், உயிருடன் பிடிபடவும் ஆயுதங்களை எதிரியிடம் பறிகொடுக்கவும் கூடாது’ என்ற உறுதிமிக்க கொள்கையாகப் போராட்ட வீரர்கள் அனைவராலும் கடைப்பிடிப்பட்டு வந்தது.

அந்த ஆரம்ப காலங்களில், விடுதலைப் போராட்டம் பற்றியோ, போராளிகள் பற்றியோ தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அறிதலோ அல்லது புரிதலோ ஏற்பட்டிருக்கவில்லை.

1982 நவம்பர் மாதத்தில் ஒரு நாள்.யாழ் குருநகர்ப் பகுதியில் அந்தப் போராளியின் மறைவிடம் சிங்கள ராணுவத்தால் சுற்றி வளைக்கப்படுகிறது. சற்றேனும் எதிப்பார்த் திராத அந்தச் சூழலில் இருந்து தப்பிக்க, அவன் சுவர் ஏறிக் குதிக்கிறான். குதித்தவன் மீது துப்பாக்கி வேட்டுகள் பாய்கின்றன. இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்கும் நிலையிலும் தட்டுத்தடுமாறி ஓடுகிறான்.

*உயிருடன் பிடிபடக்கூடாது.. ஆயுதம் பறி கொடுக்கக் கூடாது” இந்தக் கொள்கை முழுமை பெற வேண்டும்.

இடுப்பில்  சொருகி வைத்திருந்த சுடுகல னைத் தொட்டுப்பார்த்தபடி தனது சக்தியெல்லாம்  திரட்டி ஓடியவன், தோழர்களின் மற்றொரு மறைவிடத்தை அடைகிறான். அங்கே அவர்களை இனங்கண்ட பிறகுதான் இடுப்பிலிருந்த ரிவோல் வரை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மயங்கிச் சாய்கிறான் அந்த 21 வயது இளைஞன். பின்னர், தமிழகம் கொண்டு செல்லப்பட்டு, அங்கே நவம்பர் இருத்தியேழாம் நாள் அந்தப் போராளியின் உயிர் பிரிகிறது.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் வீரச்சாவைத்- தழுவிக் கொண்ட அந்த மாவீரன் தான் சங்கர் (லெப். சங்கர்) [போராட்டத் தின் முதல் களப்பலி நிகழ்ந்த நவம்பர் 27 ஆம் நாளே பின்னாளில் எங்கள் தேசத்தின் மாவீரர் நாள் என்று பிரகடனம் செய்யப்பட்டது).

1983 யூலை 15.யாழ் மீசாலையின் மறைவிடமொன்றில் சீலன், ஆனந்த், கணேஷ் மூவரும் ராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட, அங்கே கடும் சண்டை மூளுகிறது. ஒரு கட்டத்தில் சீலனுடைய முழங்காலில் குண்டு பாய அவனால் ஒரு அடி கூட நகர முடியாத நிலை ! ராணுவத்திடம் தான் பிடிபடப்போவது நிச்சயம் என்று அவனுக்கு தெரிந்துவிட்டது. தோழன் கணேஷ் இடம் உத்தர விடுவது போலச் சொல்கிறான். “ என்னைச் சுடடா! சுடு! சுட்டுப் போட்டு ஆயுதத்தை எடுத்துக் கொண்டு ஓடு!”அதேவேளை ஆனந்தின் நிலைமையும் கவலைக்கிடமாகி இனி எதுவும் செய்ய முடியாது என்ற கட்டத்துக்கு வந்திருந்தது.

‘ஐயோ! என்னினிய தோழனை நானே என்கையால் சுடுவதா?’ செய்வதறியாமல் நின்ற கணேஷைப் பார்த்து மறுபடியும் சீலன் உரத்துச் சொல்கிறான், “என்னைச் சுடடா!” ஆனந்திடமிருந்தும் இதே கோரிக்கை வருகிறது. யோசிக்க நேரமில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் ஆபத்துப் பொறிக்குள் சிக்க வைத்து விடும்.

“ என் தோழர்கள் உயிருடன் பிடிபடக் கூடாது!’ தோழர்கள் இரண்டு பேரையும் சுட்டு விட்டு ஆயுதங்களையும் சாமர்த்தியமாக எடுத்துக் கொண்டு தப்பியோடுகிறான் கணேஷ். வரித்த கொள்கையை நிலை நாட்ட, தங்கள் உயிரையும் கொடுக்தச் சித்தமாயிருந்த எங்கள் மறவர்களின்- மாவீரர்களின்- உறுதியைக் கூறும் மற்றொரு சம்பவம் இது.

அடுத்து யூலை 23, 1983 இல் நடத்தப்பட்ட திருநெல்வேலித் தாக்குதல் – விடுதலைப் போராட் டப் பாதையில் ஒரு மாபெரும்  திருப்பு முனையை ஏற்படுத்தியது. அன்றைய தினம் வீரச்சாவைத்  தழுவிக் கொண்ட செல்லக்கிளி அம்மானை நினைத்துக் கொண்டால் இப்பொழுதும் மனசுக் குள் ஒரு வித பாசம் கலந்த மரியாதை ஏற்படுகிறது.

இது மட்டுமல்ல..

மாவீர்களாகிப் போன – எங்கள் விடுதலைப் போராட்டத்தின் மூத்த உறுப்பினர்களின் பெயரை  யார் உச்சரிக்க நேரிட்டாலும் அல்லது நாமே நினைத்து கொண்டாலும் மனதுக்குள் தோன்றக் கூடிய ஒரு சந்தோச சிலிர்ப்பு அற்புதமானது.

பண்டிதர், ரஞ்சன் லாலா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம் மாஸ்டர், கிட்டண்ணா என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல் லும். மக்களிடையே விடுதலை பற்றிய ஒரு  விழிப்புணர்வை ஏற்படுத்த, இரவு பகல் பாராமல் வன்னியின் கரடுமுரடான மண் வீதிகளில் மிதிவண்டிப் பயணம் செய்த கப்டன் பண்டிதரை நினைக்கும் போதெல்லாம் – கூடவே இருந்து தொல்லை கொடுத்த ஆஸ்துமா வியாதியைக் கூடப் பொருட்படுத்தாமல்  அந்தவீரன் மூச்சுத் திணறத் திணற மேற்கொண்ட மிதிவண்டிப் பயணங்கள் பற்றி அறிந்த சேதிகள் நெஞ்சில்  வந்து நெகிழ வைக்கும்!

குமரப்பா புலேந்திரனை நினைத்துக் கொண்டால், இலங்கை –  இந்திய கூட்டுச் சதிக்குள் சிக்கி  – தம்மைத்  தாமே அழித்துக் கொண்ட அந்த தன்மான வீரம் நெஞ்சில் மோதி நிமிர வைக்கும்!

நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு- அகிம்சை தேசத்தின் முகத் திரை கிழித்த எங்கள் பிள்ளை திலீபனை நினைத்துக் கொண்டால், அன்று அந்த வீரமகனுடைய பசியை ஆற்றத்துடித்த ஒவ்வொரு  தாயுள்ளமும் பதறித் துடிக்கும்!

கிட்டு என்ற பெருவீரனை நினைத்துக் கொண்டால், கடல் நடுவே தோழர்களும் தானுமாய்த் தமிழ் மானம் காத்த அந்தக் கற்பனைக் கெட்டாத அற்புத சாதனை நெஞ்சை நிறைக்கும்!

இவர்களைப் போன்ற இன்னும் எத்த னையோ மாவீரர்களின் அர்ப்பணிப்புகள் பலம் கொண்ட அத்திவாரமாய் நிற்க- தமிழனுடைய விடுதலைப் போராட்டம் வெவ்வேறு பரிமாணங்க ளில் பாரிய வளர்ச்சி கண்டது. ஈட்டிய வெற்றிகள், சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல.

தனி ஒருவன் பெரும் படையணியாக எழுந்து பேரதிசயம் நிகழ்த்திய போராட்ட வடிவமாய் உயிராயுதங்கள் தோற்றம் பெற்றன. தற்கொடையாளர்களின் சகாப்தம் பரிணாமம் கொண்டது.

சிறு வயதில் இருளைக் கண்டு பயப் பட்டவள், பின்னாளில் அங்கயற்கண்ணியாய் -இரவின் இருளில் பதினேழு கடல் மைல்களை நீந்திக் கடந்து- சிங்களக் கடற்படையின் பெரு மிதமாய்  எங்கள் கடலில் நிமிர்ந்து நின்ற – 326 அடி நீள, 51 அடி அகல பிரமாண்ட கட்டளைக் கப்பலைத் தகர்த்தெறிந்து தானும் கடல் மடியில் சங்கமம் ஆகிறாள் அந்த மாவீராங்கனை.

“எங்கட கடலில எங்கட மக்களை அழித்த வர்களை அதே கடலிலேயே துவம்சம் செய்ய வேணும்” என்று சபதம் எடுக்கிறார்கள் தோழர்கள் மதனும் வரதனும், கிளாலிக் கடலில் இதற்காக அறுபது சவால் நிறைந்த இரவுகளைச் சந்தித்த பிறகு 26-08-93 நிலா, முழுநேர விடுமுறை எடுத்துக்கொண்ட அந்த இரவில் எதிரியின் P115, P121 வாட்டர் ஜெற் படகுகளைத் துவம்சம் செய்து சபதம் நிறைவேற்றினார்கள் தோழர்கள்.

மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு வழியில்ராணுவக் கெடுபிடிகளை எல்லாம் தாண்டி, மூன்று வருடப் பிரிவின் துயர் சுமந்து, அம்மா தன்னைப் பார்ப்பதற்காக முன்தினம் யாழ் வந்திருக்கும் சேதியை அறியாமலேயே மதனும்  மட்டக்களப்பில் தன் குடும்பமே ராணுவத்தினால்

கொல்லப்பட்டு விட்டதாகக் கிடைத்த சேதி யால் துயரம் சுமக்க, விடுதலை தாகத்துக்கு மேலும் உரமூட்டி உலாவந்தவன், அவர்கள் தப்பி உயிரோடிருக்கிறார்கள் என்ற சேதியை அறியாமலேயே வரதனும் கடலோடு கலந்து போனார்கள்.

இவர்கள் எங்கள் தேசத்தின் மாவீரக் கண் மணிகள்.விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒவ்வொரு வெற்றியையும் தீர்மானிக்கும் முது கெலும்புகளாய் செயற்பட்டு ஊன் உறக்கம் தொலைத்து- கருமமே கண்ணாகி எதிரி நிலைக ளில் வேவுத்தகவல்கள் பெற்று உதவிய உறங்காத கண்மணிகளாம்  வேவுப் போராளிகள் அனைவரும் வந்தனத்துக்குரிய எங்கள் தேசத்தின் மாவீரர்கள்.

‘யாரிந்த மாவீரர்கள்?’ என்ற தலைப்பின் கீழ் இங்கே பதிவு செய்யப்பட்டிருப்பவை, குறிப்பிட்ட வெகு சில உதாரணங்கள் மட்டுமே. இவர்களைப் போன்ற இன்னும் பல்லாயிரக் கணக்கான மாவீரச் செல்வங்கள் போட்டுச் சென்ற உறுதியான அத்திவாரத்தில் தான் எங்கள் தேசவிடுதலைப் போராட்டம் உலக வல்லாசுகளே திகைக்கும் அளவுக்கு உச்சம் தொட்டதும், தமிழன் என்றொரு இனம் – தன்மானம், வீரம், அர்ப்பணிப்பு போன்ற உயர் குணங்களின் அடையாளமாய் மானுட குலத்தின் மகத்துவம் சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பதை உலகம் அறிந்து கொள்ளவும் வழி செய்திருக்கிறது என்பது தமிழினத்துக்கான பெரும்பேறு!

தேசம் ஒரு நாள் விடியும் என்ற அசையாத நம்பிக்கையோடு தங்கள் இன்னுயிர்களை ஈந்து கண்மூடிக்கிடக்கும் எங்கள் மாவீரர்களை வணங்கி, வழிபடுதலுடன் மட்டும் நின்று விடாமல், அந்த மாதவப் புதல்வர்களின் குறிக்கோளை நிறை வேற்றும் அடுத்தடுத்த நகர்வுகளில் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் ஒரு மனதோடு ஒன்றிணைந்து  செயற்பட வேண்டும்  என்பதே இன்று எமக்கு முன்னாலிருக்கும் வரலாற்றுக் கடமை. சிந்தித்து செயற்படுவோம்!