இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தி யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 04 ம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இவ்விஜயமானது வர லாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமைந்திருந் தது. இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த விஜயம் இடம்பெற்ற நிலையில் மலையகக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
அத்துடன் 7 முக்கிய ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன. இவற்றுள் இரு
நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலை யில் பல்வேறு வலிகளையும் சுமந்து வாழும் மலையக மக்களின் அபிவிருத்தி குறித்து காத்திரமான பேச்சுவார்த்தைகளில் மலையக தலைவர்கள் ஈடுபட வேண்டுமென்றும், இம் மக்களின் சமகால வாழ்வியலின் உண்மை நிலைமைகள் மோடியிடம் முன்வைக்கப்பட்டு பரிகாரத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் மலையக மக்களிடையே எதிர்பார்ப்புகள் வலுப்பெற்றிருந் தன. அத்துடன் மலையக மக்களின் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வரும் குடியிரு ப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு தனி
வீட்டுக் கலாசாரத்தை மேலெழும்பச் செய்ய வேண்டியதன் அவசியத்தை மோடியிடம் வலியுறுத்துமாறும் புத்திஜீவிகள் மலையகத் தலைவர்களிடம் கருத்துக்களை முன்வைத் திருந்தனர்.
‘நீங்கள் என்னை சங்கிலிகளால் கட்டிப் போடலாம். சித்திரவதை செய்யலாம். நீங்கள் இந்த உடலை அழிக்கக்கூடச் செய்யலாம். ஆனால் உங்களால் எனது சிந்தனையை ஒரு போதுமே சிறையில் அடைக்க முடியாது’ என்ற கொள்கைப்பற்றுடன் செயற்பட்ட மகாத்மா காந்தி போன்ற பெருந்தலைவர்களை தன்னகத்தே உள்ளடக்கிய மிகப்பெரும் நாடு இந்தியாவாகும். உலக அரங்கில் இந்தியாவுக்கென்று ஒரு தனி மதிப்பு இருக்கின்றது. கல்வி, கலாசாரம், தொழிநுட்பம் என்று பல துறைகளிலும் அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்கினை எட்டிப்பிடித்துள்ள இந்தியாவின் நிலைமை கண்டு ஏனைய உலக நாடுகள் வியப்புடன் இந்தியாவை நோக்கி வருகின்ற மையும் புதிய விடயமல்ல. ’இந்திராவே இந்தியா. இந்தியாவே இந்திரா’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அன்னை இந்திராகாந்தி போன்ற தலைவர்கள் இந்தியாவின் எழுச்சிக்கு அடித்தளமிட்டிருக்கின்றார்கள்.
மொரார்ஜியும் ஜயவர்தனாவும்
இந்தியா இலங்கையின் அயல்நாடு மட்டுமன்றி நேசநாடாகவும் விளங்குகின்றது. இவ்விரு நாடுக
ளும் கலாசார, வர்த்தக, பாரம்பரிய மற்றும் அரசியல் பிணைப்புக்களைக் கொண்ட நாடுக ளாகவும் காணப்படுகின்றன. இலங்கையின் சில செயற்பாடுகள் இந்தியாவிலும், இந்தியாவின் சில செயற்பாடுகள் இலங்கையிலும் கடந்த காலங்களில் தாக்க விளைவுகளையும் எதிரொலி
களையும் ஏற்படுத்தி வந்துள்ளன.
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரமும் இதற்கு விதி விலக்கல்ல. இலங்கையின் இனப்பிரச்சினை
யின் தாக்கம் இந்திய அரசியல் வானில் கருமேகங்கள் கருக்கொள்வதற்கும் அடிப்படை
யாக அமைந்தது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக பலர் அகதிகளாக இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கும் துர்ப்பாக்கியமான நிலைகளும் கடந்த காலங்க ளில் மேலெழுந்துள்ளன. எனினும் இந்தியா இவர்களைக் கைவிடாது அரவணைத்தது.
இந்திரா காந்திக்கும் ஶ்ரீமாவோ பண்டார நாயக்கவுக்கும் இடையே இருந்த தனிப்பட்ட நட்புறவும் நல்லிணக்கமும் இந்திய இலங்கை உறவுகள் மேலும் இறுக்கமடைவதற்கு வழி சமைத்ததெனலாம். அரசு சார்ந்த பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டுக் கொள்கை யில் இருவரும் நம்பிக்கை கொண்டிருந்ததனால் இந்த உறவுகள் மேலும் இறுக்கமுற்ற தன்மை யையும் காணக்கூடியதாக இருந்தது. 1977 – 1979 காலப்பகுதியில் மொரார்ஜி தேசாயும், ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இந்திய இலங்கை உறவுகளில் நல்ல முன்னேற்றத்தினைக் காணமுடிந்தது. எனினும் சிங்கள, தமிழ் அதிருப்திச் சூழல் இலங்கையில் தலை தூக்கிய நிலையில் இது முற்றுமுழுதாக ஒரு உள்நாட்டு விடயம் என்பதிலும், இந்தியா அதிகம் அதிகமாக கவலைப் படுவதற்கு ஒன்றுமில்லை என்பதிலும் மொரார்ஜி தேசாய் தெளிவாக இருந்திருக்கின்றார். எனினும் தேசாய் இன்னொரு சந்தர்ப்பத்தில் இலங்கை இனப்பிரச்சினை குறித்து தான் இன்னும் கற்க வேண்டி இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இலங்கையின் நேசநாடு இந்தியா என் கிற வகையில் இலங்கையின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் அதிகரித்த பங்களிப்பினைச் செய்ய வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்குள்ளது. ’இலங்கையில் அடி விழுந்தால் இந்தியாவில் கண்ணீர் வழிகின்றது’ என்பது போன்ற கடந்தகால நிகழ்வுகளை நாம் உதாரணமாகக் கொள்கின்றபோது இருநாடுகளுக்கு இடையி லான நட்பின் ஆழத்தையும் எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. ஆனால் இலங்கை மக்கள் தொடர்பில் இந்தியா தனது வகிபா
கத்தை உணர்ந்து செயற்படுகின்றதா என்பது தொடர்பிலான விமர்சனங்களும் இல்லாம லில்லை.
ராஜீவ் காந்தியின் கொலைத்தழும்பு இந்திய தேசத்தின் தேகத்தில் இருந்தும் இன்னும் மறையவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாகவே, இலங்கை குறித்த இந்தியாவின் சில அணுகுமுறைகள் காணப்படுவதாகவும் சிலர் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். எவ்வாறெனினும் இந்தியா, இலங்கையின் நட்புறவைப் பேணும் வகையில் அவ்வப்போது ஆதரவுக்கரம் நீட்டி வருவதையும் நாம் நினைவு கூற வேண்டும்.
ஆளுமை படைத்த தலைவர்
கடந்த 2022 இல் இலங்கை மிகப்பெரிய பொரு ளாதார நெருக்கடியை சந்தித்தபோது 3. 8 பில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கி இருந்தது. மேலும் இலங்கை நாணய நிதியத்தை நாடி விரிவாக்கப்பட்ட நிதிவசதி ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கும் இந்தியாவே தோள் கொடுத்தது. சுனாமிப் பேரலை நிதியு தவி, வீடமைப்பு, கல்வி அபிவிருத்தி, சுகாதார மேம்பாடு என்று பல வகையிலும் இந்தியா வழங்கிய உதவிகளை புறந்தள்ளிவிட முடியாது. எனினும் இனவாதிகளின் கண்களுக்கு இவை
யெல்லாம் தெரிவதில்லை. இந்தியா இலங் கைக்கு எதிராக சதி செய்வதாகவே இவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர். இந்தியாவின் இலங்கைக்கான நேசக்கரம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் மேலும் நீண்டு கொண்டிருக்கிறது.
உலக அரங்கில் இந்தியாவை பல வழிகளிலும முன்னிறுத்தத் துடிக்கும் ஒரு முன் மாதிரியான தலைவராக மக்கள் மோடியை இனங்கண்டுள்ளனர். கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு உயர்ந்து சென்று இந்தியப் பிரதமர் என்ற உயரிய பதவியினை எட்டிப் பிடித்திருப்பவர் நரேந்திர மோடி. அரசியல்வாதிகளுக்கு உதாரண
மாக திகழும் இவர் அரசியல் சாணக்கியம் மிக்கவர். பேச்சாற்றல் மிக்கவர். சொல்வதை செயலில் காட்டக்கூடிய ஆளுமை படைத்த தலைவராக இவர் விளங்குகிறார். கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, சமூக நிலைமைகள் போன்ற பல துறைகளில் ஒரு மேம்பாட்டினைக் காணக்கூடியதாக மோடியின் ஆட்சிக்காலம் அமைந்திருக்கின்றது. நாடுகளுக்கு இடையிலான உறவினைப் பேணுவதிலும் அவர் கரிசனையுடன் செயற்படுகின்றார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 4 ம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந் தார். இந்த விஜயம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு விஜயமாக கருதப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் மோடி யின் வருகை முக்கியத்துவத்தை மேலும் அதிகப் படுத்தி இருக்கின்றது. 1987 க்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜய zமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த நிகழ்வு கடந்த 2015 ம் ஆண்டிலே இடம்பெற்றிருந்தது.
அப்போதும் இந்திய பிரதமராகவிருந்த நரேந்திர மோடி அவ்வாண்டு மார்ச் 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இதற்கு முன்னர் 2008 ம் ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தபோதும் அவர் அரச விஜயமாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதே வேளை 2017 ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது தடவையாக மோடி இலங்கை வந்திருந்தார். இந்நிலையில் மோடி மூன்றாவது தடவையாக தனது பதவிக் காலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 4 ம் திகதி இலங்கை வந்திருக்கின்றமை குறிப் பிடத்தக்கதாகும்.
தேனும் பாலும்மோடியின் விஜயத்தின் போது இலங்கைக் கும் இந்தியாவுக்கும் இடையில் 7 பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டுள்ளன. மோடி இங்கு தங்கியிருந்த காலப்பகுதியில் மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்குகொண்டதோடு, ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச தரப்பினரைச் சந்தித்து பேச்சு நடாத்தி இருந்தார். அதேபோன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மலையகக் கட்சிகளின் தலைவர்கள் உள் ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். இவற்றுள் இந்நாட்டின் இந்திய வம்சாவளி யினரான மலையக மக்கள் குறித்த கலந்து ரையாடல் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.
மலையக மக்கள் இந்நாட்டிற்கு வருகைதந்து 200 வருடங்கள் உருண்டோடி விட்டன. 19ம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து வருகைதந்த இம்மக்கள் பல்வேறு துன்ப துயரங்க ளையும் அனுபவித்த நிலையில் இன்னும் பல வலிகளையும் சுமந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை யாகும். இலங்கைக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்தின் பின்னர் நாடு பல்வேறு வழிகளிலும் அபிவிருத்தியடையப் போகின்றது. நாட்டு மக்களின் வாழ்வில் தேனும் பாலும் பெருகியோடப் போகின்றது என்றெல்லாம் கனவு காணப்பட்டது. எனினும் இதன் சாதக விளைவுகள் சாத்தியமாகவில்லை.
பின்காலனித்துவ வரலாறு என்பது காலனித்துவ வரலாற்றில் இருந்தும் விடுபட்ட, சிறப்புமிக்க ஒரு வரலாறாக காணப்பட வேண்டும். ஆனால் இலங்கையின் வரலாறோ இதனை மறுதலிப் பதாகவே உள்ளது. காலனித்துவ வரலாற்றில் இருந்தும் பின்காலனித்துவ வரலாறு மோச மாகிப்போன ஒரு நிலைமையையே இங்கு அவதா
னிக்க முடிந்தது. இந்த வகையில் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தும் வாழ்க்கை நிலைமைக ளில் குறிப்பிடத்தக்க வரலாற்றை காணாத ஒரு சமூகமாக மலையக சமூகத்தை எம்மால் அடையாளப்படுத்த முடியும். அரசியல்வாதிகளை அரசியலின் உச்சத்தில் ஏற்றிவைத்து இம்மக்கள் அழகுபார்த்தபோதும் அவர்களால் இம்மக்களுக்கு உரிய சேவைகள் கிடைக்க வில்லை.
இது ஒரு புறமிருக்க இந்தியாவில் இருந்து தமது வம்சாவளி மக்கள் சமூகத்தினரை இலங்கைக்கு அனுப்பி வைத்தவர்கள் என்ற ரீதியில் மலையக மக்களின் அபிவிருத்தியில் இந்தியாவும் காத்திரமான வகிபாகத்தை வெளிப்படுத்த வேண்டும். இலங்கை ஆட்சியாளர்க ளிடம் மலையக மக்களை ஒப்படைத்து விட்டு இந்தியா கை கழுவிவிட முடியாது. இதனடிப்படையில் வீடமைப்பு, கல்வி, போன்ற சில துறைகளில் இந்தியா மலையக மக்களின் நலன் கருதி உதவிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றபோதும் இந்த உதவி களை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதேவேளை உலகத் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தருகி ன்ற சந்தர்ப்பத்தில் மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து நிதர்சனமான வெளிப்பாடுகளை அவர்களிடம் முன்வைக்காது ஒப்பனையுடன் கூடிய முன்வைப்புக்களே அதிகமாக இடம்பெற்று வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக உண்மை நிலைமைகள் மூடி மறைக்கப்படுவதன் காரணமாக அம்மக்கள் குழுமத்தினருக்கு கிடைக்கக் கூடிய உதவிகள் கிடைக்காமல் போகின்றன.
மோடியின் மொரீசியஸ் விஜயம்
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற் காக 2013 இல் இளவரசர் சார்ள்ஸ் இலங்கை வந்திருந்தார். அவர் தனது விஜயத்தின் ஒரு கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் அமைந்து ள்ள லபுக்கலை தோட்டத்துக்கு வருகை தந்தார். இங்கு அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மலையக பெண்கள் கொழுந்து பறிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள் இயல்பான கொங்காணி மற்றும் கூடையுடன் காணப்படவில்லை. உடையிலும் அப்படித்தான். வர்ணச் சேலைகள் உடுத்தப்பட்டவர்களாக இப்பெண்கள் காணப்பட்டனர். கைவளையல் கள், பொட்டு, கழுத்தில் மாலைகள் என்று இப்பெண்கள் அலங்காரம் மிக்கவர்களாக தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தனர். மணப்பெண்கள் கொழுந்து பறிப்பது போன்ற தோற்றமே இங்கு காணப் பட்டது. இயல்பான நிலைமைகள் மூடி மறைக் கப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட மலையகம் சார்ல்ஸுக்கு காண்பிக்கப்பட்டது. இத்தகைய நிலைமைகள் மலையக மக்கள் இந்நாட்டில் சிறப்பாக வாழுகின்றனர் என்ற மாயையைத் சர்வதேசத்திற்கு தோற்றுவிப்பதாக அமையும். இத்தகைய மாயைகள் களைந்தெறியப்பட்டு உண்மை நிலைமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.
மோடி இம்முறை விஜயத்தின்போது மலையகத் தலைவர்களையும் சந்திந்துள்ள நிலையில் மலையகத் தலைவர்கள் இம்மக்க ளின் அபிவிருத்தி கருதி காத்திரமான விடயங் களை மோடியிடம் முன்வைத்துள்ளனர். கல்வி அபிவிருத்தி, சுகாதாரம், ஆசிரியர் பயிற்சி, மலையக இளைஞர், யுவதிகளுக்கான தொழிற் பயிற்சி, மலையக பல்கலைக்கழகம் போன்ற பல விடயங்கள் இதில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. அத்துடன் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான பிரஜாவுரிமையை வழங்குவதில் காணப்படுகின்ற தாமதமான நிலைமைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டும். அண்மையில் மொரிஷியஸ் நாட்டிற்கான விஜயத்தின் போது இந்த விடயத்தினை கருத்தில் கொண்ட பிரதமர் மோடி உரிய அந்தஸ்தை வழங்கும் நடவடிக்கைகளை விரைந்து மேற் கொண்ட நிலையில் அதையொத்த வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்தியா உயர்கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி மைப் பரிசில்களை வழங்கி வருகின்றது. இப்மைப் பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதேவேளை மலையக மக்களில் பலர் இன்னும் லயத்து வாழ்க்கையில் மூழ்கிப் போயுள்ள நிலையில் இதனால் இவர்கள் பல்வேறு தாக்க விளைவுகளையும் சந்தித்து வருகின்றனர். அண்மைய தரவு ஒன்றிற்கமைய மலையகத்தில் இரட்டை லயன் காம்பரா அலகுகள் 104556 காணப்படுகின்றன. ஒற்றை லயன் காம்பரா அலகுகள் 108825 அலகுகளும், குடிசைகள் தற்காலிக குடில்கள் 22410 அலகு களும், தற்காலிக வீடுகள் 35100 அலகுகளும் காணப்படுகின்றன. இன்னும் சிலர் வீட்டுவசதி எதுவுமின்றி ஏனைய குடும்பங்களுடன் நட்பு ரீதியாக இணைந்து வாழ்வதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்தியாவும் பிரித்தானியாவும்லயத்துக் கலாசாரத்தில் மலையக மக்கள் வாழ்வதால் அம்மக்களின் கல்வி, கலை, கலாசாரம், சுகாதாரம் போன்ற பல விடயங் களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சமகா லத்திலும் எதிர்காலத்திலும் பாரிய தாக்க விளைவுகளை ஏற்படுத்தவல்லதாகும். இந்நிலை யில் தனிவீட்டுக் கலாசாரத்தை துரிதமாக முன் னெடுக்க வேண்டியதன் அவசியம் மோடியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா ஏற்கெனவே ஆயிரக்கணக்கான வீடுகளை மலையக மக்களின் நலன் கருதி நிர்மாணித்து உதவியுள்ளது. எனினும் இது ‘யானைப்பசிக்கு சோளப்பொறியைப்’ போன்றதாகும். இந்தியா நிர்மாணித்த வீடுகள் எவ்விடத்திலும் போதுமானதாக இல்லை. எனவேதான் மலையக மக்களின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்தியா இன்னும் அதிகம் அதிகமாக மலையக மக்களுக் கான வீடுகளை நிர்மாணிக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப் படும் வீடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த தொழிற்சங்க ஆதரவாளர்களுக்கே வழங்கப்படுவதாக ஏற்கனவே குற்றச் சாட்டுக்கள் பலவும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் இனிவரும் காலங்களில் பயனாளிகள் தெரிவில் அரசியல் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு தேவையானவர்களுக்கே வீடுகள் வழங்கப்படுதல் வேண்டும். இதே வேளை இந்திய வம்சாவளி மக்களை தமிழ கத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைத்த வர்கள் என்ற ரீதியில் இம்மக்களின் வீடமைப்பு தொடர்பில் இந்தியாவுக்கு எவ்வளவு கடப் பாடு இருக்கின்றதோ அந்தளவு கடப்பாடு பிரித்தானியாவுக்கும் இருக்கின்றது. ஏனென்றால் இம்மக்களை தமிழகத்தில் இருந்து கூலிகளாக வரவழைத்தவர்கள். அவர்களேயாவர் என்பதே அதற்கான காரணமாகும். இப்பொறுப்பில் இருந்து பிரித்தானியா விலகிச் செல்ல முடியாது.